PUBLISHED ON : அக் 31, 2025 12:00 AM

அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: ஆசிய
 இளையோர் விளையாட்டு போட்டியில், தங்கம் வென்ற, இந்திய அணியில் இடம் 
பெற்றிருந்த சென்னை, கண்ணகி நகர் கார்த்திகா, திருவாரூர் அபினேஷ் மோகன்தாஸ்
 ஆகியோருக்கு தமிழக அரசு வழங்கிய, 25 லட்சம் ரூபாய் போதாது. 1 கோடி ரூபாய் 
ஊக்கத்தொகை வழங்க வேண்டும். சென்னையில் கார் ரேஸ் நடத்தி மகிழ்ந்தால் 
மட்டும் போதாது; தமிழகத்தின் பல்வேறு ஊர்களில், விளையாட்டு மைதானம் அமைத்து
 கொடுப்பதிலும் அரசு ஆர்வம் காட்ட வேண்டும். போன வருஷம், துணை முதல்வர் 
உதயநிதி முயற்சியால், சென்னையில் அரசே முன்நின்று நடத்திய கார் ரேஸை, இவங்க
 இன்னும் மறக்கலை போலிருக்கு!
  மா.கம்யூ., கட்சியின் மாநில செயலர் சண்முகம் அறிக்கை: மக்களின் ஓட்டுரிமையை பறிக்கும் பா.ஜ.,வின் சதி திட்டத்திற்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஆதரவு அளித்துள்ளார். அவரின் இந்த முடிவு வன்மையான கண்டனத்துக்குரியது. 'கண்ணைக் கட்டிக் கொண்டு கிணற்றிலே விழ வேண்டும்' என, பா.ஜ., சொன்னாலும், அதை ஏற்று செயல்படும், சுயசிந்தனை அற்ற மனிதராக பழனிசாமி மாறி விட்டார்.
அது சரி... தி.மு.க., கூட்டணியில் இருக்கும் இவங்க மட்டும், சுய சிந்தனையோடு செயல்படுறாங் களாமா?
தி.மு.க., ஆதரவாளரான, காமெடி நடிகர் எஸ்.வி.சேகர் பேட்டி: வரும் 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வே வெற்றி பெறும். காரணம், அக்கட்சி கூட்டணி பிளவுபடாமல் இருக்கிறது. சட்ட சபை தேர்தலை மட்டும் மையப்படுத்தி, தமிழக காங்கிரசார் பேசுகின்றனர். ஆனால், 2029ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் வெற்றி பெறுவதற்கு, தி.மு.க., கூட்டணி தேவை என்பதை உணர்ந்து, காங்கிரஸ் தலைவர்கள் சோனியாவும், ராகுலும் செயல்படுகின்றனர்.
வாஸ்தவம் தான்... தமிழகத்தில் எந்த காங்கிரஸ்காரர் எம்.எல்.ஏ., மற்றும் அமைச்சர் ஆனா என்ன, ஆகாட்டி என்ன...? அவங்களுக்கு ராகுல் பிரதமராகணும் என்பது தான் முக்கியம்!
 த.மா.கா., துணை தலைவர் முனவர் பாட்ஷா பேச்சு: காங்கிரசை விட்டு வெளியேறி, புதிய கட்சி ஆரம்பித்த யாரும், 10 ஆண்டுகளாக தொடர்ந்து கட்சி நடத்தவில்லை. த.மா.கா., மட்டுமே, 11வது ஆண்டு விழா கண்டுள்ளது. த.மா.கா.,வுக்கு அரசியல் எதிரி காங்கிரஸ்; கொள்கை எதிரி தி.மு.க., மட்டுமே. இந்த இரு கட்சிகளும் த.மா.கா.,வை அழிக்க துடிக்கின்றன. எனவே, வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியை தோற்கடிக்க, தி.மு.க.,வை எதிர்க்கக் கூடிய அனைத்து கட்சிகளையும் ஓர் அணியில் இணைக்கும் பொறுப்பை, வாசன் செய்ய வேண்டும்.
இந்த, 11 வருஷத்தில் வாசன் ராஜ்யசபா எம்.பி.,யா இருப்பது மட்டும் தான், இவங்க கட்சி செய்த ஒரே சாதனை!

