PUBLISHED ON : ஜூலை 03, 2026 01:04 AM

முதல்வர் விஜய் பிறந்த நாளையொட்டி, சென்னை, திருவொற்றியூர் தேரடி - கணக்கர் தெருவில், தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது.
இதில், 'டோக்கன்' அடிப்படையில் பெண்களுக்கு புடவைகள் வினியோகிக்கப்பட்டன. அவ்வழியே சென்ற பெண்கள் சிலர், டோக்கனின்றி புடவைகளை வாங்க முயன்றனர். 'டோக்கன் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே புடவை' என கூறி, த.வெ.க.,வினர் புடவைகளை வழங்கினர்.
அப்போது ஒரு பெண், 'நான் டோக்கன் கொடுத்து விட்டேன்' என கூறி, புடவை கேட்டு பிரச்னை செய்தார். 'யாரிடம் கொடுத்தீர்கள்' என நிர்வாகிகள்
கிடுக்கிப்பிடி போட, நைசாக நழுவி விட்டார்.
இதை பார்த்து கொண்டிருந்த வாலிபர் ஒருவர், 'தி.மு.க., - அ.தி.மு.க., நலத்திட்ட விழாவாக இருந்தால் இப்படி பண்ணுவாங்களா...? புது கட்சியினர் தானேன்னு ஏமாத்த பார்க்கிறாங்களே...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தனர்.
