sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

திருமாவளவனால் தாங்க முடியவில்லை!

/

திருமாவளவனால் தாங்க முடியவில்லை!

திருமாவளவனால் தாங்க முடியவில்லை!

திருமாவளவனால் தாங்க முடியவில்லை!


PUBLISHED ON : ஜன 26, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜன 26, 2024 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

என்.வைகை வளவன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பாரதப் பிரதமர் மோடி, அயோத்தியில் நடத்தியது ஆன்மிக விழா அல்ல; அது அப்பட்டமான அரசியல் விழா' என்று கூறியுள்ளார், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.

'அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை, வரும் லோக்சபா தேர்தலில் ஜெயிக்க, தேர்தல் பரப்புரையாக பிரதமர் மோடி பயன்படுத்தி கொண்டிருக்கிறார்' என்றும் வியாக்கியானம் செய்திருக்கிறார்.

திருமண விழாவை அரசியல் மேடையாக மாற்றி, தங்களுக்கு பிடிக்காத அரசியல் தலைவர்களை வசைபாடி மகிழ்வோர், தி.மு.க. தலைவர்கள் என்பது ஊருக்கே வெளிச்சம்; அதெல்லாம் திருமாவளவன் கண்டுகொண்டது இல்லை.

நம் பிரதமர் மோடி, ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை சாதாரணமாக நடத்தி முடிக்கவில்லை... 11 நாட்கள் கடுமையாக விரதம் இருந்து, வெறும் இளநீரும், பாலும் மட்டும் பருகி, கோவில் திறப்பு விழாவை நடத்தி முடித்திருக்கிறார்.

அது மட்டுமல்ல... பஞ்சு மெத்தையில் உறங்காமல், வெறும் தரையில் துணி விரித்து, 'ஏசி' இல்லாமல், துாங்கி விரதத்தை முடித்திருக்கிறார். உலகமே வியந்து பாராட்டும் வகையில், அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவை நடத்தி, பேரும் புகழும் பெற்று விட்டதை திருமாவளவனால் தாங்கிக் கொள்ள இயலவில்லை.

அதன் வெளிப்பாடு தான் திருமாவளவனை இப்படி உளறிக்கொட்ட வைத்துள்ளது. ராமனுக்கு செருப்பு மாலை அணிவித்து அசிங்கப்படுத்திய, ஈ.வெ.ரா.வின் வாரிசுகளுடன் கூட்டணி வைத்திருக்கும் திருமாவளவனிடம் இருந்து, நாம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்!



மத நல்லிணக்கத்தோடு கூடி வாழ்வோம்!


அ. யாழினிபர்வதம், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கிட்டத்தட்ட 500 ஆண்டு கால போராட்டத்திற்குப் பின் கிடைத்த நீதியின் வெற்றியை கொண்டாடும் மகத்தான, ஆன்மிக திருவிழாவான அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம், கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.

இதை மாற்று மதத்தை சேர்ந்தோரும் வரவேற்று, சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளும் மதநல்லிணக்கம் சிலிர்ப்பூட்டுகிறது. அயோத்திக்கு நடைபயணமாக செல்லும் ஷப்னம் என்ற முஸ்லிம் பெண், 'ராமரை வணங்க ஹிந்துவாக இருக்க வேண்டியதில்லை; நல்ல மனிதனாக இருந்தால் போதும்' என கூறியது, எவ்வளவு பெரிய சந்தோஷம்.

'நாம் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்களாக இருந்தாலும், நம் மூதாதையர் ஒருவரே... அந்த வகையில் பகவான் ராமரும், எங்கள் மூதாதையர்களில் ஒருவர் தான்' என்று காஷ்மீர் முஸ்லிம்கள், 2 கிலோ குங்கும பூக்களை அயோத்தி ராமருக்கு அனுப்பி இருக்கின்றனர்.

அயோத்தி கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற, டில்லியில் முஸ்லிம் மதத் தலைவர்கள் பிரார்த்தனை செய்திருக்கின்றனர். பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதியை சேர்ந்த, தன்வீர் அகமது என்ற முஸ்லிம், அங்குள்ள சாரதா பீடத்திலிருந்து புனிதநீர் எடுத்து அயோத்திக்கு அனுப்பி இருக்கிறார்.

சமீபத்தில் கூட ஒரு தொலைக்காட்சி சேனலில் முஸ்லிம் பெண், ஹிந்து பக்தி பாடல்கள் தனக்கு பரவசம் தந்து மெய்சிலிர்க்க செய்வதாக சொல்லி இருக்கிறார்.

- இப்படி ஏராளமான விஷயங்களை சொல்லிய படியே போகலாம்.

ஆனால் அழைப்பிதழ் கிடைத்தும், 'இது பா.ஜ. - ஆர்.எஸ்.எஸ். நடத்தும் மதவாத நிகழ்ச்சி. பிரதமர் மோடிக்கான தேர்தல் பிரசாரம்' என்று, காழ்ப்புணர்ச் சியுடன், எதிர்க்கட்சிகள் அரசியல் செய்து, கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதையும் புறக்கணித்துள்ளன.

