PUBLISHED ON : பிப் 24, 2026 01:14 AM

அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணை செயலர் டாக்டர் சரவணன் அறிக்கை:
இன்று தி.மு.க.,வின் குடுமி காங்கிரஸ் கையில் உள்ளது. 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், தங்கள் கூட்டணி கட்சிகளின் 16.5 சதவீத ஓட்டுகளை வைத்து தான் தி.மு.க., வெற்றி பெற்றது. அதில், காங்., மட்டும் 10 சதவீத ஓட்டுகளை பெற்று தந்தது. அதேபோல, '2021 சட்டசபை தேர்தலிலும், காங்., கட்சிக்கு கிடைத்த ஓட்டுகளை வைத்து தான் தி.மு.க., ஆட்சியை பிடித்தது' என்றும் காங்., கட்சியின் முக்கிய புள்ளிகளே கூறி வருகின்றனர்.
'அச்சாணி இல்லாத தேர் முற்றிலும் ஓடாது' என்பது போல, 'காங்., மட்டும் கூட்டணியில் இல்லாவிட்டால், தி.மு.க.,வின் வெற்றி கேள்விக்குறி தான்'னு சொல்றாரோ?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி: தமிழக முதல்வரை நேரில் சந்திப்பதோ, தி.மு.க.,வில் இணைவதோ ஒருவருடைய தனிப்பட்ட விருப்பம். அதை விடுத்து, 'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆசியுடன் ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார்' என, பன்னீர்செல்வம் கூறியுள்ளார்; அவரது மனசாட்சியே இதை ஒப்புக் கொள்ளாது. ஒரு காலமும் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா ஆன்மாக்கள், பன்னீர்செல்வத்தை மன்னிக்காது; அதற்கான தண்டனை அவருக்கு நிச்சயம் உண்டு.
உங்க கட்சி வாசல்ல தவமாய் தவமிருந்தும், பன்னீர்செல்வத்தை கண்டுக்காம இருந்துட்டு, எதிர் முகாம் பக்கம் போனதும் இப்படி சாபம் விடுவது சரியா?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேட்டி:
தமிழக சட்டசபையில் பேசும்போது, 'அரசின் நிர்வாகம் சரியில்லை' என்று நாங்கள் சொன்னால், முதல்வர் ஸ்டாலினுக்கு கோபம் வருகிறது. ஆனால், மக்கள் குறைகளை பற்றி பேசாமல், ஸ்டாலினுக்கு ஜால்ரா போடும் தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு பேச அனுமதி தரப்படுகிறது. கோவிலில் பஜனை பாடி னால் புண்ணியம் வந்து சேரும்; ஸ்டாலினுக்கு பஜனை பாடினால், பாவம் தான் வந்து சேரும்.
முதல்வர் ஸ்டாலின் புகழ் பாடினால், பாவ, புண்ணியம் வருதோ, இல்லையோ... ஆனா, பாடியவங்க கேட்கும் தொகுதிகள் கூட்டணியில் லட்டு கணக்கா கிடைச்சிடும்.
இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு.தமிழரசன் பேச்சு:
ஜனநாயக ரீதியில், தேர்தலில் எங்களுக்கு பிரதிநிதித்துவம் தேவை என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதனால், ஒவ்வொரு தேர்தலிலும் அதை பின்பற்றி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறோம். யாருடன் கூட்டணி என்பதை, வரும் 26ல் சென்னையில் நடக்கும் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்து அறிவிப்போம்.
இவர் ஒருத்தர் மட்டும் வாங்கப் போற ஒரே ஒரு சீட்டுக்காக, இவ்வளவு, 'பில்டப்' தேவையா?

