PUBLISHED ON : ஏப் 29, 2025 12:00 AM

கோவை தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், கோவையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'தேசிய ஜனநாயக கூட்டணி, தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்பும் குறிக்கோளோடு செயல்படுகிறது. இக்கூட்டணியை பற்றி பிற அரசியல் கட்சிகள், தேர்தல் நெருங்க நெருங்கத்தான் புரிந்து கொள்ளும். அடுத்த ஆறு மாதங்களில், இக்கூட்டணியில் ஏராளமான அரசியல் கட்சிகள் இணைய உள்ளன. எந்தெந்த அரசியல் கட்சிகள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.
'தமிழகத்தில் எங்கள் கூட்டணி ஆட்சியை பிடிக்கும். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறாரா என்பது குறித்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா என்ன பதில் சொன்னாரோ, அதுதான் என் பதிலும்...' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'இவங்க நழுவுறதை பார்த்தா, தே.ஜ., கூட்டணியில் பன்னீருக்கு இடமிருக்காது போல தெரியுதே...' என, முணுமுணுத்தபடியே கிளம்பினார்.

