PUBLISHED ON : அக் 07, 2026 12:00 AM

பா.ஜ., தமிழக செயலர் அஸ்வத்தாமன் பேட்டி: ராகுல் உள்ளிட்ட சில எதிர்க்கட்சியினர், தேர்தல் ஆணையம் மற்றும் எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து, ஆதாரமற்ற புகார்களை கூறி அவதுாறு பரப்பி வருகின்றனர். மூன்று தேர்தல் ஆணையர்களும் முழுமனதோடு ஏற்று செயல்படுத்திய எஸ்.ஐ.ஆர்., குறித்து, உச்ச நீதிமன்றம் தீர விசாரித்து ஏற்றுள்ளது. எஸ்.ஐ.ஆர்., மூலம், தமிழகத்தில் யாருடைய ஓட்டுகளும் பறி போகவில்லை.
எஸ்.ஐ.ஆர்., குறித்த புகார்களுக்கு தேர்தல் கமிஷன் பதில் தந்துட்டு போகட்டும்... முந்திரி கொட்டை மாதிரி நீங்க வக்காலத்து வாங்குறது தானே, எதிர்க்கட்சியினருக்கு சந்தேகத்தை கிளப்புது!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை செயலரும், த.வெ.க., உறுப்பினருமான ஆர்.எஸ்.ராஜன் அறிக்கை: தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி, 'பா.ஜ., கிளையாகவே த.வெ.க., உள்ளது' என கூறியுள்ளார். உண்மையில் பா.ஜ.,வின் கைப்பாவையாக துடித்துக் கொண்டிருப்பது தி.மு.க., தான். தி.மு.க.,வினரை பொறுத்தவரை அதிகாரம் வேண்டும் என்றால் எந்த எல்லைக்கும் செல்வர்; எந்த நிலைக்கும் இறங்குவர் என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்.
வாஸ்தவம் தான்... கடந்த 1999ல், தமிழகத்தில் நடந்த தி.மு.க., ஆட்சியை, மத்திய பா.ஜ., அரசு கலைச்சிடுமோ என்ற பயத்தில் தானே, அந்த கட்சியுடன் தி.மு.க., கூட்டணி சேர்ந்தாங்க!
இந்திய கம்யூ., தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் முத்தரசன் பேட்டி: கடந்த 2023க்கு முன் பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ஜனாதிபதி போன்றோர் தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் முறை இருந்தது. பின் மாற்றப்பட்டு, பிரதமரால் ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டு, பா.ஜ., கட்டுப்பாட்டில் செயல்படுகிறார். எஸ்.ஐ.ஆர்., என்ற பெயரில், தேசிய அளவில் 13.30 கோடி வாக்காளர்களை நீக்கியுள்ளார். இதற்கு பொறுப்பேற்று ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்.
நீங்க சொல்ற அந்த 13.30 கோடி பேரில் ஒருத்தர் கூட, 'என் பெயரை நீக்கிட்டாங்க'ன்னு எங்கயும் புகார் தரலையே... இதுல இருந்தே, அதெல்லாம் போலி வாக்காளர்கள் என்பது தெரியுதே!
தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா பேச்சு:
தமிழகம் தற்போது, 10 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. அந்த கடன் சுமையை குறைக்க வேண்டியவர்கள், கடனை மேலும் மேலும் அதிகரித்து வருகின்றனர். 'எம்.எல்.ஏ.,க்களுக்கு கார் வேண்டாம்' என, நாங்கள் எழுதி கொடுத்து விட்டோம். அந்த பணத்தில், நெல் கொள்முதல் நிலையங் களுக்கு கிடங்கு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்.
- தமிழக அரசுக்கு 2021ல், 5 லட்சம் கோடி கடன் தான் இருந்துச்சு... உங்க கூட்டணிக்கு தலைமை வகிக்கும் தி.மு.க., ஆட்சியில் தான் அதை, 10 லட்சம் கோடி ரூபாயாக்கிட்டாங்க!
