/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
பா.ஜ.,வுக்கு கார்கே பிரசாரம் செய்வாரா?
/
பா.ஜ.,வுக்கு கார்கே பிரசாரம் செய்வாரா?
PUBLISHED ON : ஜூன் 04, 2025 12:00 AM

ரா.கதிர்வேலன், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'சுய விளம்பரம் செய்வதை பிரதமர் மோடி நிறுத்த வேண்டும்; தன்னை தவிர வேறு எவரும் எதுவும் செய்து விட முடியாது என நினைப்பதை விட்டு விட்டு, மக்களின் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும். முதலில் தேர்தல் பிரசாரத்தில் இருந்து அவர் வெளியே வர வேண்டும்' எனக் கூறியுள்ளார், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே!
பா.ஜ.,வுக்கு மோடி விளம்பரம் செய்யக் கூடாது என்றால், அதை கார்கே செய்யப் போகிறாரா என்ன!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைப் போல், எத்தனையோ சம்பவங்கள் காங்., ஆட்சியில் நடந்தன; மோடி போல் துணிந்து நடவடிக்கை எடுத்தது உண்டா?
'இந்தியாவே இந்திரா; இந்திராவே இந்தியா!' என்று ஒரு நாட்டையே நேரு குடும்பத்துக்கு பட்டா போட்டு கொடுத்தது போன்ற வாசகத்தை பட்டிதொட்டி எங்கும், இடைவிடாமல் ஒலிக்கச் செய்தது எந்த கட்சி என்பதை, கார்கே மறந்து விட்டாரா?
அப்படி விளம்பரம் செய்ய, காங்., கட்சிக்கு உரிமை உள்ளதென்றால், அந்த உரிமை பா.ஜ.,வுக்கும் உண்டு தானே!
நேருவுக்கு பின் இந்திரா, ராஜிவ், சோனியா, ராகுல், பிரியங்கா என்று காங்., கட்சி போல், மோடி சுய விளம்பரம் செய்து, தன் வாரிசுகளை பதவியில் அமர்த்தி அழகு பார்க்கப் போகிறாரா?
மக்களின் அடிப்படை பிரச்னை, தேவைகளை மோடி உணர்ந்ததால் தான், இன்று நம் நாட்டில் கழிப்பறை இல்லாத வீடுகளே இல்லை என்ற அளவிலும், பெண்கள் குடிநீருக்காக ஆற்றுக்கும், குளத்துக்கும், கிணற்றடிக்கும் நடையாய் நடப்பது நின்று, வீடுகளில் குழாய்களில் தண்ணீர் பிடிக்கின்றனர். சுத்தமான, பாதுகாப்பான கழிப்பறையில் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர்.
இந்தியாவை, 58 ஆண்டுகள் ஆண்ட காங்., கட்சி, நாட்டை எந்த நிலையில் வைத்திருந்தது என்று, கார்கே தன் நினைவு அடுக்குகளை கொஞ்சம் திருப்பிப் போட்டு பார்க்கட்டும்...
ஊழல் நிறைந்த ஆட்சியாக இருந்ததுடன், உலகின் பார்வையில், பிச்சைக்காரர்கள் மற்றும் பாம்பாட்டிகள் வாழும் நாடாகவும் அல்லவா காட்சிப்படுத்தியிருந்தது!
கடந்த 11 ஆண்டுகள் மோடி ஆட்சியில் நிகழ்ந்த மாயம்... உலகமே நம் நாட்டை உற்றுப் பார்க்கிறது; வியக்கிறது, மதிக்கிறது, போற்றுகிறது!
அத்துடன், காங்., ஆட்சியில், உலக அளவில், 10வது பெரிய பொருளாதார நாடாக இருந்த நாட்டை இன்று, நான்காவது பெரிய நாடாக உயர்த்தியது யார்?
கூந்தல் இருப்பவர் அள்ளியும் முடிப்பர்; அவிழ்த்தும் போடுவர்... அதைப் பார்த்து கார்கே பொறாமைப்பட்டால் எப்படி?
கவனமாக கையாள வேண்டும்!
எஸ்.கீதாஞ்சலி,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கிழக்கு பாகிஸ்தான்
மக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாகவும், அதன் வளர்ச்சி பணிகளை மேற்கு
பாகிஸ்தான் சரிவர செய்வதில்லை என்றும் கூறி, தனி நாடு வேண்டும் என்று
புரட்சி செய்தது, ேஷக் முஜிபுர் ரகுமானால் துவங்கப்பட்ட அவாமி லீக் கட்சி.
அப்புரட்சி
மாபெரும் போராட்டமாக வெடித்தது; இதில், ஏராளமான அப்பாவி மக்கள்
கொல்லப்பட்டனர். முஜிபுர் ரகுமான் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் கொண்டு
செல்லப்படவே, முக்தி வாஹினி படை உருவானது.
