PUBLISHED ON : ஜூன் 06, 2025 12:00 AM

அ.தி.மு.க., மருத்துவ அணி இணைச் செயலர் டாக்டர் சரவணன் அறிக்கை: 'தி.மு.க.,
அரசின் நான்காண்டு சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்' என,
முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த நான்காண்டில், இந்தியாவிலேயே அதிக
கடன் சுமை உள்ள மாநிலமாக தமிழகம், மின்கட்டணம் மூன்று முறை உயர்வு,
சொத்துவரி, பால் விலை, குடிநீர் வரி, கட்டுமானப் பொருட்கள், சமையல்
பொருட்கள் விலை உயர்வு, 18,300 பாலியல் சம்பவங்கள் இதையெல்லாம்
மக்களிடத்தில் தி.மு.க., நிர்வாகிகள் எடுத்துக்கூற வேண்டும்.
தி.மு.க.,வினரை, சொந்த காசுல சூனியம் வச்சுக்க சொல்றாரே... இதை எல்லாம் அ.தி.மு.க.,வினர் அல்லவா செய்யணும்!
தமிழக பா.ஜ., துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'எந்த ஷா வந்தாலும், தமிழகத்தை ஆள முடியாது. டில்லிக்கு தமிழகம் எப்போதும், அவுட் ஆப் கன்ட்ரோல் தான்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். 1976ல் தமிழகத்தில் கவர்னராக இருந்த ஷா, தி.மு.க., ஆட்சியை கலைக்க பரிந்துரை செய்ததால் தான், 13 ஆண்டுகள் தி.மு.க.,வுக்கு தமிழகம், 'அவுட் ஆப் கன்ட்ரோல்' ஆக இருந்தது என்பது ஸ்டாலினுக்கு தெரியாதா? 50 ஆண்டுகள் கழித்து, 2026ல் மீண்டும் தமிழகம் தி.மு.க.,வுக்கு, 'அவுட் ஆப் கன்ட்ரோல்' ஆக மாறப்போகிறது; அது, இன்றைய அமித் ஷாவால் தான்.
இந்த வரலாற்று புள்ளி விபரங்கள், தி.மு.க.,வினர் வயிற்றில் புளியை கரைக்குமே!
தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை: இந்தியா முழுதும் கொரோனா வேகம் எடுத்துள்ள நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில், இதன் தாக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது. எனவே, கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வருவோர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை கண்டறிய சோதனை நடத்த வேண்டும். தமிழகத்தில் கொரோனா பரவாமல் இருக்க தேவை யான, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முதல்வர் எடுக்க வேண்டும்.
வாஸ்தவம் தான்... சுகாதாரத் துறை இப்போதே விழித்துக் கொள்ளவில்லை என்றால், நிலவரம் கலவரமாகிடும்!
தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் அறிக்கை: எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், 'தி.மு.க., அன்றும் அதே பேச்சு. இன்றும் அதே பேச்சு' என்கிறார். ஆம், உண்மை. அன்றும், இன்றும் பொதுக்குழுவில் மாறாத தீர்மானங்கள். ஹிந்தி எதிர்ப்பு, மாநில சுயாட்சி, கச்சத்தீவு மீட்பு, முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு. துணை முதல்வர் உதயநிதிக்கு பொதுக்குழு துணை நிற்பதாக உறுதிமொழி. இதை மன்னர் ஆட்சி என்பதா மக்களாட்சி என்பதா?
மக்களாட்சியில் மன்னராட்சியை புகுத்துவதற்கும் தனி சாமர்த்தியம் வேணும்... அது, தி.மு.க.,வினரிடம் நிறையவே இருக்கு!