PUBLISHED ON : ஏப் 17, 2025 12:00 AM

வ.ப.நாராயணன், செங்கல்பட்டில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: அநாகரிகமாகவும், கொச்சையாகவும் பேசுவதில் கை தேர்ந்தவர்கள் தி.மு.க.,வினர் என்பதை, வனத்துறை அமைச்சர் பொன்முடி நிரூபித்துக் காட்டியுள்ளார்.
தி.க.,வினரின் விழாவில், உலகின் மிகவும் தொன்மையான மதத்தை இழிவுபடுத்தி, சைவம் - வைணவத்தை விலைமாதருடன் ஒப்பிட்டு, கீழ்த்தரமாக பேசியுள்ளார். அதை, தி.மு.க., மற்றும் பெரியார் இயக்க பெண்களும் கேட்டு ரசித்து உள்ளனர்.
பொன்முடியை சொல்லி குற்றமில்லை. அவர் சார்ந்த கட்சி அது போன்றது. அவரது தலைவர் கருணாநிதி, சட்டசபையில் பெண் களைப் பற்றி ஆபாசமாக பேசியுள்ளார்.
'தலைவன் எவ்வழியோ தொண்டன் அவ்வழி' என்பது போல், தன் தலைவருக்கு சிறிதும் தான் சளைத்தவனல்ல என்பதை நிரூபித்துள்ளார், பொன்முடி.
இவ்வளவையும் கேட்டு, சைவ - வைணவ சமூகத்தினர் தி.மு.க.,விற்கு ஓட்டளிப்பர் என்றால், இவர்கள் பேசும் ஆபாசப் பேச்சுக்களை ஆமோதிப்பது போலாகி விடும்!
கனிமொழியைத் தவிர முதல்வர் உட்பட கூட்டணிக் கட்சியினர் எவரும் கண்டனம் தெரிவிக்காதது ஏன்?
தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும் என்று கூறிய முதல்வர், பொன்முடிக்கு கண்டனம் தெரிவிக்காமல் இருப்பது எதனால்?
கட்சிப் பதவியிலிருந்து பொன்முடியை நீக்கி, கண் துடைப்பு நாடகம் நடத்தி விட்டால் போதுமா? அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு எது தடையாக உள்ளது?
ஆக மொத்தம் 2026 தேர்தலில் தி.மு.க.,வை படுகுழியில் தள்ள பொன்முடி போன்றவர்கள், பள்ளம் தோண்டி விட்டனர் என்பதே உண்மை!
நேர்மைக்கு பரிசு காத்திருப்பு!
எஸ்.ஸ்ரீகுமார்,
கல்பாக்கத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில்
சட்டம் - ஒழுங்கு தொடர்பாக சட்டசபையில் பேசிய தமிழக முதல்வர்,
'தமிழகத்தில் பொது அமைதி நிலவுகிறது. பெரிதாக சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள்
ஏதுமின்றி, மக்கள் அமைதியாக இணக்கமாக வாழ்கின்றனர்; புகார்களின் மீது
உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என, பேசியுள்ளார்.
ஆனால்,
திருநெல்வேலி மாநகராட்சியில் நடந்த ஊழலை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த,
நகர்நல பெண் அதிகாரியை இடமாற்றம் செய்ததோடு மட்டுமல்ல; காத்திருப்போர்
பட்டியலிலும் வைத்திருப்பது, திராவிட மாடல் ஆட்சியின் அவலத்தை அல்லவா
வெளிச்சம் போட்டு காட்டுகிறது?
மாநகராட்சி நகர்நல அலுவலர் சரோஜா,
திருநெல்வேலி மாநகராட்சியில் பணிபுரிந்தபோது, ஒரே மாதத்தில், 55 லட்சம்
ரூபாய்க்கு பினாயில் வாங்கிய முறைகேட்டை கண்டுபிடித்ததற்காக, சிவகாசி
மாநகராட்சிக்கு மாற்றப்பட்டார்.
அங்கும் பல்வேறு விதிமீறல்களைக்
கண்டறிந்து, 'ராம் அண்டு கோ' என்ற ஒப்பந்த நிறுவனத்திற்கு, 37 லட்சம்
ரூபாய் அபராதம் விதிக்க நகராட்சி நிர்வாகத்திற்குப் பரிந்துரை
செய்துள்ளார்.
அந்த பரிந்துரை மீது அதிகாரிகள் நடவடிக்கை
எடுக்கவில்லை. நாளிதழ்களில் இது குறித்துச் செய்திகள் வெளியானதும் அந்த
நிறுவனத்திற்கு, 37 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப் பட்டுள்ளது.
