PUBLISHED ON : செப் 06, 2025 12:00 AM

வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகத்திலிருந்து இரண்டு ஆசிரியர்களே தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்திற்கான கல்வி நிதி இன்னும் விடுவிக்கப்படவில்லை. எனவே, தமிழக ஆசிரியர்களை மத்திய அரசு வஞ்சிக்கிறது' என்று, தி.மு.க.,வின் கண்டன அறிக்கை போல் கூறியுள்ளது, 'ஐபெட்டோ' என்ற ஆசிரியர்கள் சங்கம்.
நல்ல கல்வியை மட்டுமல்ல, தரமான மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்களை பாராட்டி, விருதுகள் அளித்து, கவுரவிக்க வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், அதற்கு தரமான, நல்ல ஆசிரியர்கள் தேவையான அளவில் கிட்ட வேண்டுமே!
அந்தக் காலத்தில் எஸ்.எஸ்.எல்.சி., படித்தவர்கள், அருமையாக தமிழ் - ஆங்கிலம் பேசுவர், எழுதுவர். எவ்வளவு பெரிய கூட்டல், பெருக்கல், கழித்தல், வகுத்தல் கணக்கு என்றாலும் மனதால் போட்டு, நொடியில் கூறிவிடுவர். காரணம், அக்காலத்து ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வும், கற்பித்தலில் மேலோங்கிய தரமும், ஒழுக்கம், கடமை உணர்வு என, மதிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டு இருந்தனர்.
இக்காலத்து பள்ளி மாணவர்களிடம் கற்றல், புரிதல், வாசிப்பு, பிழையில்லாமல் எழுதுதல் போன்ற திறன்கள் எந்த அளவிற்கு உள்ளன என்பது அனைவரும் அறிந்தது தான்!
நாங்கள் படிக்கும் காலத்தில் பாடங்களை முழுமையாக கற்று தேர்ச்சியானால் தான், அடுத்த வகுப்புக்கே போக முடியும்!
ஆனால் இப்போதோ படித்தாலும், படிக்காவிட்டாலும், பள்ளிக் கூடம் வந்தாலும், வராவிட்டாலும், 8ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ்!
காரணம், இடைநிற்றல் இருக்கக் கூடாதாம்!
உணவை அள்ளி உண்டால் தான் வயிறு நிறையும்; பார்த்ததுமே வயிறு நிரம்பி விடுமா? அதுபோன்று தான் உள்ளது இன்றைய கல்வி நிலை!
ஆசிரியர்கள் என்பவர்கள் பண்பட்ட சமூகத்திற்கான சிற்பிகள். அதை உணர்வு ரீதியாக உணர்ந்து, ஆசிரியர் பணியை ஒரு வேலையாக கருதாமல், நேரம் காலம் பாராமல், தன்னலமற்று சேவை செய்பவர்கள் தான், நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.
விருதுகளால் அவர்கள் பெருமை அடைவதில்லை; அவர்களை சேர்வதால் தான் விருதுக்கே பெருமை கிடைக்கிறது.
அத்தகைய விருதை, 'இந்தா வைத்துக் கொள்ளுங்கள்' என்று மாநிலத்துக்கு ஐம்பது விருதுகளை அள்ளியா கொடுக்க முடியும்?
திராவிட மாடல் அரசு, மத்திய அரசோடு மோதல் போக்கை கடைப்பிடித்து வருவதுடன், கல்வி தரத்தை மேம்படுத்த அவர்கள் கொண்டு வரும் திட்டங்களை ஏற்க மறுத்து முரண்டு பிடித்து வருகிறது. செயல்படுத்தாத திட்டங்களுக்கு எப்படி நிதி உதவிகள் கிட்டும்?
எனவே, ஆசிரியர் சங்கங்கள் தி.மு.க., உடன்பிறப்புகள் போன்று பேசாமல், ஆசிரியர்களாக சிந்தியுங்கள்!
மாநில பற்று எப்படி வரும்? பி.நரிமுருகன், பொள்ளாச்சி யில் இருந்து
அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த
ஆர்.வெங்கட்ராமன் என்ற தமிழரை துணை ஜனாதிபதியாக ஆக்குவதற்கு அன்றைய
முதல்வர் எம்.ஜி.ஆர்., அக்கறை எடுத்து செயல்படுத்தி காட்டினார். மேலும்,
ஜனாதிபதி தேர்த லில் வெங்கட்ராமன் முன்னி றுத்தப்பட்ட போது, அவரை தமிழர்
என்ற ஒரே காரணத்திற்காக ஆதரித்தார், எம்.ஜி.ஆர்.,
ஆனால், தமிழ்,
தமிழர் என்று உசுப்பேற்றி, அதன் வாயிலாக வாழ்வு பெற்ற கருணாநிதியோ,
எதிர்க்கட்சி வேட்பாளரான கேரளாவைச் சேர்ந்த வி.ஆர்.,கிருஷ்ணய்யர் என்பவரை
ஆதரித்தார்.
