PUBLISHED ON : நவ 27, 2026 12:00 AM

நவம்பர் 27, 1888
குஜராத் மாநிலத்தில், வாசுதேவ் கேசவ் மாவ்லங்கர் என்பவரது மகனாக, 1888ல் இதே நாளில் பிறந்தவர், கணேஷ் வாசுதேவ் மாவ்லங்கர் எனும் ஜி.வி.மாவ்லங்கர்.
மஹாராஷ்டிராவிலும், ஆமதாபாதிலும் பள்ளிப் படிப்பை முடித்தவர், குஜராத் கல்லுாரியில் அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். மும்பை அரசு சட்டக் கல்லுாரியில் படித்து, 1913ல் வழக்கறிஞராக பணியை தொடங்கினார்.
மகாத்மா காந்தி, சர்தார் வல்லபபாய் படேல் ஆகியோருடன் இணைந்து, விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாகிரகம் உள்ளிட்ட போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றார். ஆமதாபாத் நகராட்சித் தலைவராகவும், குஜராத் கல்விச் சங்கத்தின் செயலராகவும் இருந்தார்.
பம்பாய் மாகாண சட்டசபைத் தலைவராக பணியாற்றி, 1946ல் மத்திய சட்டசபைத் தலைவரானார். சுதந்திர இந்தியாவின் இடைக்கால பார்லிமென்ட் தலைவராக பணியாற்றிய இவர், 1952 மே 15ல், முதல் லோக்சபா சபாநாயகராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பார்லிமென்ட் நடைமுறைகள், மரபுகளுக்கு அடித்தளமிட்டதால், ‘லோக்சபாவின் தந்தை’ என அழைக்கப்பட்ட இவர், 1956, பிப்ரவரி 27ல், தன் 67 வயதில் காலமானார்.
இவரது பிறந்த தினம் இன்று!
