தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ பழைய உருட்டு பலனளிக்காது!

 பழைய உருட்டு பலனளிக்காது!

 பழைய உருட்டு பலனளிக்காது!

3


PUBLISHED ON : ஜூலை 14, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 14, 2026 12:00 AM

3


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எஸ்.ராமசுப்பிரமணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன், சிவசங்கர் ஆகியோரை ஓட்டுகளால் வீழ்த்த முடியாமல், வழக்கால் வளைக்க, த.வெ.க., ஆடும் பரமபதமே, ஆள் துாக்கும், 'ஜாக்கி'களாக போலீசாரை மாற்றுவது. ஆனால், 'மிசா'வையே பார்த்த தி.மு.க.,வுக்கு, 'மீம்ஸ்' கட்சி எம்மாத்திரம்...' என்று அறிக்கை வெளியிட்டுள்ளார், தி.மு.க., செய்தி தொடர்புக்குழு துணை தலைவர் மருது அழகுராஜ்.

எமர்ஜென்சி காலத்தில், போலீசாரைக் கண்டதும் தி.மு.க.,வினர் எப்படி தலை தெறிக்க ஓடினர்; ஒளிந்து மறைந்து வாழ்ந்தனர் என்பதும், எந்தெந்த குற்றச் செயல்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பதும், இன்றைய தலைமுறையினருக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்; எங்களை போன்ற வயதானவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.

அதனால், என்னவோ சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றது போன்றும், வெள்ளையனிடம் அடிபட்டு வீரத் தழும்புகளை உடம்பில் தாங்கியது போன்றும், மருது அழகுராஜ், 'பிலிம்' காட்ட வேண்டாம்.

தொலைக்காட்சி, மொபைல் போன் இல்லாத காலக்கட்டத்தில், 'மிசா மிசா' என்று தி.மு.க.,வினர் உருட்டியது, 'போணி'யானது. இது, உள்ளங்கையில் உலகை பார்க்கும் காலம்; பழைய உருட்டுகள் பலனளிக்காது!

_____

வியாபாரத்தில் நியாயம் வேண்டாமா?


மரகதம் சிம்மன், சோழிங்கநல்லுார், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை மேற்கு அண்ணாநகரில், 'ஐ சாண்டி நேச்சரல்' என்ற ஐஸ்கிரீம் கடையில், 'விஸ்கி, பிராந்தி, வோட்கா, ரெட் ஒயின்' உட்பட எட்டு வகையான மதுபானங்களின் சுவையில் ஐஸ்கிரீம் விற்கப்படுகிறதாம்.

ஏற்கனவே, தமிழகம் போதையில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. பள்ளி மாணவ - மாணவியர் கூட போதைப் பழக்கத்திற்கு ஆட்பட்டு வருகின்றனர். இந்த லட்சணத்தில், சிறு குழந்தைகளையும் அதற்கு அடிமையாக்கும் வேலையில், இதுபோன்ற சில ஐஸ்கிரீம் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

வியாபாரத்திற்காக எதை செய்ய வேண்டும் என்ற வரைமுறை இல்லையா?

'ஐஸ்கிரீமில் ஆல்கஹால் கலக்கவில்லை; குழந்தைகளை கவர்வதற்காக மதுபான சுவையில் விற்பனை செய்கிறோம்' என்று கொஞ்சமும் குற்ற உணர்ச்சி இல்லாமல் கூறுகிறார், கடை உரிமையாளர்.

குழந்தைகளை கவர மதுபானங்கள் தான் கிடைத்ததா... அதுமட்டும் தான் அவர்களை கவருமா?

பூக்கள், காய், கனி என்று அவர்களை கவர எத்தனையோ பெயர்கள் இருக்கையில், அவற்றையெல்லாம் விட்டுவிட்டு, வக்கிர புத்தியுடன் மது வகைகளின் சுவையில் விற்கின்றனர் என்றால், 'எவர் வீட்டு பிள்ளைகள் எப்படி போனால் நமக்கென்ன... நம் வியாபாரம் நடக்க வேண்டும்; நன்றாக சம்பாதிக்க வேண்டும்' என்ற சுயநலம் தானே இதுபோன்ற செயல்களுக்கு காரணம்!

