PUBLISHED ON : நவ 28, 2026 12:00 AM

நவம்பர் 28: மஹாராஷ்டிரா மாநிலம், சதாரா மாவட்டம், கட்குன் கிராமத்தில், மலர் வியாபாரி கோவிந்த்ராவ் பூலே- – சிம்னாபாய் தம்பதியின் மகனாக, 1827, ஏப்ரல் 11ல் பிறந்தவர், ஜோதிராவ் பூலே.
இவர், உள்ளூரிலும், புனே ஸ்காட்டிஷ் மிஷன் உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார். குடும்பச் சூழலால் கல்லுாரி படிப்பை தொடர இயலாதபோதும், சுயமாக படித்து, வரலாறு, சமூகவியல் மற்றும் சீர்திருத்த சிந்தனைகளில் ஆழ்ந்த புலமை பெற்றார்.
பெண் கல்வி, தீண்டாமை ஒழிப்பு, விதவை மறுமணம், குழந்தை திருமண எதிர்ப்பு மற்றும் ஒடுக்கப்பட்டோர் கல்வி உரிமைக்காக தளராமல் பாடுபட்டார். 1848ல் தன் மனைவி சாவித்திரிபாய் பூலேவுடன் இணைந்து, புனேயில் பெண்களுக்கான பள்ளியை தொடங்கினார்.
தொடர்ந்து, 1873ல், ‘சத்யசோதக் சமாஜ்’ எனும் உண்மையை தேடுவோர் சங்கத்தை நிறுவி, மூடநம்பிக்கைகளுக்கும், சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கும் எதிராக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
சமூக சீர்திருத்தப் பணிகளுக்காக, 1888ல் இவருக்கு, ‘மகாத்மா’ பட்டம் வழங்கப்பட்டது. சமூக முன்னேற்றத்துக்காக வாழ்நாள் முழுதும் உழைத்த இவர், 1890ல் இதே நாளில், தன் 63வது வயதில் மறைந்தார்.
இவரது நினைவு தினம் இன்று!
