PUBLISHED ON : ஜூன் 25, 2026 12:32 AM

திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக, காங்., கட்சியை சேர்ந்த உயர்கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில், திருவாரூர் வந்த அவருக்கு தனியார் திருமண மண்டபத்தில், காங்கிரஸ் சார்பில் வரவேற்பு விழா நடந்தது.
இதில் விஸ்வநாதன் பேசும் போது, 'பெருந்தலைவர் காமராஜர், தியாக செம்மல் கக்கனை போல காங்கிரஸ் காரர்கள் இருக்க வேண்டும் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும். லஞ்சம் வாங்கக்கூடாது; ஊழல் செய்யக்கூடாது என்றுதான் கூறினேன். ஆனால், சிபாரிசு செய்யக்கூடாது என கூறவே மாட்டேன்.
'சிபாரிசை புறக்கணிப்பவன், ஜனநாயகத்தில் தலைவனாக இருக்க முடியாது. சிபாரிசு என்பது அங்கீகரிக்கப் பட்ட, எழுதப்பட்ட விதி. இதை யாராலும் மாற்ற முடியாது. எனவே, மக்களுக்கான உதவிகளை செய்வதுதான் ஒரு அமைச்சரின் கடமை' என்றார்.
இதை கேட்ட காங்., தொண்டர் ஒருவர், 'சிபாரிசு பண்றதுக்கு, 'கட்டிங்' எதிர்பார்க்கிறதால தானே லஞ்சம் பெருகுது...' என முணுமுணுக்க, சக தொண்டர்கள் ஆமோதித்தனர்.
