தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/  பாதுகாப்பான தமிழகம் அமைய...

 பாதுகாப்பான தமிழகம் அமைய...

 பாதுகாப்பான தமிழகம் அமைய...


PUBLISHED ON : செப் 12, 2026 02:19 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 12, 2026 02:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முனைவர் சே.கணேஷ் சுப்பிரமணி, பெரியகுளம், தேனி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

'காவல் துறையில் கூடுதலாக, 29 ஆயிரத்து108 பணியிடங்கள் உருவாக்கப்படும்; இந்த ஆண்டில், 10 ஆயிரம் போலீசார் நியமிக்கப்படுவர். இதில், 5,000 பெண்கள் இடம்பெறுவர்' என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மக்கள் தொகை அதிகரிப்பு, நகரமயமாக்கல், போக்குவரத்து நெரிசல், இணையவழி குற்றங்கள் உள்ளிட்ட புதிய சவால்கள் காவல் துறையின் பணிச்சுமையை அதிகரித்துள்ளன. இதனால், காவல் துறைக்கு கூடுதல் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்.

அதேநேரம், பணியிடங்களை உருவாக்குவது மட்டும் போதாது; தேர்வு செய்யப்படும் காவலர்களுக்கு போதுமான அளவு பயிற்சி வழங்க வேண்டும்.

சட்ட அறிவு, பொதுமக்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்வது, அவசர நிலைகளை கையாள்வது, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது போன்ற பல்வேறு திறன்கள் அவர்களுக்கு அவசியம்.

ஏனெனில், பாரம்பரிய குற்றங்களை தடுப்பதோடு, இணையவழி மோசடிகள் போன்ற புதிய வகை குற்றங்களையும், போலீசார் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

எனவே, புதிதாக பணி நியமனம் செய்யப்படும் காவலர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிப்பது மிகவும் அவசியம்.

மேலும், மக்கள், காவல் துறையை அணுகுவதற்கு தயக்கம் இல்லாத சூழல் உருவாக வேண்டும். புகார்களை விரைவாகப் பதிவு செய்து, அவற்றுக்கு உரிய நடவடிக்கை எடுக்கும் போது, அவர்களின் நம்பிக்கையை காவல் துறையால் பெற முடியும்.

காவல் துறையின் பலம் என்பது வெறும் எண்ணிக்கையில் இல்லை; திறமையிலும், நேர்மையிலும், மக்களை அணுகும் முறையிலும் உள்ளது.

எனவே, கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்படும் இந்த முயற்சி, வெறும் ஆட்சேர்ப்புத் திட்டமாக இல்லாமல், திறமை மற்றும் மனிதநேயம் கொண்ட காவல் துறையை உருவாக்குவதாக இருக்க வேண்டும்.

பாதுகாப்பான தமிழகம் என்பது காவல் துறையின் பொறுப்பு மட்டுமல்ல; அரசும், பொதுமக்களும் இணைந்து உருவாக்க வேண்டிய சமூகப் பொறுப்பு!

தினமலர்' இதழுக்கு வாழ்த்துக்கள்!


கே.ரங்கராஜன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

'தினமலர்' நாளிதழின், 75வது ஆண்டு பவள விழாவை நேரில் கண்ட பாக்கியசாலி வாசகர் நான்.

ஆரம்பத்தில் மங்கள இசையாக நாதஸ்வரம் இசைக்கப்பட்டது. இதில் நாட்டை, ஹிந்தோளம், ரஞ்சனி ராகங்கள் மனதை நெருடினாலும், அடுத்ததாக, பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே பேசும் போது, 'தினமலர்' நாளிதழ் என் தாய் வீடு என்று கூறி, சிலாகித்து பேசியது நெகிழ்ச்சியாக இருந்தது.

அடுத்து, இணை ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தினமலர் நாளிதழின் வளர்ச்சி பாதையில், அது அடைந்த சிரமங்களை சொல்லி, தமிழகத்தில் ஆன்மிகம் மற்றும் தேசபக்தியை கேலி செய்யும் வகையில் திராவிட கட்சிகளின் சித்தாந்தங்களும், அதற்கு எதிரான, தினமலர் நாளிதழின் செயல்பாட்டையும் மேடையில் பகிரங்கமாக வெளிப்படுத்திய போது, 'புலிக்கு பிறந்தது பூனையாகுமா?' என்றே பெருமிதப்பட வைத்தார்.

