PUBLISHED ON : அக் 12, 2026 12:00 AM

த.வெ.க., கொள்கை பரப்பு செயலர் நாஞ்சில் சம்பத் அறிக்கை: த.வெ.க., ஆட்சி குறித்து நான் விமர்சனம் செய்ததாக, இட்டுக்கட்டிய பொய்களை சிலர் பரப்பி வருகின்றனர். அதில் எந்த உண்மையும் இல்லை. இந்த ஆட்சியின் மாட்சி குறித்து, நான் தினமும் பதிவிட்டு வருகிறேன். இதை, என் தலைமையும் அறியும்; என் மனமும் அறியும்.
உங்க தலைமை அறிந்திருந்தால் தான், உங்களை தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு அனுப்பி வச்சிருப்பாங்களே... ஏன் அனுப்பலைன்னு யோசிச்சு பார்த்தீங்களா?
அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி பேச்சு: குற்றங்களை தடுப்பதற்கும், குற்றம் செய்பவர்களை உடனே பிடிப்பதற்கும் முயற்சி செய்யாமல், எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு, அவர்கள் மீதே பழி போடும் வேலையை, ஒரு சில அமைச்சர்கள் தொடர்ந்து செய்து வருவது கண்டனத்துக்குரியது.
விட்டா, ‘அமைச்சர்களே போலீஸ் சீருடை அணிந்து, ராத்திரி நேரத்துல சைக்கிளில் ரோந்து போகணும்’னு கூட சொல்வீங்க போல தெரியுதே!
த.வெ.க., உறுப்பினரும், சமூக சேவகருமான கே.சீனிராஜ் பேச்சு: த.வெ.க., ஆட்சி அமைந்த பின், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, திறன் மேம்பாட்டு திட்டங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. ஊழலற்ற ஆட்சி, மக்களின் குறைகளை உடனுக்குடன் கேட்டு தீர்த்து வைக்கும் முதல்வர் என்ற நற்பெயரை நாடு முழுதும் விஜய் பெற்று வருகிறார். திரையுலகத்தில் வசூல் சாதனை நாயகனாக இருந்தவர், தமிழகத்தின் வளர்ச்சி சாதனை நாயகனாக மாறியுள்ளார். தமிழகம் சரியான முதல் வரின் கையில் பாதுகாப்பாக உள்ளது.
அ.தி.மு.க.,வில் இருந்து சில மாதங்களுக்கு முன் த.வெ.க.,வுக்கு வந்த உங்களுக்கு, சீக்கிரம் பதவி கிடைக்கணும் என்பதற்காக இப்படி, ‘ஐஸ்’ வைக்கிறீங்க என்பது நல்லாவே தெரியுது!
தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி எம்.பி., பேச்சு:
த.வெ.க., ஆட்சி நீடித்தால், தமிழகம் இருண்ட காலத்தை நோக்கி செல்லும். ‘அண்ணன் காப்பாற்றுவார்’ என நம்பி ஓட்டு போட்ட பெண்களை காப்பாற்ற காவல் துறை கூட இல்லை. கடந்த நான்கு மாதங்களில், 570 குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன; அவற்றில் பெரும்பாலும் பெண்களுக்கு எதிரானவை. அரசு மருத்துவமனைகளில் குழந்தைக்கான மருந்து, டாக்டர்கள் இல்லை. அதை பற்றி கவலையின்றி, மோதிரத்திற்கு பல கோடி ரூபாயை முதல்வர் விஜய் செலவிட்டுள்ளார். தாய்மாமன் சீர், திருமணத்திற்கு அண்ணனின் சீர்வரிசை இரண்டும் தேவையில்லாத திட்டங்கள்.
இந்த இரண்டு திட்டங்களுமே, பெண்களின் மத்தியில் விஜய்க்கு அசைக்க முடியாத செல்வாக்கை உருவாக்கிடும்னு நீங்க அச்சப்படுவது நல்லாவே தெரியுது!
