PUBLISHED ON : ஆக 17, 2026 01:57 AM

த.வெ.க., அரசைக் கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், மதுரை மாவட்டம், செல்லம்பட்டியில் சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலர் ராஜன் செல்லப்பா பேசுகையில், 'ஆர்ப்பாட்டத்திற்கு செல்லம்பட்டியைத் தேர்ந்தெடுக்க காரணம், எந்த ஊரிலும் முடியாத பஞ்சாயத்தை, செல்லம்பட்டி பஞ்சாயத்து தான் தீர்த்து வைக்கும் என்பதால் தான்' என்றார்.
மேற்கு மாவட்டச் செயலரான, முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசும்போது, 'த.வெ.க., அரசு, மேலும் கடன் வாங்காமல் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்தாலும், மகளிர் உரிமைத்தொகை 2,500 ரூபாய் வழங்கினாலும், நான் மொட்டையடித்துக் கொள்கிறேன். அ.தி.மு.க.,வில் இருந்து பிள்ளை பிடிக்கும் வேலை தொடர்ந்தால், நாங்கள் தற்கொலைப் படையாக மாறுவோம்' என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், 'உதயகுமார் மாசா மாசம் ஒவ்வொரு கோவிலுக்கா போய் மொட்டை அடிச்சுக்குவார்... அதான், மொட்டை அடிச்சுக்கிறேன்னு ஈசியா சவால் விடுறாரோ?' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.
