PUBLISHED ON : மே 15, 2025 12:00 AM

பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி பேச்சு:
இட ஒதுக்கீடு, சமூக நீதி
குறித்து சட்டசபையில் அதிகம் பேசிய வரலாறு பா.ம.க.,வுக்கு உண்டு. பெரிய
சக்தியாக இருந்தோம். இன்று பா.ம.க.,வுக்கு அங்கீகாரம் இல்லை என்பது
வேதனையாக இருக்கிறது. கடந்த 2016ல் அன்புமணி முதல்வர் வேட்பாளராக
அறிவிக்கப்பட்டார். அந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு இல்லை. வரும் 2026
நமக்காக கனிந்துஉள்ளது. ஒற்றுமையாக உழைக்க வேண்டும். ஊர் கூடி தேர்
இழுத்தால் வெற்றி உறுதி.
இதன் வாயிலாக, '2016 மாதிரி, 2026ம்
ஆண்டும் அன்புமணியை முதல்வர் வேட்பாளரா அறிவிச்சுடாதீங்க... வெற்றி
கிட்டாது'ன்னு ராமதாசுக்கு நாசுக்கா அறிவுறுத்துறாரோ?
பா.ம.க., முன்னாள் எம்.பி., அருள்மொழி பேச்சு: காடுவெட்டி குருதான் வன்னியர் சங்கத்தின் வழிகாட்டி. அன்று ராமருக்கு அனுமர் இருந்தது போல், ராமதாசுக்கு காடுவெட்டி குருநாதன் இருந்தார். 1987ம் ஆண்டு ராமதாஸ் தலைமையில் நடந்த தொடர் சாலை மறியல் போராட்டத்தில், போலீசார் சுட்டபோது, தன் நெஞ்சைக் காட்டி, 'ராமதாஸ் வாழ்க' என சொல்லி, 21 பேர் மடிந்தனர். அவர்களை எல்லாம் நாம் மறந்துவிட முடியாது.
அந்த போராட்டத்தில் உயிர்நீத்த 21 பேரின் குடும்பத்தினர் யாராவது, பா.ம.க.,வில் இன்று முக்கியமான பதவிகள்ல இருக்காங்களா?
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: தி.மு.க., ஆட்சியில், 2023ம் ஆண்டைவிட, 2024ல் போக்சோ குற்றங்கள் 52 சதவீதம் அதிகரித்துள்ளன. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர், எந்தவித குற்ற உணர்வும் இன்றி உலாவுவது, தமிழக சட்டம் - ஒழுங்கின் சீரழிந்த நிலையைக் காட்டுகிறது. அதலபாதாளத்தில் வீழ்ந்திருக்கும் சட்டம் - ஒழுங்கை, இனியும் முதல்வர் ஸ்டாலின் சரி செய்வார் என எதிர்பார்ப்பது, சாய்ந்த மரத்தை புயலே அப்புறப்படுத்தும் என்று நம்புவது போல் ஆகும். எனவே, இதற்கு ஒரே தீர்வு, ஆட்சி மாற்றம் மட்டுமே.
'ஆட்சி மாற்றம்' என பொத்தாம் பொதுவா சொல்றாரே... 'பா.ஜ., தலைமையிலான கூட்டணியின் ஆட்சி மாற்றம்'னு அடிச்சு சொல்ல மாட்டேங்கிறாரே!
தமிழக காங்., பொதுச்செயலர் ரமேஷ்குமார் பேச்சு: சொந்த நாட்டிலேயே, பா.ஜ., ஆளும் மாநிலங்களுக்கு நிதியை அள்ளிக் கொடுப்பதும், பா.ஜ., ஆட்சி செய்யாத மாநிலங்களுக்கு கிள்ளிக் கொடுக்கக்கூட மனம் இன்றி, மாநில சுயாட்சியை சிதைக்கிறது பிரதமர் மோடி அரசு. புதிய கல்வி ஆண்டு துவங்க இருக்கும் சூழலில், தமிழகத்திற்கு கல்விக்கு வழங்க வேண்டிய 2,152 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவிப்பது எப்போது?
இந்த தொகையை கேட்பதை தி.மு.க., அரசே மறந்துடுச்சு... இவர் விடாப்பிடியா, 'எடுத்து' கொடுக்கிறாரே!