PUBLISHED ON : ஆக 24, 2026 12:26 AM

திராவிட வெற்றிக் கழகம் என்ற கட்சியின் தலைவர் மல்லை சத்யா, சமீபத்தில் விழுப்புரத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'கர்நாடக அரசு, காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை உதாசீனப்படுத்தி, தொடர்ச்சியாக அணைகளை கட்டி பாசனம், குடி நீர் பரப்பை விரிவாக்கம் செய்து வந்தது; தற்போது, நமக்கு வரும் உபரி நீரையும் தடுக்க, மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கிறது. இதை, வன்மையாக கண்டிக்கிறோம்.
'ம.தி.மு.க., தன் கடைசி அத்தியாயத்தை எழுதிக் கொண் டிருக்கிறது. வைகோ உருவாக்கிய ம.தி.மு.க.,வுக்கு, அவரது மகன் துரை முடிவுரை எழுதிக் கொண்டிருக்கிறார். இதை, நான் அந்த இயக்கத்தில் வளர்ந்தவன் என்ற உணர்வோடு பதிவு செய்கிறேன்' என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், 'எந்த பிரச்னை சம்பந்தமா இவர் பேட்டி கொடுத்தாலும், ம.தி.மு.க.,வுக்கு, 'பஞ்ச்' வைக்காம முடிக்க மாட்டாரே' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் சிரித்தனர்.