இதனால்
கொதிப்படைந்த ஒப்பந்ததாரர்களும், ஆளுங்கட்சியினரும் பெண் அதிகாரியை
இடமாற்றம் செய்ய மேலிடத்தில் நெருக்கடி கொடுக்க, அவரை தென்காசி
நகராட்சிக்கு இடமாற்றம் செய்ய சுகாதாரத்துறைச் செயலர் உத்தரவிட்டார்.
தென்காசியில் நகர்நல அலுவலர் பணியிடம் இல்லாததால், சரோஜா காத்திருப்போர்
பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஒரு பெண், உயர் அதிகாரியாக வருவதே
சவாலாக உள்ள நிலையில், நேர்மையாக பணியாற்றியதற்காக, இடமாற்றம் என்ற பெயரில்
அலைக்கழித்து, காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதற்கு பெயர் தான்,
திராவிட மாடல் ஆட்சியா?
தனித்து வெல்வாரா விஜய்?
ப.ராஜேந்திரன்,
சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அ.தி.மு.க., -
-பா.ஜ., கூட்டணி வலுவாக அமைக்கப்பட்டு விட்டது. இது, தி.மு.க., மற்றும்
அதன் கூட்டணி கட்சியினருக்கு மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது
என்பதற்கு, கூட்டணி குறித்த அவர்களின் விமர்சனங்களே சாட்சி!
மற்றொரு வகையில் இதனால் நஷ்டமடைவது, நடிகர் விஜய்யின், த.வெ.க., கட்சி!
ஒருவேளை,
த.வெ.க., - அ.தி.மு.க., கூட்டணி அமைந்திருந்தால், த.வெ.க., கூடுதலான
ஓட்டுகளை பெற்று, தனக்கென ஓர் இடத்தை தமிழகத்தில் பிடித்திருக்க முடியும்.
ஆனால், எந்த ஒரு தேர்தலிலும் நிற்காமல், தன் ஓட்டு வங்கியை
நிரூபிக்காமலும், தன் கட்சியே பிரதானம்; மற்றவர்கள் வேண்டுமானால் தங்களது
கூட்டணியில் வரலாம் என்ற விஜயின் நிலைப்பாடு, அ.தி.மு.க.,வை மட்டுமல்ல...
சிறு கட்சிகளையும் அவரிடமிருந்து விலக்கி வைத்து விட்டது.
தி.மு.க.,
அரசின் செயல்பாடுகளில் வெறுப்படைந்து, ஒரு மாற்றத்திற்காக விஜய்க்கு
ஓட்டளிக்க நினைத்தவர்கள் கூட, அவரது அரசியல் நிலைப்பாடு கண்டு, அ.தி.மு.க.,
கூட்டணிக்கு ஓட்டளிப்பர் என்பது நிச்சயம்.
ஆரம்பகாலத்தில்
இருந்து தி.மு.க., ஹிந்து விரோத கட்சியாக இருந்தாலும், அந்த பிம்பம் மக்கள்
மத்தியில் ஆற்றிய மிகப்பெரிய எதிர்வினைக்கு, திருப்பரங்குன்றத்தில் சில
மணி நேரத்தில் குவிந்த மக்கள் கூட்டமே சாட்சி!
கூடவே, துணை முதல்வர்
உதயநிதி, ராஜா எம்.பி., அமைச்சர் பொன்முடி போன்றவர்களின் ஹிந்து மதம்
குறித்த அருவருக்கத்தக்க பேச்சு, ஹிந்துக்களை கொதிப்படைய வைத்துள்ளது.
இதில்,
விஜயின் அரசியல் செயல்பாடுகளும் பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
'நானும் அரசியலில் உள்ளேன்' என்பது போல், அவ்வப்போது அறிக்கை வெளியிடுவதன்
வாயிலாக தன் இருப்பைக் காட்டிக் கொள்வதுடன், அவரது அரசியல் பணி முடிந்து
விடுகிறது.
இத்தகைய போக்கினால், பா.ம.க., - தே.மு.தி.க., கட்சிகளும் அ.தி.மு.க., கூட்டணிக்கு வந்து விடும்.
ஹிந்துக்களுக்கு
எதிரான கட்சி என்ற பிம்பத்தை தி.மு.க., தனக்கு தானே ஏற்படுத்திக்
கொண்டாலும், ஜாக்டோ- - ஜியோ போன்ற அரசு ஊழியர்களின் சங்கங்கள், அரசுக்கு
எதிரான நிலைப்பாட்டில் உள்ளன என்பதே நிதர்சனமான உண்மை.
இவை எல்லாம்
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு சாதகமாகவே அமையும். அதேநேரம், தனியே
தேர்தலை சந்திக்க வேண்டிய நிலையில் இருக்கும் த.வெ.க., மிகப்பெரும் தோல்வி
அடையும்!
விஜயின் முதல்வர் கனவும், கானல் நீராகவே போய்விடும்!