PUBLISHED ON : அக் 16, 2026 12:00 AM

அக்டோபர் 16: சென்னையில், பெரிய கூட்டுக் குடும்பத்தில், 1952ல் இதே நாளில் பிறந்தவர், மோகன் ரங்காச்சாரி. தன் 6வது வயதில், நாடக ஆசிரியை ஜானகி மூலம் நாடக கலையில் ஆர்வம் கொண்டார். சென்னை ராஜா முத்தையா, பி.எஸ்.உயர்நிலைப் பள்ளிகளில் படித்த இவர், கிண்டி பொறியியல் கல்லுாரியில் இயந்திர பொறியியலில் பட்டம் பெற்றார்.
படிக்கும் போதே இவர் எழுதிய, ‘தி கிரேட் பேங்க் ராபரி’ சிறு நாடகம் பரிசு பெற்றது. 1976ல், ‘கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்’ நாடகம் மூலம், ‘கிரேஸி’ மோகன் ஆனார். 1979ல், ‘கிரேஸி கிரியேஷன்ஸ்’ நாடகக் குழுவை தொடங்கி, 30க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதினார்.
இவரது நகைச்சுவை எழுத்தாற்றலை கண்ட இயக்குநர் கே.பாலசந்தர், தன் பொய்க்கால் குதிரை படத்தில் வசனகர்த்தாவாக வாய்ப்பளித்தார். நடிகர் கமலின் அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், அவ்வை சண்முகி, பஞ்ச தந்திரம் உள்ளிட்ட பல படங்களுக்கு கதை,வசனம் எழுதியதுடன், நகைச்சுவை நடிகராகவும் நடித்து முத்திரை பதித்தார்.
கடந்த 2004ல் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற இவர், தன் 66வது வயதில், 2019 ஜூன் 10ல் மாரடைப்பால் காலமானார்.
இவரது பிறந்த தினம் இன்று!
