PUBLISHED ON : டிச 28, 2024 12:00 AM

ஆர்.சுப்பிரமணியன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகத்தின் கல்வி
வளர்ச்சிக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல், மத்திய அரசு தொடர்ந்து
புறக்கணித்து வருகிறது' என, தி.மு.க., செயற்குழுவில் தீர்மானம்
நிறைவேற்றியுள்ளனர்.
தமிழகம், 8.5 லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது.
'அரசு
வாங்கும் கடன் முழுதும் அன்றாட செலவுகளுக்கு பயன்படுகிறதே தவிர, உண்மையான
நோக்கத்துக்கு பயன்படுத்தப்படுவதில்லை' என, கணக்கு தணிக்கையில்
தெரிவிக்கப்பட்டு உள்ளதாக கூறுகிறார், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை.
என் வயது, 75; இதே கூவம் நதிக்கரையில் பிறந்து, வளர்ந்து, படித்து, உத்தியோகமும் பார்த்து, தற்போது ஓய்வெடுத்துக் கொண்டிருப்பவன்.
சென்னை
மாநகரிலுள்ள நீர்வழித்தடங்களை துார்வாரி முறைப்படுத்த, சென்னை மாநகராட்சி
சார்பில், ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்படுகிறது. அவ்வகையில், கடந்த 60
ஆண்டுகளில் பல லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது.
ஆனால்,
1967ல் மழை பெய்தபோது, சென்னை மாநகர தெருக்களிலும், சாலைகளிலும் எந்த
அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்று, மக்களை பாடாய்படுத்தியதோ, அதே மாதிரி
தான், 2024லிலும் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் திறம்பட கால்வாய்களை சீரமைத்து
இருந்தாலே, மழை வெள்ள பாதிப்பு இந்த அளவுக்கு மோசமாக இருந்து இருக்காது.
இதுவரை, நீர்வழித்தடங்களை செப்பனிட ஒதுக்கப்பட்ட, பல லட்சம் கோடி ரூபாயும் எங்கே சென்றன... எப்படி மாயமாய் மறைந்தன?
அவற்றை
சுவாஹா செய்து ஜீரணித்ததில், இரு கழகங்களுக்கும் சம பங்கு உண்டு. இந்த
லட்சணத்தில், 'கல்வி வளர்ச்சிக்கு நிதி வழங்காமல், மத்திய அரசு
புறக்கணிக்கிறது' என்று ஒரு தீர்மானம் வேறு.
'ஆண்டொன்று போனால்,
வயதொன்று கூடும்' என்று ஒரு பழைய பாடல் உண்டு. அதுபோல, கழகங்களின் ஆட்சி
தமிழகத்தில் இருக்கும் வரை, சென்னை பெருநகரில், ஆண்டொன்று போனால், மழை
வெள்ளம் கூடுமே தவிர குறையவே குறையாது.
மழை வெள்ள பாதிப்புகளை அனுபவித்தே ஆக வேண்டும் என்பது, சென்னை மக்களின் விதி; சாபக்கேடு!
திருமாவளவன் செய்யும் வேலைக்கு என்ன பெயர்?
ப.தட்ஷனா, தேனியில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மத்திய அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கரை அவமரியாதை செய்து விட்டார்' என்று தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம் செய்தனர், வி.சி., கட்சியினர்.
சில ஆண்டுகளுக்கு முன், கேரளாவைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்ட் கேசவ் சங்கர் பிள்ளை, நத்தை மீதுள்ள சட்ட புத்தகத்தில்அம்பேத்கர் அமர்ந்திருப்பது போலவும், அவரை பின்னால் நின்று, முன்னாள் பிரதமர் நேரு, சாட்டையை சுழற்றுவது போன்றும் ஒரு கார்ட்டூன் வரைந்திருந்தார்.
அக்கார்ட்டூன், என்.சி.இ. ஆர்.டி., பாடப் புத்தகத்தில் இடம் பெற்றிருந்ததே... அப்போது எங்கே போனது, வி.சி.,யின் அம்பேத்கர் பாசம்? காங்., ஆட்சியில் தானே இந்த அவமரியாதை நடந்தது... இதுபோன்று போராட்டம் நடத்தியதாக தெரியவில்லையே?
'அம்பேத்கரை பார்லிமென்டிற்குள் நுழைய விடக் கூடாது' என்று கங்கணம் கட்டி, எந்தக் கட்சி செயல்பட்டதோ, இன்று அக்கட்சியுடன் கைகோர்த்து, 'பா.ஜ., அம்பேத்கரை இழிவுபடுத்தி விட்டது' என்று கூப்பாடு போடுகிறீர்களே... வெட்கமாக இல்லையா?
