/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
பெண்கள் வேலைக்கு செல்ல காரணம் யார்?
/
பெண்கள் வேலைக்கு செல்ல காரணம் யார்?
PUBLISHED ON : மே 29, 2025 12:00 AM
கோ.பாண்டியன், செங்கல்பட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற, 'நிடி ஆயோக்' கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், 'வரும் 2030க்குள், 85 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும் என்பதே தமிழகத்தின் இலக்கு. இந்தியாவில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில், 41 சதவீதம் பேர் தமிழகத்தில் தான் உள்ளனர்' என்று பெருமையாக பேசியுள்ளார்.
ஆம்... இந்தியாவிலேயே அதிகமாக பெண்கள் வேலைக்கு செல்லும் மாநிலமாக தமிழகம் மாறித் தான் உள்ளது. ஆனால், அதன் காரணத்தையும் முதல்வர் சொல்லியிருக்கலாம்...
ஆந்திராவில் மது பழக்கத்தால் ஏற்படும் நோய்கள் அதிகரித்துள்ளதா என்பதை ஆய்வு செய்ய, மூன்று பேர் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்தார், முதல்வர் சந்திரபாபு நாயுடு.
அக்குழு அறிக்கையின்படி, ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி செய்த 2019- - 2024ல், கல்லீரல் நோய் மற்றும் நரம்பியல் பாதிப்புகள், 100 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார், ஆந்திர சுகாதார துறை சிறப்பு செயலர்.
ஆந்திராவில் மட்டுமல்ல; தமிழகத்திலும் மது பழக்கத்தால் கல்லீரல், நரம்பியல் மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். இவர்கள் குறித்து யார் கணக்கெடுப்பு நடத்துவர்?
இன்றைய நிலையில், தமிழகத்தில் சிறுவர்கள் கூட குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். இதனால் ஏற்படும் பாதிப்புகளால் மட்டுமே ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் உயிரிழக்கின்றனர்.
மது அருந்துவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும், 15 முதல் 20 சதவீதம் கூடிக் கொண்டே செல்வதால், உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, ஆண்களின் உழைக்கும் திறன் வெகுவாக குறைந்து விட்டது.
இச்சூழ்நிலையில் குடும்பத்தை காப்பாற்ற, பெண்கள் வேலைக்கு செல்வது காலத்தின் கட்டாயமாகிறது. இந்த உண்மையை மறைத்துவிட்டு, 41 சதவீத பெண்கள் வேலைக்கு செல்வதாக பெருமை பேசுகிறார் முதல்வர்.
திராவிட மாடல் ஆட்சி இனியும் தொடர்ந்தால், வேலைக்கு போகும் பெண்களின் எண்ணிக்கை, 100 சதவீதமானாலும் ஆச்சரியமில்லை. காரணம், ஆண்கள் குடித்துவிட்டு வீட்டிலும், குப்பை மேட்டிலும் கிடந்தால், பெண்கள் வேலைக்கு போய் தானே ஆக வேண்டும்?
'எருதுக்கு நோவு; காக்கைக்கு கொண்டாட்டம்' என்பது போல் உள்ளது, முதல்வரின் பெருமை!
தேர்தல் முடிவு சொல்லும்!
கு.அருண்,
கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: த.வெ.க., கட்சி தலைவர்
நடிகர் விஜய்க்கு செல்லும் இடமெல்லாம் இளைஞர்கள் கூட்டம் கூடுகிறது.
இந்த கூட்டம் ஓட்டுகளாக மாறினாலும், தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகளை விட அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி பெறுமா என்பது சந்தேகமே!
ஏனெனில்,
பழுத்த அனுபவம் உள்ள இரு திராவிடக் கட்சிகளின் பணபலம் மற்றும் கூட்டணி
பலத்துக்கு எதிராக, எந்தவொரு சிறு தேர்தலையும் சந்திக்காத விஜய், எப்படி
தன் கட்சியை கரை சேர்க்கப் போகிறார் என்பது தெரியவில்லை. அதேநேரம்,
தி.மு.க., - அ.தி.மு.க.,வை பிடிக்காதவர்கள், விஜய் கட்சிக்கு ஓட்டு
போடலாம்.
