PUBLISHED ON : ஏப் 07, 2025 12:00 AM

ஆர்.கோவிந்தநேசன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக முதல்வர், காலை
எழுந்து, இரவு உறங்குவதற்குள் தினமும், ஒரு சிலை திறப்பு குறித்த அறிவிப்பை
வெளியிடுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார். பெரும்பாலும், அது கருணாநிதி
சிலையாக இருந்தாலும், சில சமயங்களில் வேறு சில பெயர்களும் அதில்
இடம்பெறும்.
மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சி மாநாட்டில்
பங்கேற்று பேசிய ஸ்டாலின், 'தன்னை ஒரு கம்யூனிஸ்டாகவே அடையாளப்படுத்திக்
கொண்டவர் கருணாநிதி. உலக மாமேதை கார்ல் மார்க்ஸ் உருவச்சிலை சென்னையில்
அமைக்கப்படும் என, சட்டசபையில் அறிவித்து, அதேவேகத்தில் மாநாட்டுக்கு
வந்துள்ள என் பெயர் ஸ்டாலின்' என்று பெருமைப்பட்டுக் கொண்டார்.
மாநிலத்தில்
எத்தனையோ பிரச்னைகள்... அவற்றை சரிசெய்வது குறித்தோ, மக்கள் பயமின்றி
வாழ சட்டம் - ஒழுங்கை சீர்செய்வது என எதைப்பற்றியும் சிந்திக்காமல்,
எப்போது பார்த்தாலும், 'சிலை வைப்போம், மணிமண்டபம் கட்டுவோம்' என்று
அறிவித்துக் கொண்டிருக்கிறார், முதல்வர்.
இதற்காகவா மக்கள் ஓட்டுப் போட்டு இவரை முதல்வர் பதவியில் அமர வைத்தனர்?
கார்ல்
மார்க்சின் உருவச்சிலையை சென்னையில் அமைத்து விட்டால், தமிழகத்தின்
பொருளாதாரம் உயர்ந்து விடுமா... ஏழ்மை அகன்று, வேலை வாய்ப்புத்தான் பெருகி
விடுமா?
சாராய விற்பனை குறைந்து, உயிர்பலிகள் தடுக்கப்படுமா அல்லது
கொலைகளும், கொள்ளைகளும், செயின் பறிப்புகளும், பாலியல் பலாத்காரங்களும்
தான் நிறுத்தப்பட்டு விடுமா?
இன்னும் அவுரங்கசீப், முகமது- பின்
-துக்ளக், ஜெனரல் டயர், ஆஷ் துரை போன்றவர்களின் உருவச்சிலைகளை எங்கே,
எப்போது முதல்வர் நிறுவப்போகிறார் என்ற அறிவிப்பையும் வெளியிட்டு விட்டால்,
தமிழக மக்கள் தங்கள் பிறவிப்பயனை அடைந்து விடுவர்!
காதில் பூ சுற்ற வேண்டாம்!
எம்.தேன்மொழி, கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கோவை மாநகராட்சியில், சொத்துவரி உயர்வால், மக்கள் அதிருப்தியில் இருப்பதைப் புரிந்துகொண்ட ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சிகள், சொத்துவரியைக் குறைக்க மனு கொடுத்துள்ளனர்.
அட அட... என்ன அக்கறை...
மாநகராட்சி ஊழியர்கள் தங்கள் விடுமுறை நாட்களில் கூட, வீடுவீடாகச் சென்று மக்களை விரட்டி விரட்டி, வெற்றிகரமாக வரி வசூலை நடத்தி முடித்தவுடன், சொத்து வரி உயர்வை குறைக்கவும், ரத்து, அபராதம் போன்ற கோரிக்கைகளையும் வைக்கின்றனர்.
மார்ச் மாதத்தோடு, 2024- - 25 நிதியாண்டு முடிவடைந்து விட்டது. வசூல் வேட்டையும் முடிந்தபின், மனு கொடுக்கும் நாடகம் எதற்கு?
வரி அதிகம் என்று ஆறு மாதமாக மக்கள் புலம்பியது இவர்களுக்கு கேட்கவில்லையா? இதில், 'ஹைலைட்' என்னவென்றால், 'பொதுமக்கள் சிரமத் திற்கு உள்ளாகியுள்ளனர். உயர்த்திய, 6 சதவீத வரியைக் குறைக்க பரிசீலனை செய்யவேண்டும்' என்று, மாவட்ட பொறுப்பு அமைச்சரிடம் மனு கொடுக்கப்போவதாக இப்போது கூறுகிறார், மேயர்.
மக்களை ஏமாளிகள் என்று நினைத்துக் கொண்டனரா?
