PUBLISHED ON : நவ 19, 2026 12:00 AM

நவம்பர் 19: கேரள மாநிலம், கண்ணுார் மாவட்டம், கண்டக்கை கிராமத்தில் கேளு நம்பியார் – கல்யாணி அம்மா தம்பதியின் மகனாக 1919, மார்ச் 7ல் பிறந்தவர், மஞ்சேரி நாராயணன் நம்பியார் எனும் எம்.என்.நம்பியார்.
சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவர், ஊட்டியில் தன் அக்கா வீட்டில் தங்கி மூன்றாம் வகுப்பு வரையே படித்தார். குடும்ப சூழலால், 13 வயதில் நவாப் ராஜமாணிக்கம் நாடக குழுவில் சேர்ந்தார்.
கடந்த, 1935ல் வெளியான, பக்த ராமதாஸ் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கத்தி சண்டை, உரத்த குரலில் வசனம் பேசும் திறமையால், இணையற்ற வில்லன் நடிகராக புகழ் பெற்றார்.
ஆயிரத்தில் ஒருவன், நாடோடி மன்னன், எங்க வீட்டு பிள்ளை, மிஸ்ஸியம்மா, நெஞ்சம் மறப்பதில்லை ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க படங்கள். திரையில் கொடூர வில்லனாக நடித்தாலும், நிஜ வாழ்வில் ஒழுக்கம், ஆன்மிகம், எளிமையை கடைப்பிடித்தார்.
சபரிமலை அய்யப்பன் மீதான பக்தியால், தொடர்ந்து 65 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு சென்று வந்த இவர், 2008ல் இதே நாளில், தன் 89வது வயதில் மறைந்தார்.
இவரது நினைவு தினம் இன்று!
