PUBLISHED ON : ஆக 26, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
'ஜி.எஸ்.டி., வரி குறைப்பு, மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்' என,
தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். 'வர்த்தகர்கள் ஒரு
கட்டமைப்புக்குள் வந்து முறையாக வரி செலுத்த துவங்கியதும், மாற்றி
அமைப்போம்' என, அன்றைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உறுதி அளித்தபடி,
தற்போது மத்திய அரசு ஜி.எஸ்.டி., வரி விதிப்பில் மாற்றம் கொண்டு வருகிறது.
எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்வது தான் திராவிட மாடலா? தேர்தல்
நேரத்தில் இந்த வரி குறைப்பு, பா.ஜ.,வுக்கு ஆதாய மாக அமைந்து விடுமோ என்பது
தான் அவங்க கவலை!
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: 'தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யக்கூடாது' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு செய்த பணி நியமனங்களில், 50 சதவீதம் தற்காலிக நியமனங்கள் தான். அனைத்து நிலைகளிலும் தனியார் நிறுவனங்கள் வாயிலாக, குத்தகை முறையில் பணியாளர்களை நியமிப்பதை புதிய கலாசாரமாக தி.மு.க., அரசு மாற்றியுள்ளது.
'குத்தகை' முறையில் தானே எடுத்தவங்களுக்கும், கொடுத்தவங் களுக்கும் பெரிய லாபம் கிடைக்கும்!
அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: சென்னை ஆர். கே. நகர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., எபிநேசரிடம், 'மகளிர் உரிமைத் தொகை மாதம், 1,000 ரூபாய் வருவதில்லை?' என, பெண்கள் கூறியபோது, 'மென்டல் மாதிரி பேசாதீங்க' என திட்டியது தான் திராவிட மாடலா? ஓட்டு கேட்க வரும்போது, 'அம்மா, அக்கா' என்பீர்கள்; பதவிக்கு வந்ததும், பைத்தியம் என்பீர்களா? வரும் தேர்தலில், தி.மு.க.,வினரின் திமிரை பெண்கள் அடக்குவர்.
தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப, எதிர்க்கட்சிகள் வேண்டாம்... இந்த மாதிரி எபிநேசர்களே போதும்!
அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணை செயலர் டாக்டர் சரவணன் அறிக்கை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, எங்கெல்லாம் பேசுகிறாரோ, அந்த கூட்டத்தில் காலி ஆம்புலன்ஸ்களை அனுப்பி, கூட்டத்தை திசை திருப்புகின்றனர். ஜெ., ஆட்சியில் ஆம்புலன்ஸ்கள், மக்கள் உயிர் காக்க பயன்பட்டன. ஆனால், இன்று ஸ்டாலின் அரசு, தேர்தல் காலங்களில் பணத்தை பட்டுவாடா செய்து பதுக்குவதற்கும், தற்போது பழனிசாமியின் எழுச்சி பயணத்தை திசை மாற்றம் செய்வதற்கும் பயன்படுத்துகிறது. காலி ஆம்புலன்ஸ் மூலம் அநாகரிக அரசியல் செய்யும் தி.மு.க.,வை, 2026 தேர்தலில் மக்கள் காலி செய்து வீட்டுக்கு அனுப்புவர்.
'சைரன்' ஒலிக்க ஓடும் ஆம்புலன்ஸ்களே, ஆளுங்கட்சி வெற்றிக்கு, 'சங்கு ஊதிடும்'னு எச்சரிக்கிறாரோ?