இந்த நிதியாண்டுக்குரிய சொத்துவரி முதல் அனைத்து வரிவசூலையும் முடித்து, எந்த மண்டலத்தில் எவ்வளவு வசூல் என்பதையும் பட்டியல் போட்டுவிட்டு, இப்போது வரியைக் குறைக்க மனுகொடுக்கப் போவதாக போடும் நாடகம் எதற்கு?
கோடை வெயிலை விட, கோவை மாவட்ட மக்கள் கோபத்தில் இருப்பதை புரிந்துகொண்ட அமைச்சர்கள் நடத்தும் நாடகம் என்பதை தவிர வேறு என்ன!
கடந்த 2020ல், சூயஸ் என்ற தனியார் நிறுவனம் வாயிலாக, மாநகராட்சி முழுதும் தினமும் குடிநீர் வழங்கும் திட்டம் கொண்டு வந்தபோது, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த, தி.மு.க.,வின் இன்றைய மாநகர - மாவட்ட செயலர் தலைமையில், தி.மு.க.,வினர் போராட்டம் நடத்தினர். ஆனால், இன்றோ, சூயஸ் திட்டத்தை சூப்பர் திட்டம் என்று சிலாகிக்கின்றனர்.
கைமாற வேண்டியது, கனகச்சிதமாக மாறிவிட்டதோ!
அத்துடன், திருப்பூர், ஈரோடு போன்ற மாநகராட்சிகளிலும் சொத்து வரி உயர்வை குறைக்க தீர்மானம் போட்டிருப்பதும் கண்துடைப்பே!
இவர்களே சொத்துவரியை அதிகரிப்பராம்... பின், இவர்களே சொத்து வரியை குறைக்க மனு போடுவராம்... யார் காதில் பூசுற்றுகின்றனர்?
இந்த நிதியாண்டு முடிந்து விட்டது; செலுத்திய வரி, முதலை வாயில் போட்ட பொரியைப் போல் போய்விட்டது.
தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது; வரும் நிதியாண்டிலும் மக்களை நெருக்கடி செய்தால், தி.மு.க.,வின், 200 தொகுதிகள் கனவு, பகல் கனவாகவே போய்விடும்!
பேச அஞ்சுவது ஏன்?
-வி .எச்.கே.ஹரிஹரன், திண்டுக் கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஜனநாயகத்தின் அஸ்திவாரமே ஊராட்சி மன்றங்கள் தான்!
தமிழகத்தில், 12,524 ஊராட்சிகள் உள்ளன. ஆனால், சுகாதார பணிகளை கண்காணிக்க மக்கள் பிரதிநிதிகள் இல்லை.
கடந்த 2016 - 2019 வரை ஊராட்சி தேர்தல் நடைபெறாததால், ஊராட்சி தலைவர்கள் இல்லை. எழுத்தர்களின் ராஜ்ஜியம் தான்... வட்ட வளர்ச்சி அலுவலரை தேடி போனால், 'கலெக்டர் மீட்டிங்கில் இருக்கிறார், வட்டாட்சியரை பார்க்க போயுள்ளார்' என்றே பதில் கிடைக்கும்.
ஊராட்சிகள் தொடர்பான அதிகாரிகள், தங்கள் பணி நாட்களில், 90 சதவீதத்தை மேலதிகாரிகளை சந்திப்பதிலேயே கழிப்பர். ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் உறுப்பினர்கள் இருந்தால் தான், கிராமங்களில் மரம், மணல் கடத்தல் குறையும். 100 நாள் வேலை திட்டத்தை நேர்மையாக செயல்படுத்த முடியும்.
தற்போது, பல கிராமங்களை நகரங்களுடன் இணைக்கும் வேலை முனைப்பாக நடக்கிறது. இதை கிராம மக்கள் எதிர்க்கின்றனர். 'கிராம எல்லைகளை வரையறை செய்தபின், ஊராட்சி தேர்தல் நடக்கும்' என்று சப்பைக்கட்டு கட்டுகிறது, அரசு.
ஊராட்சி தேர்தலை நடத்திவிட்டு, ஊராட்சி உறுப்பினர்கள் ஆதரவுடன் எல்லைகளை மறுவரையறை செய்ய வேண்டியது தானே?
'லோக்சபா தொகுதி சீரமைப்பு முடிந்தபின், பார்லிமென்ட் தேர்தல் நடக்கும். அதுவரை, ஜனாதிபதி ஆட்சி' என்று மத்திய அரசு அறிவித்தால், திராவிட மாடல் முதல்வர் சம்மதிப்பாரா?
அடித்தட்டு மக்களும் ஜனநாயகத்தில் பங்களிக்க, ஊராட்சி தேர்தலை தாமதமின்றி நடத்தியே ஆக வேண்டும். இதுகுறித்து பேச, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் அஞ்சுவது ஏன் ? -