sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

கண்ணியம் எங்கே உள்ளது?

/

கண்ணியம் எங்கே உள்ளது?

கண்ணியம் எங்கே உள்ளது?

கண்ணியம் எங்கே உள்ளது?


PUBLISHED ON : அக் 25, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 25, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.ரங்கநாதன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாடு முழுதும் நீதிமன்றங்களில் சுகாதாரமற்ற கழிப்பறைகள் இருப்பதாக, அவற்றை துாய்மைப்படுத்தக் கோரி வழக்கறிஞர் ராஜிப் கலிதா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த நீதிமன்றம், சுத்தமான பொது கழிப்பறை இருப்பது மாநில அரசுகளின் கடமை என்றும், அந்த வசதி கிடைப்பதை அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும், ஜனவரி 15ல் உத்தரவிட்டது.

நீதிமன்ற வளாகங்களில் சுகாதாரமற்ற கழிப்பறைகள் இருப்பது, நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வழக்கு தொடுப்போர் மற்றும் பணியாளர்கள் என, அனைத்து தரப்பினரின் அடிப்படை உரிமைகள் மற்றும் கண்ணியத்தை மீறும் செயல். தலைநகரங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களில் கூட கழிப்பறைகள் மிக மோசமாக உள்ளன. மேலும், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவருக்கு தனி கழிப்பறை இல்லாதது, அவர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் கண்ணியத்தை புறக்கணிக்கும் செயலாக உள்ளது என்று நீதிமன்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் இந்த அறிக்கையை படிக்கும்போது, என்னவோ, நாட்டில் நீதிமன்றங்களில் உள்ள கழிப்பறைகள் மட்டும் தான் பயனாளிகளின் கண்ணியத்தை புறக்கணிப்பது போல் இருப்பதாகவும், ஏனைய இடங்களில் உள்ள கழிப்பறைகள், 100 சதவீதம் சுத்தமாக இருப்பது போலவும் உள்ளது.

உண்மையில் பல பள்ளிகளில் கழிப்பறையே இருப்பது இல்லை. அப்படியே இருந்தாலும், அவற்றிற்குள் கால்வைக்க முடியாத அளவுக்கு கண்றாவியாகத் தான் இருக்கின்றன.

பேருந்து நிலையங்கள், போலீஸ் ஸ்டேஷன்கள், சிறைச்சாலைகளில் உள்ள கழிப்பறைகளை, வழக்கு தொடர்ந்தவர் பார்த்ததில்லை போலும்!

புறநகர் ரயில்வே ஸ்டேஷன்களில் இருக்கும் கழிப்பறைகளுக்கு, 100 மீட்டர் துாரத்தில் இருந்தே, துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கும்.

சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலுள்ள கழிப்பறைகள், 'சுரானா' என்ற சமூக சேவை நிறுவனத்தின் கைங்கரியத்தால், உபயோகப்படுத்தும் படி, பேணப்படுகின்றன. மற்றபடி, சென்னை மாநகரிலுள்ள பெரும்பாலான பேருந்து நிலையங்களில் கழிப்பறைகளே கிடையாது. பயணியரும், பணியாளர்களும் வெட்ட வெளிகளில் தான் இயற்கை உபாதைகளை தீர்த்துக் கொள்கின்றனர்.

இந்நிலையில்,'நீதிமன்ற கழிப்பறைகள் சுகாதாரமாக இல்லாதது நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பணியாளர்களின் கண்ணியத்தை புறக்கணிக்கும் செயல்' என்ற நீதிமன்றத்தின் அறிக்கை, இவ்வளவு காலமாக அந்த அவமானத்தை சந்தித்து வரும் நாட்டு மக்களை அல்லவா ஏளனம் செய்வது போல் உள்ளது!

கண்ணியம் எல்லாம் நீதிமன்றத்திற்கு மட்டும் தானே... பொதுக்கழிப்பறைகளை உபயோகப்படுத்தும், குப்பனுக்கும், சுப்பனுக்கும் கண்ணியமாவது, கத்தரிக்காயாவது!



'அள்ளி விடுவதற்கு' அளவே இல்லையா? கே.எஸ்.தியாகராஜ் பாண்டியன், காரைக்குடியில் இருந்து எழுதுகிறார்: 'கப்சா' விடுவதில் தி.மு.க.,வை மிஞ்சி விட்டார், பீஹார் முன்னாள் முதல்வர் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ்.

பீஹாரில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், தன் தலைமையில் ஆன கூட்டணி வெற்றி பெற்றால், அனைத்து குடும்பங்களுக்கும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை நிச்சயம் என வாக்குறுதி கொடுத்துஉள்ளார்.

