PUBLISHED ON : நவ 11, 2025 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சு: 'தி.மு.க.,
ஆட்சியில் நிறைகள் குறைவாகவும், குறைகள் அதிகமாகவும் உள்ளன' என, மக்களிடையே
விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த நான்கரை ஆண்டு கால, தி.மு.க.,
ஆட்சியில், விவசாயிகளுக்கு நிவாரண தொகை மற்றும் காப்பீட்டு தொகை
கிடைக்கவில்லை. துாய்மை பணியாளர்கள், டாக்டர்கள், வழக்கறிஞர்கள், அரசு
ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் போராடும் நிலையில்தான் இந்த ஆட்சியின்
அவலநிலை உள்ளது. மக்களின் அதிருப்தியை ஓட்டு வங்கியா மாற்றும் வித்தை,
இவங்க தலைமைக்கு இருக்கிறதா என்பது கேள்விக்குரியது!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில், 20 'ஹைட்ரோ கார்பன்' கிணறுகள் தோண்ட ஓ.என்.ஜி.சி., எனப்படும் இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு கடந்த மார்ச் 13ல், தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது; இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அதைத் தொடர்ந்து, 'அனுமதி திரும்ப பெறப்படும்' என, முதல்வர் ஸ்டாலினும், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவும் உறுதி அளித்தனர். காவிரி டெல்டா மாவட்டங்களை போல, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களையும் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
விவசாயத்தை அழித்து எத்தகைய வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்தாலும், அதனால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை!
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி: தமிழக அரசு பொதுக்கூட்டம் மற்றும், 'ரோடு ஷோ' நடத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதற்கு, வி.சி., தலைவர் திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தி.மு.க.,வினர் தான் தமிழகத்தில் ரோடு ஷோ நடத்தி வருகின்றனர். எனவே, தி.மு.க., - வி.சி., கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என தெரியவில்லை.
தேர்தல் நேரத்தில், இவரது கட்சியின் சார்பில் பிரதமர் மோடியும் ரோடு ஷோ நடத்துவாரே... அதுக்கு, 'செக்' வைக்க தான் இப்பவே தடுப்பை போடுறாங்க!
மயிலாடுதுறை மாவட்ட த.வெ.க., மகளிர் அணி இணை அமைப்பாளர் ஜான்சி ராணி பேட்டி: கட்சி மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள், கடந்த 3ம் தேதி அறிவிக்கப்பட்டனர். தலைமை அறிவித்த பட்டியலில் இருந்து ஏழு பேரை நீக்கி, புதிதாக ஏழு பேரை போலியாக சேர்த்து, ஆள்மாறாட்டம் செய்துள்ளனர். மாவட்ட செயலரிடம் கேட்டபோது உரிய பதில் இல்லை. பணம் வாங்கி கொண்டு இவ்வாறு செய்து உள்ளனர். த.வெ.க., தலைவர் விஜய் மூலம் நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறோம்.
'திராவிட கட்சிகளுக்கு மாற்று' எனக்கூறி அரசியலுக்கு வந்த இவங்களும், அவங்க செய்யும் தவறுகளையே செய்றாங்களே!

