PUBLISHED ON : ஆக 30, 2025 12:00 AM

அ.குணா, கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை தோல்வியடையச் செய்தவர் அண்ணாதுரை. அவருக்கு நீண்ட அரசியல் அனுபவம் உண்டு. ஈ.வெ.ரா., வின் சீடனாக, தமிழகம் முழுதும் பயணித்து, மக்களை சந்தித்துள்ளார். அந்த அனுபவம் தந்த உந்துதலால் தான், ஈ.வெ.ரா.,விற்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதும், 1949ல் தி.மு.க.,வை துவக்க துாண்டியது.
இனம் மற்றும் மொழியின் பெயரால் தன் சாதுர்த்தியமான பேச்சாற்றலை பயன்படுத்தியதுடன், பல கட்சிகளுடன் கூட்டணி வைத்து தான், காங்., கட்சியை வீழத்தினார், அண்ணாதுரை.
அதே அரசியல் அனுபவம் தான், தி.மு.க.,விலிருந்து எம்.ஜி.ஆர்., விலக்கப்பட்ட போது, அவரை அ.தி.மு.க., என்ற கட்சியை துவக்க உந்தியது. பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்து, தி.மு.க.,வை வீழ்த்தி அரியணை ஏறினார், எம்.ஜி.ஆர்.,
அதன்பின், எத்தனையோ கட்சிகள் தோன்றினாலும், அவைகள் எல்லாம் மழைக்காலத்து காளான்களாக வந்த வேகத்தில் மறைந்தும் போயின. சில கட்சிகள் திராவிடக் கட்சிகளின் தோள்களில் தொற்றிக் கொண்டு, 1 முதல் 5 சதவீத ஓட்டுகளுடன் காலம் தள்ளுகின்றன.
இக்கட்சிகள் தனித்து நின்றால் டிபாசிட் கூட பெற முடியாது.
கடந்த 2006ல் நடிகர் விஜயகாந்த் தனித்துப் போட்டியிட்டு, 8 சதவீத ஓட்டுகளை பெற்றது தான், மூன்றாவதாக ஒரு கட்சி பெற்ற அதிக ஓட்டுகள்.
அதன் பின், 2010ல் கட்சி ஆரம்பித்த சீமான், கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் அபிமானத்தை பெற்று, 2024 பார்லிமென்ட் தேர்தலில், 8 சதவீத ஓட்டுகளை பெற்றார்.
இப்போது தமிழக வெற்றிக் கழகத்தை துவக்கி, தன் இரண்டாவது மாநாட்டை நடத்தியுள்ள நடிகர் விஜய், 'த.வெ.க., - -தி.மு.க., இடையே தான் போட்டி' என்று கூறி, 'நானே முதல்வர் வேட்பாளர்; கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் உண்டு' என்றும் கூறியுள்ளார்.
இவரது வலையில் எந்த மீனும் விழப்போவதில்லை.
ஏனெனில், இக்கட்சிகளுக்கு தேர்தல் செலவுக்கு பல கோடிகளை கொடுத்து உதவி வரும் தி.மு.க.,வை விட்டு அவர்கள் வெளியேற மாட்டார்கள். அது போன்று, அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.,வின் கூட்டணி கட்சிகளும் வர மாட்டார்கள்.
போட்டியில் பலத்தை நிரூபித்தவர்களின் பின் தான் அணி சேர்வார்களே தவிர, போட்டியிலேயே பங்கேற்காத ஒருவரை நம்பி சேர இங்குள்ள அரசியல்வாதிகள் முட்டாள்கள் இல்லை!
அதனால், என்ன தான் விஜய் கூவிக் கூவி அழைத்தாலும் எவரும் கூட்டணிக்கு வரமாட்டார்கள்.
தற்போது அவருக்கு கூடும் கூட்டம் எல்லாம் ஒரு நடிகருக்காக கூடுவது. அது ஓட்டாகவே மாறினாலும், அது விஜயகாந்த் பெற்ற, 8 சதவீத ஓட்டுகளை பெற்றாலே அதிகம் தான்.
ஏனெனில், இரு திராவிடக் கட்சிகளும் ஒவ்வொரு தொகுதியிலும் பல கோடிகளை வாரி இறைத்து, ஓட்டுகளை வாங்க இப்போதே வியூகம் அமைத்து விட்டன. ஒரு தேர்தலை கூட சந்திக்காத த.வெ.க., அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட இரு திராவிடக் கட்சிகளை தோல்வி அடையச் செய்து, ஆட்சியில் அமர நினைப்பது கானல் நீர் கனவே!