இது நடைமுறையில், 1 சதவீதம் கூட சாத்தியமாக வழியில்லை. பீஹார் மக்கள் தொகை, 13.4 கோடி; வாக்காளர் எண்ணிக்கையோ, 7 கோடியே 42 லட்சம். இக்கணக்கின்படி பார்த்தால், பீஹாரில் கிட்டத்தட்ட 2 கோடியே 50 லட்சம் குடும்பங்கள் உள்ளன.

இவர்கள் அனைவருக்கும் புதிய அரசுப் பணி யிடங்கள் உருவாக்க வேண் டும்; அதற்கு சட்டசபை மற்றும் மத்திய கணக்கு தணிக்கை குழுவின் ஒப்புதல் பெற வேண்டும். இது எல்லாம் முடிந்தாலும், இந்த, 2 கோடி, 50 லட்சம் பேருக்கு சம்பளம் போட வேண்டும்.

ஓர் அரசு ஊழியருக்கு ஆண்டு சம்பளம் சராசரியாக, 6 லட்சம் ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும், மொத்தம், 15 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும். ஆனால், பீஹார் ஆண்டு பட்ஜெட்டே, 3 லட்சத்து, 30,000 கோடி ரூபாய் தான்!

மேலும், கல்வி, மருத்துவம், சுகாதாரம், சாலை, மின்சார வசதி, உணவு, விவசாய மானியம், நடைமுறை நிர்வாக செலவுகள், மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு வாங்கிய கடனுக்கான வட்டி என்று எல்லாவற்றையும் சேர்த்தால், 20 லட்சம் கோடி ரூபாய்க்கு பட்ஜெட் வருகிறது.

ஆக, கொஞ்சம் கூட நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத திட்டத்தை சொல்லி இருக்கிறார், தேஜஸ்வி. இதை, பீஹார் மக்கள் எந்தளவு நம்பினர் என்பது, நவம்பர் 14ல் தெரிந்து விடும்!



சட்டம் இயற்றுமா அரசு? ரெத்தின. ஆத்மநாதன், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

காட்டிற்குள் வாழும் விலங்குகளை மனிதர்கள் தேடிச் சென்று வம்பிழுத்து, அபாயத்தைத் தேடிக் கொண்டால், அது மனிதர்களின் குற்றம். காட்டு விலங்குகள் அவற்றின் எல்லையை தாண்டி, நாட்டுக்குள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டி யதும் வனத்துறையினரின் பொறுப்பு!

ஆனால், நடப்பது என்ன?

காட்டையொட்டிய சாலைகளில் புலியும், யானையும் அடிக்கடி வலம் வந்து பயணம் செய்வோரைப் பயமுறுத்துவதும், யானைகள் லாரிகளை மறித்து, அதிலுள்ள பொருட்களை நாசப்படுத்துவதும், விளைநிலங்களை அழிப்பதுமென்று தினமும் செய்திகள் வெளியாகின்றன.

இதெல்லாம் போதாதென்று, காட்டு விலங்குகள் வீடுகளுக்குள்ளும் புகுந்து அட்டகாசம் செய்ய ஆரம்பித்து விட்டன. அடிக்கடி யானைகளால் கொல்லப்படுவோரின் எண்ணிக்கையும் கூடியபடி இருக்கிறது!

வனத்துறை என்ற துறை ஒன்றும், அதற்கென அமைச்சரும் இருந்தும் இவையெல்லாம் நிகழ்கின்றன என்றால், அவர்களின் செயல்பாட்டை நன்கு உணர முடிகிறது. இறந்தவர்களுக்கு நிவாரணம் அளித்து விட்டு அரசும் அடுத்த வேலையை பார்க்க சென்று விடுகிறது.

காயம் பட்டவர்களுக்கும், இறந்தோருக்கும் கொடுக்கப்படும் நிதி, உழைத்தவர்களின் வியர்வையிலிருந்து வந்த வருமானம் தானே!

இதற்கு தீர்வாக, 'வனத்துறையின் எந்தச் சரக எல்லையில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழ்கிறதோ, அந்தச் சரக மொத்தப் பணியாளர்களின் சம்பளத்திலிருந்து இந்த நிவாரணத் தொகைகளைப் பிடித்தம் செய்ய வேண்டும்' என, சட்டம் கொண்டு வர வேண்டும்.

அவ்வாறு கொண்டு வந்தால், ஊழியர்களும் தங்கள் பணியில் கவனத்துடன் இருப்பர்; உயிர் பலிகளும் குறையும்!

இதை செய்ய மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்!








      Dinamalar
      Follow us