PUBLISHED ON : ஆக 03, 2025 12:00 AM

அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை:
உதயநிதி ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, 'என் மாமா நன்றாக படித்ததால்
மருத்துவராகி விட்டார். நான் சரியாக படிக்காததால், துணை முதல்வராகி
விட்டேன்' என, கூறியுள்ளார். அவர் படிக்காததால் துணை முதல்வராகவில்லை.
ஸ்டாலின் மகனாக பிறந்ததால் அந்த பதவி வந்துள்ளது. வாரிசு அரசியலை தவிர,
மற்ற எல்லா துறைக்கும் தகுதி, திறமை தேவை. உதயநிதிக்கு கிடைத்த வாய்ப்பு,
தி.மு.க.,வில், 50 ஆண்டுகளுக்கு மேல் பயணம் செய்வோருக்கு கிடைக்கவில்லை.
வாஸ்தவம் தான்... 50 அல்ல; 100 வருஷம் ஆனாலும், தி.மு.க.,வில் ஒரு
குடும்பத்தினர் மட்டும் தான் தலைமை பீடத்தில் அமர முடியும்!
அ.தி.மு.க., உரிமை மீட்பு குழுவின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலர் ஆர்.வி.ரஞ்சித்குமார் பேட்டி: தமிழகத்தில் மூன்று முறை முதல்வராக இருந்து, மக்களின் அடையாளமாக இருக்கும் பன்னீர்செல்வத்தை, 'அ.தி.மு .க.,வில் சேர்ப்பதற்கு காலம் கடந்து விட்டது' என, பழனிசாமி வாய் கூசாமல் கூறிவிட்டார். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை, பன்னீர்செல்வம் தன் ஆட்டத்தின் வாயிலாக நிரூபிப்பார்.
மத்திய அரசுக்கு எதிராக அறிக்கை; முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு தான் பன்னீர்செல்வத்தின் அதிரடி ஆட்டங்களா?
மா.கம்யூ., கட்சியின் மாநிலச் செயலர் சண்முகம் அறிக்கை: ஜெ.,க்கு சொந்தமான சிறுதாவூர் பங்களா வளாகத்தில் வளைக்கப்பட்ட அரசு புறம்போக்கு நிலங்கள், 34 ஏக்கரையும் கையகப்படுத்த வேண்டும் என்றும், பாதிக்கப் பட்ட தலித் மக்களுக்கு உடனே நிலத்தை பிரித்து வழங்க வேண்டும் எனவும், விசாரணை ஆணையம் பரிந்துரை செய்தது. ஆனால், நீதிமன்ற வழக்குகள் அனைத்தும் முடிவுற்றும், 15 ஆண்டுகளுக்கும் மேலாக, தலித் மக்களுக்கு உரிய நிலங்களை இதுவரை பிரித்து வழங்கவில்லை.
தலித் மக்களின் உரிமை களுக்காக கட்சி நடத்தும் திருமாவளவனுக்கு இது தெரியாதோ?
த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களில், நெல்லை கொள்முதல் செய்து அங்கேயே வைத்திருப்பதால் , தொடர்ந்து கொண்டு வரப்படும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய முடியாத அளவுக்கு இடப்பற்றாக்குறை உள்ளது. நெல் மூட்டைகளை அவ்வப்போது சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்ல வேண்டும். கொள்முதல் நிலையங்களில் சாக்கு பைகள், தார்பாய்கள் தேவையான அளவிற்கு இருக்கும் வகையில் அரசு ந டவடிக்கை எடுக்க வேண்டும்.
'டெல்டா' மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால், நெல்மணியின் அருமை இவருக்கு தெரிஞ்சிருக்கு... அதிகாரிகள் அக்கறை காட்டினால் நல்லாயிருக்கும்!