PUBLISHED ON : ஆக 23, 2025 12:00 AM

தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் பேட்டி: அ.தி.மு.க., பொதுச்செயலர்
பழனிசாமி பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் எல்லாம் ஆம்புலன்ஸ்
அனுப்பப்படுகிறது, என்று குற்றம் சாட்டுகிறார். முதல்வராக இருந்தவர்,
உண்மைத்தன்மை தெரியாமல், இது போல் சொல்லக்கூடாது. பிரசாரம் செய்யும் போது,
நாங்கள் ஏன் ஆம்புலன்ஸ் அனுப்ப வேண்டும். அது, உயிர் காக்கும் தன்மை;
அதனுடைய சீரியஸை குறைக்கும் விதமாக, அவர், 'கமென்ட் பாஸ்' செய்திருக்கக்
கூடாது. அவரது கூட்டத்துக்கு நடுவில் காலி ஆம்புலன்சை ஓட்டும்படி உத்தரவு
போட்டது யார்னு விசாரிக்காம, பழனிசாமி மீதே புகார் கூறுவது சரியா?
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு, 1,020 டிரைவர்களும், 1,172 கண்டக்டர்களும் தனியார் நிறுவனங்கள் மூலம் குத்தகை முறையில் நியமிக்கப்பட இருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. மாநகர போக்குவரத்து கழகத்தை மறைமுகமாக தனியார்மயமாக்கும் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. சமூகநீதியை குழி தோண்டி புதைத்தல், உழைப்பு சுரண்டலை ஊக்குவித்தல், அரசின் வளங்களை தனியாருக்கு தாரைவார்த்தல் ஆகிய முப்பெரும் பாவங்களை தி.மு.க., அரசு செய்து கொண்டிருக்கிறது.
இதை எல்லாம் தட்டி கேட்க வேண்டிய கம்யூ., 'தோழர்'கள், முதல்வர் அளித்த விருந்தை சாப்பிட்டு விட்டு, உண்ட மயக்கத்தில் ஓய்வில் இருக்காங்களோ?
தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா பேச்சு: தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் வெற்றி பெற்றால் தமிழகத்துக்கும், தமிழர்களுக் கும் பெருமை மிகுந்ததாக இருக்கும். அவர் வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவு அளிக்க வேண்டும்.
இவங்களுக்கு இருக்கும் தமிழ் உணர்வு, தமிழ் தமிழ்னு பேசும் மற்ற கட்சிகளுக்கு இல்லையே!
தமிழக துணை முதல்வர் உதயநிதி பேச்சு: தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., வில்சனுக்கு ஒதுக்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதி அனைத்தையும், கல்வி, விளையாட்டு மேம்பாடு, பெண்கள் முன்னேற்றம் என, சமுதாய நல பணிகளுக்காக செலவழித்துள்ளார். கொளத்துார் தொகுதியில் பள்ளி கட்டட பணிக்கு, 2.35 கோடி, ராணிமேரி மகளிர் கல்லுாரிக்கு, 5 கோடியில் கட்டடம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு, 3 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்.
கொளத்துார், முதல்வர் ஸ்டாலின் தொகுதி, சேப்பாக்கம், உதயநிதியின் தொகுதி... இந்த தொகுதிகளுக்கு என்று பார்த்து பார்த்து வில்சன் செலவழித் திருப்பது நல்லாவே தெரியுது!