PUBLISHED ON : ஜன 31, 2024 12:00 AM

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: சீனாவை போற்றும் பொலிட் பீரோக்களும், பாகிஸ்தானை வாழ்த்தும் போலி மதச்சார்பின்மைகளும், கொள்கை இல்லாது கூட்டிய, 'இண்டியா' கூட்டணி சூல் கொள்ளும் முன்பே, கருச்சிதைவு ஆன பரிதாபம். நல்ல வேளை, கற்பனைக்கு ஒருவேளை இவர்கள் ஆட்சியை பிடித்தால், இந்தியாவை சுக்கு நுாறாக்கி, சுதந்திரத்துக்கு முந்தைய சூழலை உருவாக்கி விடுவர் என்பதால் தான், களம் காணும் முன்பே ஆட்டத்தை கலைத்து விட்டதோ அயோத்தி.பீஹார் முதல்வர் நிதீஷ் குமார் மட்டும் வெளியேறி இருக்கிறார்... என்னமோ இண்டியா கூட்டணியே மொத்தமா கலைஞ்சிட்ட மாதிரி சொல்றாரே!
தெலுங்கானா கவர்னர் தமிழிசை பேட்டி: கல்வி தான் ஒருவருக்கு அடிப்படை. பல நேரங்களில் கல்வியை அரசியலாக்குவது வருத்தமளிக்கிறது. 'தமிழகத்தில் ஹிந்தியை திணிக்கின்றனர்' என்று சொல்வதை ஒத்துக்கொள்ள முடியாது. தனியார் பள்ளிகளில் ஹிந்தி கற்றுத்தரப்படுகிறதா, இல்லையா என்பதை தமிழக ஆட்சியாளர்கள் கூற வேண்டும். மற்றொரு மொழியை படிக்கும் போது, குழந்தைகளுக்கு புதுப்புது வாய்ப்புகள் உருவாகும்.அப்படி எந்த வாய்ப்பும் உருவாக கூடாதுன்னு தானே, தமிழகத்தில் ஹிந்தியை நுழைய விடாம அணை போட்டு தடுக்குறாங்க!
தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நரசிம்மன் பேட்டி: அ.தி.மு.க.,வின் பிரதமர்வேட்பாளர் யார்; லோக்சபா தேர்தலில் பழனிசாமி, முனுசாமி உள்ளிட்ட அ.தி.மு.க.,வின் யாருக்காக ஓட்டு கேட்க போகின்றனர்; மோடிக்கா, ராகுலுக்கா அல்லது வேறு யாரேனும் ஒருவருக்கா என்பதை அ.தி.மு.க., விளக்க வேண்டும். 2014 லோக்சபா தேர்தலில் ஜெயலலிதா தனித்து களம் கண்ட போதும், பிரதமர் வேட்பாளர்னு யாரையும் முன் நிறுத்தலையே!
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: ராமர் சிலை முன், பிரதமர் கீழே விழுந்து மன்னிப்பு கேட்டார்... 'நான் கோவிலை வைத்து அரசியல் செய்கிறேன். என்னை மன்னித்து விடு என, அவர் மைண்ட் வாய்சில் பேசியது எனக்கு கேட்டது' என, திருமாவளவன் கூறியுள்ளார். எனக்கும் அவர் மைண்ட் வாய்ஸ் கேட்டது... 'ஜாதி ரீதியாக நாட்டை பிளவுபடுத்தும் சில திருந்தாத ஜென்மங்கள் இருக்கின்றன. உன்னை வைத்து, அவர்கள் மத அரசியல் செய்கின்றனர். நான் அவர்களை பார்த்துக் கொள்கிறேன். அவர்களை மன்னித்துவிடு' என்று சொன்னது எனக்கு கேட்டது.'அட ராமா ராமா'ன்னு சொல்ற அளவுக்கு இந்த அரசியல் வாதிகளின் அக்கப்போருக்கு அளவே இல்லாம போச்சு!