கடந்த 2006 சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., எப்படி
அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு, 8.38 சதவீத ஓட்டுகளை
பெற்று, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., பல இடங்களில் தோல்வி அடைய முக்கிய
காரணமாக இருந்ததோ, அதுபோன்று, 2026 தேர்தலில் த.வெ.க., வாங்கும் ஓட்டுகள்
நிச்சயம் இரு திராவிடக் கட்சிகளின் வெற்றிக்கு மிகப்பெரிய பின்னடைவை
ஏற்படுத்தும்.
இந்நிலையில், முதல் முறையாக விஜய், ஸ்டாலின் டில்லி
பயணம் குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு பதிலடியாக
அமைச்சர் சேகர் பாபு, 'நேற்று முளைத்த காளான்கள்' என்று விஜயை
சாடியுள்ளதும், அமைச்சர் துரைமுருகன், 'பச்சா இன் பாலிடிக்ஸ்' என்று
கூறியுள்ளதும், விஜயை மேலும் கோபம் அடைய செய்து இருக்கும்.
இனி, திரைப்பட பாணியில் தினமும் ஆளுங்கட்சிக்கு எதிராக விஜய் குரல் எழுப்பக்கூடும்.
விஜய் காளானா அல்லது பச்சாவா அல்லது மாணிக் பாட்ஷாவா என்பதை, 2026 சட்டசபைத் தேர்தல் முடிவுகள் கூறிவிடுமே!
மக்கள் நலனையும் கொஞ்சம் பாருங்கள்!
வ.ப.நாராயணன்,
செங்கல் பட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
--------------------------------------------------------டாஸ்மாக் ஊழல்
குறித்த அமலாக்கத் துறையின் சோதனைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது, உச்ச
நீதிமன்றம்.
இதன்வாயிலாக, முறைகேட்டில் ஈடுபட்டோர் ஆவணங்களை அழித்து, தங்களை உத்தமர்கள் என்று காட்டி விடுவர்.
தமிழகத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும், விற்பனை விலையை விட, பாட்டிலுக்கு, 10 ரூபாய் அதிகம் வாங்குகின்றனர்.
இதை மறுத்து அறிக்கை விடும் தி.மு.க., அரசு, என்ன ஆதாரம் என்று கேட்கிறது?
'குடி'மகன்கள்
கூறுவதே ஆதாரம் என்றால், அதை ஏற்க மறுக்கிறது. ஆதாரத்தை வைத்துக் கொண்டா
முறைகேடுகளில் ஈடுபடுவர் என்றெல்லாம் சிந்திப்பதில்லை.
டாஸ்மாக் கடைகளில் கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை ஊழல் நடைபெறுவது தெரிந்ததால் தானே, அமலாக்கத் துறை சோதனையில் இறங்கியது.
முறைகேடு நடக்கவில்லை என்றால், இதற்கு மூளையாக செயல்பட்ட முக்கியப் புள்ளிகள் மூவர், ஏன் வெளிநாடு தப்பிச்செல்ல வேண்டும்?
கூடுதலாக
வசூலிக்கும், 10 ரூபாய் எங்கே செல்கிறது, யார் யாருக்கு பங்கு
கொடுக்கப்படுகிறது என்பது போன்ற விபரங்களை நாட்டு மக்களுக்கு
சொல்லாவிட்டாலும், 10 ரூபாய் அதிகம் கொடுத்து வாங்கும், 'குடி'மகன்கள்
தெரிந்து கொள்ள வேண்டாமா?
அதற்கு உச்ச நீதிமன்றம் தடை போடுவது நியாயமா?
அமலாக்கத்
துறையின் நடவடிக்கை, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்றால்,
'குடி' மகன்களிடம் அடாவடியாக வசூல் செய்வது எந்த தத்துவத்தில் அடங்கும்?
டாஸ்மாக்
மேலாளரை அமலாக்கத் துறை விசாரிப்பது அதிகார துஷ்பிரயோகம் என்றால், 'குடி'
மகன்களின் பலவீனத்தை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகளை,
சாதாரண குப்பனும், சுப்பனுமா போய் விசாரிக்க முடியும்?
எல்லாவற்றையும் சட்டக்கண் கொண்டே பார்க்கும் நீதிமன்றங்கள், மக்கள் நலனையும் கொஞ்சம் எண்ணிப் பார்க்க வேண்டும்!