அந்த துணிவுக்காகவே அவருக்கு ராயல் சல்யூட் வைக்கலாம்!

அரசு விளம்பரங்கள் கிடைக்காதபோதும், எந்த சமரசத்துக்கும் இடம் தராமல், இன்று முன்னணி பத்திரிகையாக தினமலர் நாளிதழ் திகழ்கிறது என்றால், தரத்திற்கான மதிப்பே தனி என்பதைத் தான், வாசகர்கள் பறைசாட்டியுள்ளனர்.

'தினமலர்' நாளிதழ் பல நுாற்றாண்டுகள் கடந்தும் தன் ஜனநாயக கடமையை ஆற்ற என் வாழ்த்துக்கள்!

வெறும் வாயை மென்றால் பிரதமராகி விட முடியுமா?


எஸ்.ஸ்ரீனிவாசன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

தமிழக அரசியல் களத்தில், அடுத்த பிரதமர் யார், காங்கிரஸ் - எம்.பி., ராகுலா தமிழக முதல்வர் விஜயா என்ற விவாதம், இரு கட்சி தொண்டர்களிடையே சூடுபரப்பி வருகிறது.

ஒரு நாட்டின் பிரதமர் பதவியை தீர்மானிப்பது வெறும் பிரசாரங்களோ, வாரிசு உரிமையோ அல்ல; மக்களின் நம்பிக்கையும், தலைவர்களின் நிர்வாக திறனுமே அந்த தகுதியை தீர்மானிக்கும்!

குஜராத் முதல்வராக மூன்று முறை திறம்படச் செயல்பட்ட அனுபவமே, பிரதமர் மோடியை தேசியத் தலைவராக உயர்த்தியுள்ளது. மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு இன்னமும் வலுவாகவே உள்ளது.

தமிழகத்திலோ, இரு திராவிடக் கட்சிகளின் ஊழல்களாலும், முறைகேடுகளாலும் சலிப்படைந்த மக்களுக்கு, நடிகர் விஜய் மாற்றத்திற்கான நம்பிக்கையாக தெரிந்ததால், அவருக்கு முத ல்வர் பொறுப்பை வழங்கியுள்ளனர்.

அவர் ஆட்சிப் பொறுப்பேற்று மிகக் குறைந்த நாட்களே ஆகியுள்ளன. அவரது ஆளுமையோ, நிர்வாகத் திறமையோ, அமைச்சரவையின் செயல்பாடோ முழுமையாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அதற்கு கால அவகாசம் தேவை.

அதனால் , ஊழலற்ற ஆட்சியைத் தருவதாகக் கூறி, அதிகாரத்திற்கு வந்துள்ள விஜய், முதலில் தமிழகத்தில் ஒரு சிறந்த ஆட்சியாளராகத் தன்னை நிரூபிக்க வேண்டும்.

மாநில அளவில் சிறந்த நிர்வாகத்தை வழங்கி, மக்கள் நம்பிக்கையைப் பெற்றால் மட்டுமே, காலப்போக்கில் தேசிய அளவிலான தலைமைப் பதவி அவரைத் தேடி வரும்.

அதேபோன்று, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல், வாரிசு அரசியல் பின்னணியே தனக்கு பிரதமர் பதவிக்கான தகுதியைத் தந்துவிடும் என்ற எண்ணத்தில் இயங்கி வருகிறார்.

தொடர்ந்து மூன்று முறை தோல்விகளைச் சந்தித்த பிறகும், தவறுகளிலிருந்து அவர் பாடம் கற்றதாகத் தெரியவில்லை.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறுவது, பின் அதற்காக நீதிமன்றத்தில் மன்னிப்பு கோருவது, வெளிநாடுகளுக்குச் சென்று நம் நாட்டின் பிம்பத்தை பலவீனப்படுத்தும் வகையில் பேசுவது போன்ற அவரது அணுகுமுறைகள், மக்கள் மத்தியில் அவர் மீதான நம்பிக்கையைக் குறைத்துள்ளன என்றால் மிகையில்லை.

தன் தவறுகளை தி ருத்தி, தொலைநோக்கு சிந்தனையுடன் அவரது செயல்பாடுகள் இருந்தால் மட்டுமே, அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

அதைவிடுத்து, வெறும் வாயை மென்றபடி இருந்தால், 'ஆசை இருக்க தாசில் செய்ய; அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க' என்ற பழமொழி போல் தான், ராகுலின் நிலைமை ஆகி விடும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us