PUBLISHED ON : அக் 15, 2026 12:00 AM

அக்டோபர் 15: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் ஜைனுலாபுதீன் – ஆஷியம்மா தம்பதியின் மகனாக, 1931ல், இதே நாளில் பிறந்தவர், அவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம். இவர், ராமேஸ்வரத்தில் பள்ளி படிப்பை முடித்து, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லுாரியில் இயற்பியல்; சென்னை தொழில்நுட்ப கழகத்தில் வானுார்தி பொறியியல் பயின்றார்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் , இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற் றில் பணியாற்றிய இவர், இந்தியாவின் செயற்கைக்கோள் ஏவுதல் திட்டத்திலும், ஒருங்கிணைந்த ஏவுகணை மேம்பாட்டு திட்டத்திலும் முக்கிய பங்காற்றினார்.
‘அக்னி, பிருத்வி’ ஏவுகணை திட்டங்களில் பணியாற்றி, ‘இந்திய ஏவுகணை நாயகன்’ என போற்றப்பட்டார். 1998-ல் நடந்த பொக்ரான் அணு ஆயுத சோதனையிலும் முக்கிய பங்காற்றினார்.
இந்தியாவின் 11-வது ஜனாதிபதியாக, 2002 –- 2007 வரை பணியாற்றினார். பத்ம பூஷண், பத்ம விபூஷண், பாரத ரத்னா உள்ளிட்ட விருதுகளை பெற்றார்.
மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தையும், கனவு காணும் உத்வேகத்தையும் விதைத்த இவர், தன் 83வது வயதில், 2015, ஜூலை 27-ல், மேகாலயா மாநிலம், ஷில்லாங்கில் மாணவர்களிடம் உரையாற்றிய போது, மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இவரது பிறந்த தினம் இன்று!