இன்று அந்த விஸ்கி சுவை ஐஸ்கிரீமை ருசிப்பர்; அதன் சுவை பிடித்துப் போனால், நாளை ஒரிஜினல் விஸ்கியை அருந்த நினைப்பர். அதன்பின், முழுநேரமாக குடிகாரர்களாக மாறி, 'டாஸ்மாக்' வாசலில் தெரு நாயைப் போல் விழுந்து கிடப்பர். இதுதானே நடக்கும்!

குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையோடு விளையாடுவதற்கு பெயர் தான் வியாபார யுக்தியா? வியாபாரம் என்றாலும், அதில் ஒரு தர்மம், நியாயம் வேண்டாமா?

உளவியல் ரீதியாக குழந்தைகளை மதுவுக்கு அடிமைப்படுத்தும் இதுபோன்ற கடைகளை அரசு தடை செய்ய வேண்டும். பெற்றோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது!

-------

இரட்டை குதிரையில் சவாரி செய்ய ஆசைப்படும் திருமா!


வி.எச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ' பா.ஜ.,வை தன் கொள்கை எதிரி என்கிறது, தமிழக வெற்றிக் கழகம். அதேபோன்று, தி.மு.க.,வும் பா.ஜ.,வை தொடர்ந்து எதிர்க்கிறது. அதனால், தி.மு.க., - த.வெ.க., இடையே மோதல் இருந்தாலும், இரு கட்சிகளும் பா.ஜ.,வை எதிர்க்க, தேசிய அளவில் ஓரணியில் இருக்க வேண்டும். தமிழக அரசியல்வாதிகளும், பத்திரிகையாளர்களும் என் தேசிய நோக்கை புரிந்து கொள்ள மறுக்கின்றனர்' என்று சலித்துக் கொள்கிறார், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.

தி.மு.க.,வுடன் உறவை முறித்துக் கொள்ள முடியாமலும், த.வெ.க.,வை விட்டு விலகவும் முடியாமலும் இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்து வருகிறார், திருமாவளவன்.

ஆளுங்கட்சியான த.வெ.க.,வும், எதிர்க்கட்சியான தி.மு.க.,வும் ஒரே அணியில் பயணப்பட வேண்டும் என்றால், விஜய் எதற்கு தனியாக ஓர் அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும்? தி.மு.க.,வுடன் இணைந்தே தன் அரசியல் பயணத்தை தொடர்ந்திருக்கலாமே... எதற்கு தன் அரசியல் எதிரி, தி.மு.க., என்று கூறி தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டும்?

தேசிய அரசியலில் விஜய் கால்பதிக்க நினைத்திருந்தால், த.வெ.க.,விற்கு கிடைத்த ஒரே ஒரு ராஜ்யசபா பதவியையும் காங்கிரஸ் கட்சிக்கு ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்?

தேசிய அரசியல் விஜயின் தற்போதைய இலக்கு அல்ல. தமிழக அரசியலில் நிலைத்து நிற்க வேண்டும்; சட்டசபையில், தனி மெஜாரிட்டியுடன் த.வெ.க., அரசு கோலோச்ச வேண்டும் என்பதே அவரது நோக்கம்!

எனவே, தி.மு.க., விற்கு உழைப்பை கொடுத்து விட்டு, அதற்கான பலனை த.வெ.க.,வில் அனுபவிக்கும் திருமாவளவன், போகாத ஊருக்கு வழி தேடுவதை விடுத்து, த.வெ.க.,விற்கு நம்பகமான தோழமை கட்சியாக இருந்தாலாவது, அவரது கட்சியினருக்கு வாரிய பதவிகள் கிடைக்கும்; உள்ளாட்சி தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிட்டு, கணிசமான வெற்றியை பெற்று கட்சியை வளர்க்கலாம்.

அதைவிடுத்து, கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பது போல், தி.மு.க.,வின் உறவும் வேண்டும்; த.வெ.க.,வில் ஆட்சியில் பங்கும் வேண்டும் என்று ஒரே நேரத்தில் இரட்டை குதிரையில் சவாரி செய்ய ஆசைப்படக் கூடாது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us