தி.மு.க., தலைமையிடம் இருந்து துவங்கட்டும் மாற்றம்!
தி.மு.க., தலைமையிடம் இருந்து துவங்கட்டும் மாற்றம்!
PUBLISHED ON : செப் 03, 2026 01:45 AM

எம்.கலைவாணி, அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கால மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளாத இனம் மண்ணில் நீடித்திருப்பதில்லை. மாற்றங்கள் நம்மில் இருந்து தொடங்கட்டும்' என்று அருமையான தத்துவத்தை உடன்பிறப்புகளுக்கு கூறி உள்ளார், தி.மு.க., தலைவர் ஸ்டாலின்.
தி.மு.க., ஒரு குடும்பக் கட்சி என்ற அவப்பெயர் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் நிலைத்துவிட்டது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், அவர்களுக்கு ஜால்ரா அடிப்போரும், அந்த ஜால்ராக்களின் வாரிசுகளும் தான் இன்றுவரை கட்சியில் பதவி சுகத்தை அனுபவித்து வருகின்றனர்.
இக்கூட்டத்திற்கு சேவகம் செய்வதற் காகவே பிறவி எடுத்ததுபோல், தொண்டர் கள் என்ற பெயரில், சல்லிக்காசுக்கு பிரயோஜனம் இல்லாமல், கட்சி பணி செய்து, தங்கள் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறது ஒரு ஏமாளிக் கூட்டம்!
இந்நிலையில், 'தி.மு.க.,வில் இனி, கட்சி நிர்வாகிகள் ஜனநாயக முறைப்படி தேர்தல் வாயிலாகத் தான் தேர்ந்தெடுக்கப்படுவர்' என்று தலைமை அறிவித்துள்ளது; இது வரவேற்கத்தக்கது.
கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகளான தலைவர், பொதுச்செயலர், இளைஞர் அணி, மகளிர் அணிச் செயலர்கள் உட்பட அனைவருமே தேர்தல் அடிப்படையில்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்; குறிப்பிட்ட கால இடைவெளியில் நிர்வாகிகள் மாறிக்கொண்டே இருக்கவேண்டும். அதுதான் உண்மையான ஜனநாயகம்!
பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யக்கூடிய சர்வதேச நிறுவனங்களில் கூட, கொஞ்ச காலம் தலைமைப் பதவியில் இருந்துவிட்டு, தகுதியுள்ள மற்றொருவருக்கு அப்பதவியை வழங்கிவிட்டு நிறுவனரே ஒதுங்கிவிடுவார்.
கூகுள் நிறுவனத்தை உருவாக்கிய லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இருவருமே இன்று தலைமைப் பதவியில் இல்லை. முதன்மை நிர்வாக அதிகாரியாக, தமிழரான சுந்தர் பிச்சை தான் அந்த இடத்தில் இருக்கிறார்.
அமேசான் கம்பெனியை நிறுவிய ஜெப் பெசோஸ், இன்று ஆண்டி ஜாஸ்ஸி என்பவரிடம் தலைமைப் பதவியை ஒப்படைத்து விட்டார். அதுபோல், பில்கேட்ஸ் மற்றும் பால் ஆலன் ஆகியோரால் நிறுவப்பட்ட மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் தலைமைப் பதவியில் இன்று இருப்பவர், சத்ய நாதெல்லா என்ற இந்தியர்!
கடந்த 1963-ல், தமிழக முதல்வராக இருந்த காமராஜர், 'காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதற்காக, மூத்த அமைச்சர்கள் பதவி விலகி கட்சிப் பணியாற்ற செல்ல வேண்டும்' என்று கூறி, கே.பிளான் என்ற திட்டத்தை அறிவித்தார்.
தன் திட்டத்திற்கு தானே முன்னுதாரண மாக இருக்க விரும்பி, பதவி விலகி பக்தவத்சலத்திடம் முதல்வர் பொறுப்பை ஒப்படைத்தார், காமராஜர்.
அவரை தொடர்ந்து ஐந்து மாநில முதல்வர்களும், ஆறு மத்திய அமைச்சர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
எனவே, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மாற்றம் ஒன்றுதான் வளர்ச்சிக்கான வழி என்பதை நம்புவதாக இருந்தால், தி.மு.க., என்ற மாபெரும் கட்சியை உங்கள் குடும்பத்தின் பிடியிலிருந்து வெளிக் கொண்டு வாருங்கள்; மாற்றம் உங்களிடமிருந்தே தொடங்கட்டும்!