தி.மு.க., செய்வது பாயசமா? எஸ்.ராதிகா, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்: 'மத்திய அரசு, அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்க
முயல்கிறது; அதானிக்கும், அம்பானிக்கும் நாட்டை விற்க பார்க்கிறது' என்று
சதாசர்வ காலமும் கூச்சல் போடும் காங்., - கம்யூ., - வி.சி., போன்ற
கட்சிகளுக்கு, தங்கள் கூட்டணி கட்சியான தி.மு.க., தன் சுயலாபத்திற்காக
தனியார் மயத்தை கையில் எடுத்தால், இவர்களது சமூக நீதி காற்றில் பறந்து
விடும் மாயம் என்ன?
கடந்த சட்டசபை தேர்தலின் போது, 'தற்காலிக
துப்புரவு பணியாளர்களை நிரந்தரமாக்குவோம்' என்று வாக்குறுதி கொடுத்த
தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், துப்புரவு தொழிலை தனியார் மயமாக்கி, அவர்கள்
அடிமடியில் கை வைக்கிறது.
தி.மு.க., சொல்லுவதென்ன?
தனியார் மயமாகும் போது தற்காலிக ஊழியர்கள் அனைவரும் வேலையில் சேர்த்துக்
கொள்ளப்படுவர். மேலும், அவர்களுக்கு பி.எப்., - இ.எஸ்.ஐ., போன்ற பயன்கள்
கிடைக்கும் என்கிறது.
ஆனால், தனியாரிடம் வேலை பாதுகாப்பு இல்லை. அவர்கள் நினைத்தால், எப்போது வேண்டுமானாலும் ஒருவரை வேலையில் இருந்து நீக்க முடியும்.
ஊழியர்களின் பணி பாதுகாப்பிற்கு அரசு என்ன உத்தரவாதம் அளிக்க முடியும்?
சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் கமிஷன் வாங்குவதோடு திராவிட மாடல் அரசின் வேலை முடிந்து விடும்.
அதன்பின், தொழிலாளர்களின் குடுமி அல்லவா சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் மாட்டிக் கொண்டிருக்கும்!
துப்புரவு தொழிலாளர்களின் போராட்டம் குறித்து, தி.மு.க., அமைச்சர்களும்,
சென்னை மேயரும் பேசிய அலட்சியமான பேச்சுகள், ஆட்சியில் இருக்கும் ஆணவத்தையே
காட்டியது.
தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்க வேண்டும் என்ற
பாசிச எண்ணத்துடன், துாய்மை பணியாளர்களை இரவோடு இரவாக அப்புறப்படுத்தி,
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த தி.மு.க.,வின் இத்தகைய செயலுக்கு பெயர்
என்ன?
பாயசமா?
நிறைகுடம் தளும்பாது! குரு
பங்கஜி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
------------------உதவி மருத்துவ அலுவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட இளம்
பெண் ஒருவருக்கு, அமைச்சர்கள் புடைசூழ முதல்வர் ஸ்டாலின், பணி நியமன ஆணை
வழங்கிய புகைப்படம் நாளிதழ்களில் வெளியானது.
தொன்றுதொட்டு
சத்தமில்லாமல் நடைபெறும் இத்தகைய பணி நியமனங்கள் கூட, தற்போது, ஏதோ
அறிவாலய கழக வட்டம், மாவட்டம் பணி நியமனமாக பாவித்து, வெட்டி பந்தா செய்வதை
என்னவென்று சொல்வது?
அரசு பணியாளர் தேர்வு செலவீனங்கள் மற்றும்
மாதாந்திர ஊதியம் போன்ற சகலமும், மக்கள் வரிப்பணத்தில்தான் நடைபெறுகின்றன
என்பது கூடவா, திராவிட மாடல் அரசுக்கு மறந்து போய்விட்டது?
மேட்டூர், வைகை அணை தண்ணீரை திறந்து விட்டு, முதல்வரும், அமைச்சர்களும்
தாங்கள் ஏதோ வருண பகவானின் ஏஜென்டுகள் போல் போஸ் கொடுப்பது, சரியான தமாஷ்!
இப்படியே போனால், திராவிட மாடல் தலைவர்கள் கோவில்களில் சொர்க்கவாசல்,
வைகுண்ட வாசல்களை தாங்களே திறந்து வைத்து, கடவுள் போல் கூட போஸ் கொடுப்பர்
போலும்!
'அரைகுறைகள் கரை சேராது; நிறைகுடம் நீர் தளும்பாது' என்ற கிராமத்து சொலவடை தான் நினைவுக்கு வருகிறது!