PUBLISHED ON : அக் 11, 2026 12:00 AM

தி.மு.க., சென்னை தென்மேற்கு மாவட்ட செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான மயிலை வேலு அறிக்கை: கைரிக் ஷாவை ஒழித்தது தி.மு.க., தான். கைரிக் ஷா ஒழிப்பு, மனிதனை மனிதன் இழுக்கும் இழிவில் இருந்து விடுவித்த மனித நேய புரட்சி. ஆனால், அனைத்து பஸ்களிலும் மகளிருக்கு இலவசம் என்ற திட்டம் மூலம், ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரத்தை த.வெ.க., அரசு ஒழிக்கிறதா?
கடந்த 2006ல் நடந்த தி.மு.க., ஆட்சியில், உங்க முன்னாள் தலைவர் கருணாநிதி இலவச, ‘டிவி’க்களை வழங்கினாரே... அப்ப, ‘டிவி’ கடைக்காரங்க பொழப்பு கெட்டு போகுமேன்னு நீங்க யோசிச்சீங்களா?
காங்கிரஸ் மாணவர் பிரிவு தமிழக தலைவர் சின்னதம்பி பேச்சு: தலை மை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி, டில்லியில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தலைமையில் நடந்த போராட்டம், நாடு முழுதும் அதிர்வலைகளையும், தாக்கத்தையும் உருவாக்கியுள்ளது; இளைஞர்களை, மாணவர்களை ஒருங்கிணைக்க வைத்துள்ளது. தேர்தல் கமிஷன் – பா.ஜ., அரசின் மறைமுக கூட்டணியை வெட்ட வெளிச்சமாகி விட்டது. மக்களிடம் ஏற்பட்டுள்ள பெரும் வரவேற்பை பொறுத்துக்கொள்ள முடியாமல், பா.ஜ.,வுக்கு தேர்தல் ஜுரம் துவங்கி விட்டது.
ராகுல் போராட்டம் என்பது ஒரு நாள் பொழுதுபோக்காக முடிந்து விட்டது... நீங்க தான் அதை வச்சு, ‘ஓவர் பில்டப்’ தர்றீங்க!
எஸ்.டி.பி.ஐ., கட்சியின் தமிழக பொறுப்பு தலைவர் உமர் பாரூக் அறிக்கை: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மின் தடை, சீரற்ற மின்னழுத்தம், பல இடங்களில் முறிந்தும், சாய்ந்தும் காணப்படும் ஆபத்தான மின் கம்பங்கள் மற்றும் பழுதடைந்த மின்மாற்றிகள் போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு சிக்கல்களால், பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்னை களை சீரமைக்க தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யாமல், பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில், ‘ஸ்மார்ட் மீட்டர்’ திட்டத்தை கொண்டு வர துடிப்பது, மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கை அல்ல.
வாஸ்தவம் தான்... முதல்ல தடையற்ற மின்சாரத்தை தந்துட்டு, அதுக்கப்புறம் ஸ்மாட் மீட்டர்கள் எல் லாம் வழங்கலாமே!
தமிழக முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு பேச்சு:
‘சைபர்’ மோசடிகளில், உங்கள் வீட்டுக்கே வராமல், பீரோவை உடைக்காமல், மொபைல் போன் வாயிலாக தமிழக மக்களிடம் இருந்து மட்டும் ஓராண்டில், 1,800 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. சைபர் குற்றங்கள் சர்வ சாதாரணமாக நடப்பது வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.
சைபர் மோசடி ஆசாமிகள் மொபைல் போனில் பேசுவதை நம்பி, ஏமாறும் அளவுக்கு விழிப்புணர்வு இல்லாத மக்களை தான் நீங்க குற்றஞ்சாட்டணும்!