ஆய்வுகள் தொடர வேண்டும்!
சி.ஷிவானி, செங்கோட்டை, தென்காசி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுப் பகுதிகளில், சட்டத்திற்கு உட்பட்டு இயங்கும் பட்டாசு தொழிற்சாலை மற்றும் விற்பனையகங்களில் திடீர் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. இதனால், பட்டாசு தொழில் பாதிக்கப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார், தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு.
கடந்த தி.மு.க., ஆட்சியில் பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்து களில் பலர் உயிரிழப்பதும், கண்துடைப்பிற்காக அதி காரிகள் ஆய்வு செய்வதும், பின், பல்வேறு குற்றச் சாட்டுகளை கூறி நட வடிக்கை எடுப்பதுபோல் நடிப்பதும் வாடிக்கையாக இருந்தது.
தமிழக வெற்றிக் கழக அரசோ, முந்தைய அரசுகளை போல் கண்துடைப்புக்காக நடவடிக்கை எடுக்காமல், இனி பட்டாசுஆலைகளில் விபத்துக்களோ, உயிரிழப்புகளோ நடக்க கூடாது என்பதற்காக, இதுபோன்று அதிரடி ஆய்வில் ஈடுபடுகிறது.
இதன் வாயிலாக, 177 ஆலைகளில் விதிமீறல் இருந்ததை கண்டுபிடித்துள்ளதுடன், சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
வரும் முன் காப்பது தான் அரசின் கடமை. அதைவிடுத்து, விபத்து ஏற்பட்டு, பலர் உயிரிழந்த பின், அது குறித்து சிந்திக்கக் கூடாது.
பட்டாசு தொழில் வாயிலாக கிடைக்கும் வருவாய் குறைந்தால், அதை வேறு வழிகளில் ஈட்ட முடியும். அதேநேரம், விலை மதிப்பற்ற மனித உயிர்கள் போனால், அதை எவ்வளவு பணம் கொடுத்தாலும் மீட்க முடியாது.
எனவே, அரசியல் வாதிகளின் விமர்சனங்களை புறம் தள்ளி, அதிகாரிகள் தங்கள் அதிரடி ஆய்வுகளை தொடர வேண்டும்!
நல்ல முடிவு எடுக்க வேண்டும்!
கி.பட்டாபி சீதாராமன், மேட்டுப்பாளையம், கோவை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 2010 ஆக., 23.,க்கு முன் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 'டெட்' எனும் ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்களிக்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவதாக கூறியுள்ளார், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன்.
இதனால், 3,28,701 ஆசிரியர்கள் பயனடைவர்; மகிழ்ச்சி தான்!
ஆனால், 2013க்கு பின் தகுதி தேர்வில் வெற்றி பெற்றும், பணி ஆணை பெறாமல் இருக்கும் ஆசிரியர்களின் நிலைமை என்ன?
கடந்த 15 ஆண்டுகளாக, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., ஆட்சியில், ஆட்சியாளர்களின் துாண்டுதலில், இன்று பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தகுதித் தேர்விற்கு பின், நியமனத் தேர்வு வைக்காமல் பணிமூப்பு அடிப்படையில் பணி வழங்குவதே சிறந்த வழி!
இல்லையென்றால், நீதிமன்றத்தில் தகுதித் தேர்வு மதிப்பெண் குறைக்கப்பட்டால், அதன் காரண மாக, மீண்டும் பல வழக்கு களை சந்திக்க நேரிடும்.
இதனால், பாதிக்கப்படுவது ஆசியர்களே!
தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினர் பலரும் கல்வித் தந்தையராக இருப்பதால், அவர்கள் தங்களுடைய வியாபாரத்தை மட்டுமே பார்த்தனர்; லட்சக்கணக்கான ஏழை மாணவர்களின் எதிர்காலம் குறித்தோ, அவர்களின் கல்வியின் தரம் குறித்தோ சிறிதும்சிந்திக்காமல் பல முடிவுகளை எடுத்தனர்.
ஆனால், தற்போது அமைந்திருக்கும், த.வெக., அரசில், பல அமைச்சர்கள் சாமானிய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்; அதனால், ஏழை மாணவர்களின் எதிர்காலம் மற்றும் ஆசிரியர்களின் நலனை கருத்தில் வைத்து, நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும்!
