PUBLISHED ON : மார் 31, 2024 12:00 AM

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில், அரக்கோணம் லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் ஜெகத்ரட்சகன் அறிமுக கூட்டம் நடந்தது. திருத்தணி தொகுதி முழுதும் இருந்து தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள், பெருமளவில் தொண்டர்களை அழைத்து வந்தனர்.
பொதுவாக, இந்த மாதிரி கூட்டங்களில், பிரியாணி, 'சரக்கு' சப்ளை இருக்கும். ஆனால், இந்த கூட்டத்தில், சாப்பாடு கூட வழங்காமல், தலைக்கு 100 ரூபாய் கொடுத்து, வெளியே ஹோட்டலில் சென்று மதிய உணவு சாப்பிடுமாறு கூறினர்.
அதிர்ச்சியடைந்த தொண்டர்கள் சிலர், தங்களை அழைத்து வந்த நிர்வாகிகளிடம், 'அண்ணே... இது சைடு டிஷ் வாங்க கூட போதாது... ஏதாவது பார்த்து செய்யுங்க...' என்று தலையை சொரிந்தபடி நின்றனர்.
அதில் ஒரு நிர்வாகி, 'உங்களுக்காவது 100 ரூபாய் கொடுத்திருக்காங்க... எங்களுக்கு வெறும் அல்வா தான்... கடுப்ப கிளப்பாம போய் சாப்பிடுங்க...' என, முணுமுணுத்தபடி நடந்தார்.