ஏராளமானோர் அகதிகளாக இந்தியா வந்தனர். நம் ராணுவத்தின் உதவியுடன் முக்தி வாஹினி படையினர், பாகிஸ்தான் ராணுவத்தினருடன் போரிட்டனர்.
நம்மிடம்
தோற்றுப் போன பாகிஸ்தான் இறுதியில் பணியவே, வங்கதேசம் தனிநாடாக உருவானது.
அப்படி நம்மால் உருவான நாடு, இன்று நம்மையே எதிர்த்து குரல் கொடுத்துக்
கொண்டிருக்கிறது.
அதேபோல், இன்று பாகிஸ்தானின் ஒரு பகுதியான
பலுசிஸ்தான் மாகாணம், தனிநாடு கோரி போராட்டம் நடத்தி வருகிறது.
பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற கிளர்ச்சிப் படை, பாகிஸ்தானுக்கு பெரும்
தலைவலியாக உள்ளது.
இந்நிலையில், நம் நாட்டின் உதவியை
எதிர்பார்க்கிறது, பலுசிஸ்தான். அவர்களுக்கு உதவுவதன் வாயிலாக, பாகிஸ்தான்
மேலும் இரண்டாக பிரிந்து, அந்நாட்டின் பலமும், வளமும் குறையலாம்.
அதேநேரம்,
நம்மால் உருவான வங்கதேசமும், நம்மால் காப்பாற்றப்பட்ட மாலத்தீவும் நன்றி
மறந்த நிலையில், பலுசிஸ்தானுக்கு உதவுதால், நமக்கு எந்த நன்மையும் ஏற்படப்
போவதில்லை.
ஏனெனில், பாகிஸ்தான் எத்தனை நாடாக பிரிந்தாலும், அவர்களின் மனநிலை நம் நாட்டிற்கு எதிரானதாகவே இருக்கும்.
எனவே, மத்திய அரசு மிக கவனமாக இதை கையாள வேண்டும்!
எதற்கு இத்தனை ' பில்-டப்?'
முனைவர்
வி.மீனாட்சி பட்டாபிராமன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் கூறியுள்ள கருத்து சர்ச்சையை
ஏற்படுத்திஉள்ளது.
தமிழில் இருந்துதான் கன்னடம் தோன்றியது என்று
அவர் கூறியதை, ஊதி பெரிதாக்கி கர்நாடக முதல்வர் முதல் பலரும் கண்டனம்
தெரிவித்துள்ளது வேடிக்கை!
தொ.பொ.மீனாட்சிசுந்தரம் மற்றும்
மு.வரதராஜன் போன்று கமல்ஹாசன் ஒன்றும் தமிழறிஞர் இல்லை. தன்னை சுற்றி
கொஞ்சம் படித்தவர்களை வைத்திருப்பதால், இவருக்கு சிறிது, 'ஞான சம்பந்தம்'
உண்டு; அவ்வளவுதான்!
மேலும், இவர் ஒரு குழப்பவாதி என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
'புரிந்தால் கண்ணதாசன்; புரியாவிட்டால் கமல்ஹாசன்' என்று தமிழில் சொலவடையே வந்துவிட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!
அவரது
பேச்சுத் திறமை இப்படி இருக்க, இந்த அரிதார மனிதர் சொன்ன கருத்துக்கு,
அவதார புருஷரே கருத்து சொன்னது போல் எதற்கு இத்தனை, 'பில்டப்?'
ஒரு
வகையில் பார்த்தால், தமிழ் உள்ளிட்ட அனைத்து திராவிட மொழிகளிலும் வடமொழி
கலப்பு நிறைந்தேஉள்ளது. ஆகையால், திராவிட மொழிகள் அனைத்தும் ஒருதாய் மக்கள்
தான்.
பேச்சுமொழியில் இருந்து இலக்கியங்கள் வரை வடமொழி சொற்கள்
கலந்தே உள்ளன. ஐம்பெரும் காப்பியங்களான சீவக சிந்தாமணி, மணிமேகலை,
குண்டலகேசி, வளையாபதி, சிலப்பதிகாரம் இவற்றின் பெயர்களே வடமொழி வார்த்தைகள்
தானே!
ஒரு கலைஞன் போகிற போக்கில் சொன்ன ஒரு கருத்துக்கு எதற்கு இத்தனை ஆர்ப்பாட்டம்?
துண்டு சீட்டு இல்லாமல் ஸ்டாலினாலும், குழப்பம் இல்லாமல் கமல்ஹாசனாலும் பேச முடியாது என்பது எழுதப்படாத விதி!
எது எப்படியோ, தமிழகத்தில் மக்களை குழப்பும் இவர், பார்லிமென்டில் சக எம்.பி.,க்களை குழப்பாமல் இருந்தால் சரி!