PUBLISHED ON : அக் 09, 2026 12:00 AM

த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக கைத்தறி துறை அமைச்சர் விஜய் பாலாஜி பேட்டி: இடைத்தேர்தல் என்றால், ‘திருமங்கலம் பார்முலா’ என்பது மக்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால், அதை உடைத்து, இடைத்தேர்தலில் ஒரு ரூபாய் கூட கொடுக்காமல், ஆளுங்கட்சியாக இருந்து மிகப்பெரிய வெற்றியை அடைய இருக்கிறோம். த.வெ.க., ஒரு ரூபாய் கூட கொடுத்து, ஓட்டு வாங்கியதாக சரித்திரம் கிடையாது.
அப்படி பணத்தை வாரியிறைக்காமல் விட்டதால் தான், இந்த இடைத்தேர்தலில் ஓட்டுப்பதிவு சதவீதம் குறைஞ்சிடுச்சோ?
தொழில் முதலீட்டு ஆலோசகர் முத்துகிருஷ்ணன் பேச்சு: இந்திய குடும்பங்கள் தங்களின் மூன்று ஆண்டுகால முழு செலவுகளையும் ஈடுகட்டும் அளவிற்கு, அவசரகால நிதி சேமிப்பை உருவாக்க வேண்டும். புதிய கடன்கள் எதையும் வாங்க வேண்டாம். வீடு அல்லது ரியல் எஸ்டேட் போன்ற நீண்டகால நிதி பொறுப்புகளை தவிர்க்கவும். குறிப்பிட்ட வேலை, பதவிகளை எதிர்பார்க்காமல், வருமானத்தை உறுதிப்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள்.
‘யானை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே’ என்பது போல, ‘கடும் பொருளாதார நெருக்கடியை சந்திக்க ஆயத்தமா இருங்க’ன்னு சொல்றீங்களோ?
வி.சி.க., தலைவர் திருமாவளவன் பேச்சு: ‘வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்’ என்பதை ஜனநாயக சக்திகள் தொடர்ந்து பேசி வருகின்றன. எஸ்.ஐ.ஆர்., பணிகள் தான், தமிழக சட்டசபை தேர்தலில் மும்முனை போட்டியை உருவாக்கியது; இல்லையென்றால், தமிழகத்தில் இருமுனை போட்டி தான் இருந்திருக்கும். வாக்காளர் சிறப்பு பட்டியல் திருத்தம் காரணமாகத் தான் மும்முனை போட்டி உருவாகி, த.வெ.க., வெற்றி பெற்றது என்பதை நான் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். பா.ஜ.,வுக்கு ஆதரவாக தலைமை தேர்தல் ஆணையர் செயல்பட்டு இருக்கிறார். அவர் உடனே பதவி விலக வேண்டும்.
ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்தாலும், தி.மு.க., ஆதரவு மனநிலையில் இருந்து இன்னும் நீங்க வெளியில் வரவே இல்லையோ?
இந்திய கம்யூ., தமிழக செயலர் வீரபாண்டியன் அறிக்கை:
அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து, ஈரான் மீது பெரிய அளவிலான வான்வழி தாக்குதல்களை தொடங்கி, தொடர்ந்து நடத்தி வருகின்றன. அமெரிக்காவின் அரசியல், பொருளாதார, ராணுவ மேலாதிக்க நோக்கமே இதற்கு முக்கிய காரணம். ஈரான் மீதான தாக்குதலை உடனே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நிறுத்த வேண்டும். மேற்காசியாவில் வாழும் இந்தியர்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்கவும், அவர்களை பத்திரமாக மீட்டுக் கொண்டு வரும் நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும்.
- உள்ளூர்ல இருக்கிற பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து அலுத்து போய், சர்வதேச விவகாரங்களுக்கு தாவிட்டீங்களோ?
