PUBLISHED ON : ஆக 02, 2025 12:00 AM

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் பேட்டி: நாங்கள் தேசிய ஜனநாயக
கூட்டணியில் தான் இருக்கிறோம். கூட்டணி குறித்து பழனிசாமி கூறியதில் எந்த
முரண்பாடும் இல்லை. நாங்கள் ஏற்கனவே அக்கூட்டணியில் உள்ளோம் . அ.தி.மு.க.,
அதில் இணைந்துள்ளது. அதைத்தான் பழனிசாமி கூறியுள்ளார். மத்திய அரசுக்கு
எதிரான பன்னீர்செல்வம் அறிக்கை குறித்து நான் எதுவும் கூற விரும்பவில்லை.
தமிழக நலன் பாதிக்கப்படும் போது, கூட்டணியாக இருந்தாலும் மத்திய அரசுக்கு
எதிராக குரல் கொடுப்போம். ஒரே சமயத்தில் பழனிசாமி, பன்னீர்செல்வத்தை,
'பேலன்ஸ்' பண்ற இவரது சாமர்த்தியத்தை பாராட்டியே ஆகணும்!
அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் பொதுச் செயலர் வி.டி.பாண்டியன் பேச்சு: மன்னர் ராஜேந்திர சோழன் நாணயம் வெளியிட்டு, ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழ னுக்கு சிலை அமைக்கப்படும் என அறிவித்த பிரதமர் மோடியை பாராட்டுகிறோம். வரும் சட்டசபை தேர்தலில், தே.ஜ., கூட்டணியில் தான் நீடிப்போம். ஐந்து தொகுதி களில் போட்டியிட வேண்டும் என, கட்சி தலைவர் டாக்டர் சேதுராமன் விரும்புகிறார். அவர் விருப்பத்தை நிறைவேற்ற, கட்சி பணிகளில் தீவிரமாக பணியாற்றுவோம்.
'ஐந்து லட்சியம்; ஒன்று நிச்சயம்' என, கடைசியில இறங்கி வந்துடுவீங்க தானே!
தமிழக மாணவர் காங்., தலைவர் சின்னதம்பி பேட்டி: மத்திய அரசு, தமிழகத்திற்கு தர வேண்டிய கல்வி நிதியை வழங்க மறுத்து வருகிறது. பீஹார் மாநிலத்திற்கு, 4,000 கோடி ரூபாய் கல்வி நிதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு கல்வி நிதியை மறுக்கும் மத்திய அரசை கண்டித்து, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவப்படத்தில் முட்டை அடிக்கும் நுாதன போராட்டம் மாவட்டந்தோறும் நடத்தப்படும்.
பீஹாரில் இந்த வருஷம் தேர்தல் வர்றதால, நிதி தந்திருக்காங்க... நமக்கும், அடுத்த வருஷம் தேர்தலப்ப தருவாங்களோ?
தமிழருவி மணியனின் காமராஜர் மக்கள் கட்சியின் பொதுச்செயலர் குமரய்யா அறிக்கை: 'நலம் காக்கும் ஸ்டாலின்' என்ற புதிய திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது. 'மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், இதயம் காப்போம்' என, பல்வேறு புதிய சிறப்பு திட்டங்கள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இத்தனை சிறப்பு திட்டங்களால் கிடைத்த பலன்கள் என்ன என்பதை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்டால் தான், இத்திட்டங்கள் ஏட்டு சுரைக்காய்கள் அல்ல என்ற தெளிவு மக்களுக்கு கிடைக்கும்.
ஒரு திட்டத்துக்கு மூடுவிழா நடத்திட்டு, அடுத்த திட்டத்தை அறிவிக்கிறாங்கன்னு சந்தேகப் படுறாரோ?