காங்., கட்சியால் மறைக்கப்பட்ட அம்பேத்கரின் அரசியல் வரலாற்றை தேடி படித்து பாருங்கள்... அவர் பள்ளிப் பருவத்தில் அனுபவித்த அவமானங்களை காட்டிலும், பல மடங்கு அவமானங்களை, அவருக்கு பரிசாக கொடுத்தது யார், எவருடைய ஆட்சியில் என்பது தெரியும்!
'மத்தியிலும், மஹாராஷ்டிராவிலும் காங்., ஆட்சியில் இருந்தபோது, அம்பேத்கரின் பாரம்பரியத்தை உயிர்ப்பிக்க என்ன செய்தனர்?
'அம்பேத்கரின் ஒரு புத்தகம் கூட மறுபதிப்பு செய்யப்படவில்லை. மூடி மறைக்கப்பட்ட அவரது எழுத்துக்கள் எதுவும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. அம்பேத்கர் உயிருடன் இருந்தபோதும் சரி, மறைந்த பின்பும் சரி அவருக்கு மிகப் பெரிய அநீதியை செய்தது காங்.,'
- இப்படி சொன்னது பா.ஜ., கட்சியை சேர்ந்த தலைவர்கள் எவரும் இல்லை; அம்பேத்கரின்பேரன் பிரகாஷ் அம்பேத்கர் தான் கூறியுள்ளார்.
உண்மை இவ்வாறு இருக்க, 'பா.ஜ., அம்பேத்கரை போற்றுவது எல்லாம் எளிய மக்களை ஏய்க்கும் எத்து வேலைகள்' என்று கூறியுள்ளார் திருமாவளவன்.
பா.ஜ., செய்வது எத்து வேலை என்றால், அம்பேத்கரை சொந்தம் கொண்டாடிக் கொண்டே, அவரை அவமரியாதை செய்த கட்சியுடன் உறவாடும் திருமாவளவன் செய்வதற்கு பெயர் என்ன வேலை?
ஏன் இந்த முரண்பாடு?
சா.பா.குமார், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தவறு செய்த அதிகாரிகள், அனைத்து பலன்களையும் பெற்று, எளிதில் ஓய்வு பெற அரசு அனுமதிக்க கூடாது; இது போன்ற அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
எல்லாம் சரி... இதே நீதிமன்றத்தால் ஓர் ஆண்டிற்கும் மேல் சிறையில் அடைக்கப்பட்டு, பின், பிணையில் வந்துள்ளாரே ஒரு அமைச்சர்... அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு, நீதிமன்றத்தில் இருக்கும் போது, தமிழக அரசு, அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளதே... அது எப்படி?
சிறையில் இருந்தபோதும் அவர் பதவி பறி போகவில்லை; இப்போதும் பதவி மறுக்கப்படவில்லை. சம்பளத்துடன், பல விதமான சலுகைகளையும் அனுபவிக்கிறார். வரும் காலத்தில் அவர் தேர்தலில் ஜெயிக்கவே முடியாமல் போனாலும், அவருக்கு ஓய்வூதியமும், பயண சலுகைகளும் உண்டு.
ஊழல் செய்த ஒருவர்,அமைச்சராக இருக்கலாம். பதவி சுகத்தை அனுபவிக்கலாம்; மக்களின் வரிப்பணத்தை சம்பளமாக பெறலாம். ஆனால், ஊழல் செய்த ஒரு அரசு அதிகாரி ஓய்வு பெறும்போது, அவர் மீது கடினமான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்றால், சட்டத்தில், குற்றம் ஒன்றாக இருந்தாலும், தண்டனை என்பது ஆளாளுக்கு மாறுபடுமா?
இங்கே, ஒருவர் அரசு ஊழியர் என்றால், மற்றொருவர், மக்கள் பிரதிநிதி. இருவருமே மக்கள் வரிப்பணத்தில் இருந்து தான் சம்பளம் பெறுகின்றனர் எனும்போது, ஊழல் செய்தால், தண்டனையும் இருவருக்கும் சமமாகத் தானே இருக்க வேண்டும்?
அரசு ஊழியர்களுக்கும்- மக்கள் பிரதிநிதிகளுக்கும் தண்டனையில் ஏன் இந்த முரண்பாடு? நீதிபதிகள் விளக்குவரா?