ஈ.வெ.ரா. மண் என்று சொல்லி, தமிழக அறநிலையத் துறையும், கோவில்களில் ராமர் பெயரில் அன்னதானம், பூஜைகள் செய்ய தடை விதித்து ஹிந்துக்களின் மனதை புண்படுத்தியது.

இதையெல்லாம் கூட்டிக் கழித்து பாருங்கள்... மதங்கள் கடந்து, சகோதரத்துவத்துடன் இணைந்து வாழவே மக்கள் விரும்புகின்றனர். அரசியல்வாதிகள் தான், ஓட்டு வங்கிக்காக மத துவேஷத்தை துாண்டி விடுகின்றனர்.

இவர்களை புறந்தள்ளி, மக்களாகிய நாம், மத நல்லிணக்கத்தோடு கூடி வாழ்வோம்; தேசபக்தியை கொண்டாடுவோம். ஜெய்ஹிந்த்!



வரலாற்றை மறந்த அ.தி.மு.க. 'மாஜி'க்கள்!


டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழ் திரையுலகம் சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணா நிதியின் நுாற்றாண்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த விழாவில் நடிகர் ரஜினி, 'கருணாநிதி சினிமாவிலேயே இருந்திருந்தால், இன்னும் பல எம்.ஜி.ஆர்.களை உருவாக்கி இருப்பார்.ஆனால், சினிமா உலகம் கொடுத்து வைக்கவில்லை; அவரை அரசியல் எடுத்துக் கொண்டது' என்று பேசியுள்ளார்.

கடந்த, 1972ல் முதல்வர் பதவியில் இருந்த கருணாநிதி, எம்.ஜி.ஆரை போலவே, தன் மகன் மு.க.முத்துவை உருவாக்க நினைத்தார். இதற்காக, பிள்ளையோ பிள்ளை என்ற படத்தை எடுத்து, அதில் மு.க.முத்துவை கதாநாயகனாக நடிக்க வைத்தார். எம்.ஜி.ஆர். போலவே அவரது நடை, உடை, 'மேக் அப்' என, எல்லாவற்றையும் மாற்றினார்.

அது மட்டுமல்ல... கவிஞர் வாலியை அழைத்து, 'எம்.ஜி.ஆருக்கு எழுதுவது போலவே, என் மகனுக்கும் பாடல் எழுத வேண்டும்' என்றார்.

அடுத்ததாக, மு.க.முத்து வையும், மஞ்சுளாவையும் வைத்து பூக்காரி திரைப்படத்தை கருணாநிதி தயாரித்தார். அப்போது தான் அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். துவங்கியிருந்தார்.

சென்னை, சிந்தாதிரிபேட்டை சித்ரா திரையரங்கில் அப்படத்தை, 100 நாட்கள் ஓட்ட கட்டாய உத்தரவு போடப்பட்டது. படம் பார்த்து விட்டு வெளியே வருவோர், 'படம் நல்லாவே இல்லை' என்றால், 'அவன் எம்.ஜி. ஆர். ஆளு; அடி, உதை' என்று தி.மு.க.வினர் அடிப்பர். இதற்காகவே மக்கள் பயந்து, 'படம் அருமை, நல்ல கதை' என்றனர்.

இப்படி தொடர்ந்து அணையா விளக்கு, சமையல்காரன், என ஏழு படங்களில் மு.க.முத்து நடித்தார்; ஆனால், எதுவுமே வெற்றி பெறவில்லை.

பணம், ஆட்சி, அதிகாரம், படைபலம் இவைகளை பயன்படுத்தி பல எம்.ஜி. ஆர்.களை அல்ல தன் மகனை கூட, எம்.ஜி.ஆர். போல கருணாநிதியால் உருவாக்க முடியவில்லை என்பதை ரஜினி தெரிந்து கொள்ள வேண்டும்.

எம்.ஜி.ஆருக்கு எதிராக உருவாக்கப்பட்ட அதே மு.க.முத்து, பின்னாளில் அ.தி.மு.க.வில் சேர்ந்து, தன் தந்தை கருணாநிதியை எதிர்க்க துணிந்தது தான் அரசியல் வரலாற்றின் முக்கிய திருப்பம்.

இந்த வரலாற்றைத் தான், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், ரஜினி பேச்சுக்கு பதிலடியாக எடுத்து காட்டியிருக்க வேண்டும். அதை விடுத்து, 'கருணாநிதியை எம்.ஜி.ஆர். தான் முதல்வராக்கினார்' என்று கூறியிருக்க கூடாது. ஏனெனில், 'எம்.ஜி.ஆர். தான் என்னை முதல்வராக்கினார்' என்பதை ஒரு கவிதையில் கருணாநிதியே ஒப்புக்கொண்டுள்ளார்.








      Dinamalar
      Follow us