தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/இது உங்கள் இடம்: நவ. 16

இது உங்கள் இடம்: நவ. 16

இது உங்கள் இடம்: நவ. 16


PUBLISHED ON : நவ 16, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 16, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தெரிந்து என்ன ஆகப்போகிறது?

எஸ்.ராம், சென்னையில்இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: ‘த.வெ.க., அரசில் புதிய தலைமை செயலகம் கட்டுவதாக அறிவித்தனர். கடும் எதிர்ப்பின் காரணமாக அது நிறுத்தப்பட்டுள்ளது. தலைமை செயலகம் எங்கே வரப்போகிறது என எதுவும் தெரியவில்லை’ என, முதலைக்கண்ணீர் வடித்திருக்கிறார், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா.

ஒன்றுபட்ட ஆந்திரா, 2014ல், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கு தேசம் என்று இரண்டாகப் பிரிந்தபோது, ஆந்திரப் பிரதேசத்தின் புதிய தலைநகரமான, அமராவதி நகர் திட்டத்திற்கான அடிக்கல்லை, பிரதமர் நரேந்திர மோடி, 2015 அக்டோபர் 22ம் தேதி, குண்டூர் மாவட்டத்தில் உள்ள உத்தண்டராயுனிபாலம் என்ற இடத்தில் அடிக்கல் நாட்டினார். அப்போது, முதல்வராக சந்திரபாபு நாயுடு இருந்தார்.

அந்த அமராவதி நகர் திட்டம் கட்டுமானத்தில் இருந்த போது, 2019ல் அங்கு நடந்த சட்டசபைத் தேர்தலில், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, மறைந்த ராஜ சேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி முதல் வராக பொறுப்பேற்றார்.

உடனே, அமராவதி நகர் திட்டத்தை நினைவுச் சின்னமாக மாற்றி, ‘அம்போ’வென விட்டு விட்டார். தற்போது, மீண்டும் சந்திரபாபு நாயுடுவே முதல்வராகி இருக்கிறார். கிடப்பில் போடப்பட்ட அமராவதி நகர், மீண்டும் உயிர் பெற்று எழுமா அல்லது ராசியில்லை என்று அப்படியே விட்டு விடுவாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

தமிழகத்தில் முதல்வராக இருந்த கருணாநிதி கட்டிய புதிய தலைமை செயலகத்தை, கிடப்பில் போடாமல், மருத்துவமனையாக மாற்றினார், கருணாநிதிக்குப் பின் ஆட்சி அமைத்த ஜெயலலிதா.

இப்போது, புதிய தலைமை செயலகம் கட்ட வேண்டும் என்று முதல்வர் விஜய் முயற்சி எடுத்து கொண்டிருக்க, அவரது ஒவ்வொரு முயற்சிக்கும் முட்டுக்கட்டை போடப்பட்டு வருகிறது.

முதல்வர் விஜயின் முயற்சி வெற்றி அடைந்தாலும், புதிய தலைமை செயலகம் கட்டி முடிக்க, எப்படியும் ஐந்து ஆண்டுகளாவது ஆகும். அடுத்த தேர்தலிலும் த.வெ.க., வெற்றி பெற்றால் மட்டுமே, அந்த புதிய தலைமை செயலகத்தில், சட்டசபை இயங்கும்.

தப்பித் தவறி, த.வெ.க., தோற்று மீண்டும் தி.மு.க.,வோ, அ.தி.மு.க.,வோ வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், முதல்வர் விஜயால் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தை முடக்கி, மருத்துவமனை ஆக்குவரோ, அருங்காட்சியகமாக மாற்றுவரோ... அந்த ஆண்டவனே அறிவான்!

எல்லாவற்றுக்கும் மேலாக, 2031 தமிழக சட்டசபைத் தேர்தலில், தே.மு.தி.க.,வின் பிரேமலதா, ‘டிபாசிட்’ வாங்குவாரா என்பதே சந்தேகம். நிலைமை இவ்வாறிருக்க, புதிய தலைமை செயலக கட்டிடம் குறித்த தகவலை, பிரேமலதா தெரிந்து என்ன ஆகப் போகிறது?



இப்படியும் செய்யலாமே அரசு!

ஜி.ராஜசேகரன், ஸ்டேட் பேங்க் மேலாளர் (ஓய்வு), சென்னையிலிருந்து அனுப் பிய, ‘இ – மெயில்’ கடிதம்: ஒவ்வொரு முறை அரசு மாறும்போதும், குடிசை மாற்று வாரியம் கட்டிய வீடுகள் தரமற்றதாக இருக்கின்றன என்று கூறி அவற்றை இடித்து, பல கோடி ரூபாய் செலவு செய்து புதிய வீடுகளை கட்டுகின்றனர்; அப்படி கட்டும் வீடுகளும் தரமற்றவையாக தான் உள்ளன; இனி கட்டப் போகும் வீடுகளும் தரமானதாக இருக்கும் என்பதற்கு, எந்த உத்தரவாதமும் கிடையாது.

அதே நேரம் இதற்கு ஒரு மாற்று வழி இருக்கிறது.

தற்போது, ஒரு கிரவுண்ட் – 2,400 சதுர அடி அல்லது இரண்டு கிரவுண்ட் – -4,800 சதுர அடி வீட்டு மனை உள்ளவர்கள் கூட, கட்டுமான நிறுவனங்களுடன், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு ஒப்பந்தம் போட்டு, ஒரு ரூபாய் கூட செலவில்லாமல், ஒன்று அல்லது இரண்டு வீடுகளை பெற்றுக் கொண்டு, மற்ற வீடுகளை விற்று விட சம்மதிக்கின்றனர்.

உரிமையாளருக்கும் எந்த செலவும் இல்லாமல் இலவசமாக வீடு கிடைக்கிறது; கட்டுமான நிறுவனத்திற்கும் லாபம் கிடைக்கிறது.

அரசிடமும் நிறைய இடம் இருக்கிறது. பெரிய கட்டுமான நிறுவனங்களுடன் ஒப்பந்தம் அமைத்து, முதல் நான்கு அல்லது ஐந்து மாடிகளில் அமையும் வீடுகளை அரசு வைத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு வீட்டின் சதுர அடி அளவையும், அரசே முடிவு செய்யலாம்.

மற்ற மாடிகளில் உள்ள வீடுகளை விற்று வரும் லாபத்தை, நிறுவனம் எடுத்துக் கொள்ளலாம். இடத்தின் அளவை வைத்துமாடிகளின் அளவை நிர்ணயம் செய்து கொள்ளலாம்.

இப்படி செய்தால், அரசுக்கு ஒரு ரூபாய் கூட செலவில்லாமல், பல வீடுகள் கிடைக்கும்; அவற்றை தகுதி உள்ள ஏழை மக்களுக்கு கொடுக்கலாம்!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us