தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/இது உங்கள் இடம்: நவ. 28

இது உங்கள் இடம்: நவ. 28

இது உங்கள் இடம்: நவ. 28


PUBLISHED ON : நவ 28, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 28, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அலட்சியம் காட்டுவது அரசுக்கு நல்லதல்ல!



அ.அப்பர்சுந்தரம், மயிலாடுதுறையில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: மயிலாடுதுறையில், காவிரி துலாக்கட்டத்தில், ‘துலா உத்சவ கடைமுக தீர்த்தவாரி’ எனப்படும் புனித நீராடும் நிகழ்ச்சி, ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே, காவிரியில் தண்ணீர் இல்லாமல் ஆறு வற்றி விடுவதும், கோரிக்கை வைத்த பின், தண்ணீர் திறக்கப்பட்டு, விழா நடந்தேறியும் வந்தது.

இந்த ஆண்டும் வழக்கம் போல் காவிரியில் தண்ணீர் இல்லாமல் போகவே, போர்வெல் நீரில் புனித நீராடும் அவல நிலை ஏற்பட்டது.

கடந்த 2002ல் இதுபோன்ற நிலை ஏற்பட்ட போது, அன்றைய மயிலாடுதுறை எம்.எல்.ஏ., ஜெகவீரபாண்டியன், துலா உத்சவத்தின் தொன்மையை, சிறப்புகளை, புனிதத்தை முதல்வர் ஜெயலலிதாவிடம் சட்டசபையில் எடுத்துரைத்தார். உடனே, அப்போதைய கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் பேசி, உத்சவத்திற்கான தண்ணீரை திறந்து விடச் செய்தார், ஜெயலலிதா.

ஆனால், தற்போது, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, துலா உத்சவத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தும், ‘நிச்சயம் தண்ணீர் திறக்கப்படும்’ என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டும் உரிய நேரத்தில் அதிகாரிகள், தண்ணீர் திறந்து விடவில்லை. இதனால், விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். நீர் இல்லாததால் போர்வெல் தண்ணீரில் சுவாமிகளுக்கு தீர்த்தம் கொடுக்கப்பட்டு, பக்தர்கள் நீராடி, மன வேதனையுடன் புலம்பி சென்றனர்.

பக்தர்களின் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் அலட்சியம் காட்டுவது அரசுக்கு நல்லதல்ல!

lll

காதைச் சுற்றி மூக்கை தொடுவது ஏன்?



சுக.மதிமாறன், நத்தம், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: ஒரு குடும்பத்திற்கு விவசாய நிலத்தில், ஒரு கிணறு இருக்கிறது என்றால், அக்குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் எந்தெந்த நாள் எவர் கிணற்று நீரை உபயோகிப்பது என்று தங்களுக்குள் பேசி முடிவெடுத்து செயல்படுவர். கிணற்றை பராமரித்து, நீரை பகிர்ந்து கொள்வதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், குடும்பத்தின் மூத்தவரான தந்தையிடம் முறையிட்டு, தீர்வு காண்பர்.

தந்தையின் தீர்ப்பு ஒரு தரப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தினால், காவல் நிலையத்தையோ, நீதிமன்றத்தையோ அணுகி தங்கள் தரப்பு வாதத்தை கூறி, நீதிமன்ற தீர்ப்பை பெற முயற்சிப்பர். இதுதான் உலக வழக்கம்!

ஆனால், கர்நாடகாவின் மேகதாது அணை பிரச்னையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அம்மாநில முதல்வர் சிவகுமார், ‘அணை கட்டியே தீர்வோம்’ என்கிறார். அதே காங்., கட்சியைச் சேர்ந்த தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர், ‘மேகதாது அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்’ என்று, தமிழகத்தில் இருந்து கூவிக் கொண்டு இருக்கிறார்.

உண்மையிலேயே, தமிழக மக்கள் மீது மாணிக்கம் தாகூருக்கு அக்கறை இருந்தால், தங்கள் கட்சி தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, ராகுல், சோனியா ஆகியோரிடம் கூறி, கர்நாடக முதல்வர் சிவகுமார் அணை கட்டுவதை தடுக்க சொல்லி அல்லவா கேட்க வேண்டும்?

அதைவிடுத்து, இப்பிரச்னையில் பிரதமரை ஏன் வம்புக்கு இழுக்க வேண்டும்?

கர்நாடகாவில் காங்., கட்சி ஆட்சியில் உள்ளது; தமிழகத்தில், அதன் கூட்டணி கட்சியான, த.வெ.க., ஆட்சியில் உள்ளது.

இப்படி இரு தரப்பும் கூட்டணி ஒப்பந்தத்தில் இருக்கும் போது, மாணிக்கம் தாகூர் நேரடியாக ராகுலிடம் சென்று முறையிடுவதை விடுத்து, ‘பிரதமர் இந்த விஷயத்தில் தலையிட வேண்டும்’ என்று காதை சுற்றி மூக்கை தொடுவது ஏன்?

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us