பிராமணர்களை தரக் குறைவாக விமர்சித்து வந்த கருணாநிதி, பெயரிலேயே ஜாதியை தாங்கியிருந்த கிருஷ்ணய்யரை ஆதரித்தார்.
வெங்கட்ராமனை ஆதரிக்காதது கூட அரசியல் சார்ந்த நிலைப்பாடு என்று
தள்ளிவிடலாம். ஆனால், எந்த அரசியல் கட்சியையும் சாராத அப்துல் கலாம்
ஜனாதிபதி தேர்தலில் நின்றபோது, 'சிறுபான்மை காவலர்' என்று சொல்லிக்
கொள்ளும் தி.மு.க., தலைவர் கருணாநிதி, அப்துல் கலாமுக்கு ஆதரவளிக்க
மறுத்ததுடன், கிண்டல் செய்தார்.
இதுதான் இவர்களது உண்மை முகம்... பிராமணர் களை வசைபாடுவர்; ஆனால், தங்களுக்கு தேவை என்றால், அவர்களை கட்டி அணைத்துக் கொள்வர்.
'உயிர் தமிழுக்கு; உடல் மண்ணுக்கு' என்று வீர வசனம் பேசுவர். ஆனால்,
தமிழர் ஓர் உயர்ந்த நிலைக்கு வருவதை தாங்கிக் கொள்ள மாட்டார்கள்.
இதோ... துணை ஜனாதிபதி தேர்தலில் ஒரு கொங்கு தமிழர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார்.
கருணாநிதியின் வாரிசு என்பதை நிரூபிக்கும் வகையில், வேற்று மாநிலத்தவரை ஆதரிக்கிறார், முதல்வர் ஸ்டாலின்.
தி.மு.க., - எம்.பி., கனிமொழியோ, 'ராதா கிருஷ்ணன் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் இருந்து வந்தவர்' என்று திருவாய் மலர்ந்துள்ளார்.
கடந்த 1999ல் பார்லி மென்ட் தேர்தலில் கோவை தொகுதியின் பா.ஜ., வேட்பாளராக
போட்டியிட்டவர், ராதாகிருஷ்ணன். அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர், கம்யூ.,
கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு.
அன்று ராதாகிருஷ்ணனை
ஆதரித்தது இதே தி.மு.க., அப்போது தெரியவில்லையா ராதாகிருஷ்ணன்
ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் இருந்து வந்தவர் என்பது?
இதுபோன்று தான், மூப்பனாருக்கு பிரதமர் வாய்ப்பு வந்தபோது, பொறாமையில் அதை தடுத்தவர், கருணாநிதி.
இப்படி, எப்போதெல்லாம் தமிழர்கள் உயர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டனரோ
அப்போதெல்லாம், அதை எதிர்த்து செயல்பட்டவர்கள் தி.மு.க.,வினர்.
இப்போது மட்டும் மாறவா போகின்றனர்?
ஆம்புலன்ஸ் அரசியல் வேண்டாமே! அ.அப்பர்சுந்தரம், மயிலாடுதுறையில் இருந்து
அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: விபத்தில் பாதிக்கப்பட்டோர், காயம்
அடைந்தோரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத் துச் செல்ல உதவும் ஆம்புலன்ஸ்
வாகனங்களை எக்காரணம் கொண்டும் தடுக்கக் கூடாது என்பது எழுதப்படாத விதி.
இது நம்நாட்டில் மட்டுமல்ல; உலகம் முழுதும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் மனிதநேய பண்புகளில் ஒன்று!
சமீபத்தில், தமிழகத்தில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு நடைபெற்ற கசப்பான
சம்பவங்களை தொடர்ந்து, 'ஆம்புலன்சை தடுத்தாலோ, தாக்கினாலோ கடும் நடவடிக்கை
எடுக்கப்படும்' என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதேசமயம், ஒரு
பொது நிகழ்ச்சி நடைபெறும் போது, தேவையின்றி ஆம்புலன்ஸ்கள் அடிக்கடி
குறுக்கும், நெடுக்குமாக உள்நோக்கத்துடனோ, திட்டமிட்டோ, துாண்டுதலின்
பேரிலோ சென்றால், அது குற்றம்.
அவர்களது உள்நோக்கம் உறுதி
செய்யப்பட்டால் ஆம்புலன்ஸ் நிறுவனத்திற்கும், ஓட்டுநருக்கும் தடை விதித்து,
விதிமீறல் நடவடிக்கைகளை இன்னும் கடுமையாக்க வேண்டும்.
மேலும்,
ஆம்புலன்ஸ் அரசியல் விளையாட்டுக்கான வாகனம் அல்ல; அது அவசரகால ஊர்தி என்பதை
உணர்ந்து அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்!
அதுசரி... அரசியல் செய்ய ஆம்புலன்ஸ் தான் கிடைத்ததா?