தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/இது உங்கள் இடம்: நவ. 29

இது உங்கள் இடம்: நவ. 29

இது உங்கள் இடம்: நவ. 29


PUBLISHED ON : நவ 29, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 29, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காக்கி சட்டைக்கு, கடவுள் நம்பிக்கை இருக்கக் கூடாதா?



கோ.பாண்டியன், செங்கல்பட்டில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த சத்தியமங்கலம் காவல் எல்லைக்குட்பட்ட ஆலம்பூண்டி கிராமத்தில், சிறுமி ஒருவர் காணாமல் போய், பல வாரங்கள் ஆகி விட்டன. உள்ளூர் போலீசார் முதல், சி.பி.சி.ஐ.டி., போலீசார் வரை சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

இந்நிலையில், தங்கள் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அடுத்தடுத்து, இதுபோன்று பல அசம்பாவிதங்கள் நிகழ்ந்து வருவதால், இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு, காவல் நிலையத்தில், கணபதி ஹோமம் நடத்தியுள்ளார்.

இது, சமூக வலைதளங்களில் பரவி, பொது வெளியில் சர்ச்சையை ஏற்படுத்தியதால், தற்போது, சுரேஷ் பாபுவை, விழுப்புரம் ஆயுதப்படைக்கு மாற்றி, சரக டி.ஐ.ஜி., உத்தரவிட்டுள்ளார்.

பொதுவாக, காவல் நிலையங்கள் என்றில்லாமல், அரசு அலுவலகங்களிலும் நல்லது நடக்க வேண்டி, கணபதி ஹோமம் நடத்துவது வழக்கம். சில அலுவலகங்களில் மதபாகுபாடு வந்துவிடக்கூடாது என்பதற்காக, மும்மத பிரார்த்தனைகளும் நடத்துவது உண்டு.

ஒரு காலத்தில், காவல் நிலையத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்காக, கழுதைகளை ஓட்டி வந்து, ‘லாக்கப்’ ரூமில் அடைத்து வைத்திருந்து, பின் திறந்துவிடுவர். அப்படியும் ஒரு காலம் இருந்தது.

இன்றுவரை அரசு அலுவலகங்களில் விஜயதசமி, ஆயுதபூஜை, பொங்கல் பண்டிகை கொண்டாடுவது வழக்கத்தில் உள்ளது. காவல் நிலையங்களில் ஆயுத பூஜையன்று துப்பாக்கி, கைவிலங்கு, ஆவணங்கள், வாகனங்களை வைத்து பூஜை செய்வர்.

புதிய காவல் நிலையங்களில், ஹோமம் செய்த பின்னர் தான், பணிகளையே துவக்குவர். இது, பல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் விஷயம்.

இவையெல்லாம் நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படுபவையே தவிர, வேறு ஒன்றும் இல்லை.

ஆனால், காவல் நிலையத்தில் ேஹாமம் நடத்தி, கடவுளிடம் வேண்டிக் கொண்டார் என்பதற்காக, இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபுவை, ஒரு முக்கியத்துவம் இல்லாத பணியிடத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது, இது கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் மனதை புண் படுத்தும் செயல்!

இனி, ஆயுத பூஜை கொண்டாடினால் கூட, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் உள்ளவர்களை, உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்வர் போலும்!

lll



‘பார்க்கிங்’ கட்டணத்தில் வேறுபாடு ஏன்?



எஸ்.ரவிசங்கர், சென்னையில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், மக்கள் எளிதாகப் பயணம் செய்யவும் சென்னையில் மாநகரப் பேருந்துகள் தவிர, மின்சார ரயில், மெட்ரோ, பறக்கும் ரயில் எனப் பல்வேறு பொதுப் போக்குவரத்து வசதிகள் உள்ளன.

இவற்றில், மெட்ரோ ரயில் சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதன் கட்டுமானச் செலவு, இயக்கச் செலவு, குளிரூட்டப்பட்ட பெட்டிகள் போன்றவற்றை கருத்தில் கொண்டால், அதன் பயணக் கட்டணம் நியாயமானதே!

அதேநேரம், ‘பார்க்கிங்’ கட்டணத்தை கேட்டால் தலை சுற்றுகிறது.

மெட்ரோ ரயிலில் பயணிக்க, என் இருசக்கர வாகனத்தை சென்னை வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் நிறுத்தச் சென்றேன். அங்கு மூன்று மணி நேரத்திற்கு, 40 ரூபாய் கட்டணம் என்றனர். ‘10 நிமிடம் அதிகரித்து விட்டால் எவ்வளவு செலுத்த வேண்டும்?’ என்று கேட்டேன். ‘மூன்று மணி நேரத்தை கடந்து, ஒரு நிமிடம் ஆனாலும், 80 ரூபாய் செலுத்த வேண்டும்’ என்றனர்.

வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்து, மெட்ரோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்திவிட்டு, மெட்ரோவில் அலுவலகத்திற்கு செல்வோர், மாலையில் தான் வாகனத்தை எடுப்பர். இதற்கு குறைந்தபட்சம், 8 முதல், 10 மணி நேரம், ‘பார்க்கிங்’ தேவைப்படும்.

தற்போதைய கட்டண முறையில், 10 மணி நேரத்திற்கே, 150 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

ஒரு பொதுப் போக்குவரத்து வசதியை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று அரசு விரும்பினால், அதற்கு, இதுபோன்று அதிகப்படியான கட்டணம் வசூலித்தால், மக்கள் எப்படி பொது சேவையை நாடுவர்?

பார்க்கிங் கட்டண தொகைக்கு, பெட்ரோல் போட்டு, சொகுசாக அலுவலகம் செல்ல மாட்டார்களா?

மேலும், ஒரு மெட்ரோ நிலையத்தில் ஒரு கட்டணம், மற்றொரு நிலையத்தில் வேறொரு கட்டணம் என்று இருப்பதாகவும் தெரிய வருகிறது.

ஒப்பந்ததாரர்கள் யார், எவ்வளவு தொகைக்கு ஏலம் எடுத்தனர் என்பது பொதுமக்களின் பிரச்னைஅல்ல. மெட்ரோ நிர்வாகம் தான் அனைத்து நிலையங்களுக்கும் பொருந்தக்கூடிய ஒரே மாதிரியான, நியாயமான கட்டணக் கொள்கையை உருவாக்க வேண்டும்! lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us