PUBLISHED ON : மே 29, 2026 12:00 AM

மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., பேட்டி:
தமிழகத்தை தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் மாறி மாறி ஆட்சி செய்ய வேண்டும்
என்பதே எங்கள் கட்சியின் நிலைப்பாடு. தமிழகத்தை மதவாத கட்சிகளிடம் இருந்து
காப்பாற்றும் ஆளுமை மிக்க கட்சி தி.மு.க., மட்டுமே. தி.மு.க.,வும்,
அ.தி.மு.க.,வும் மாறி மாறி ஆட்சியில் இருந்தால் தான், அவங்களுடன் கூட்டணி
சேர்ந்து நம்ம வண்டி ஓடும்னு நினைக்கிறாரோ?
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: கடந்த இரண்டு வாரங்களுக்குள் ஆறாவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பது, நாடு முழுதும் மக்களிடையே கடும் அதிருப்தியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது, சாதாரண மக்களின் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கும் பொருளாதார தாக்குதல். இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால், மக்களின் கடும் எதிர்ப்பை மத்திய அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கும்,
இப்போதைக்கு எந்த தேர்தலும் இல்லை என்பதால், விலை உயர்வை மத்திய பா.ஜ., அரசு வாபஸ் வாங்காது!
பாரதிய, 'டாஸ்மாக்' தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெயகுமார் அறிக்கை: பூரண மதுவிலக்கை அமல்படுத்தி, 'டாஸ்மாக்' பணியாளர்களை மற்ற அரசு துறைகளில் பணியமர்த்தி நிரந்தரப்படுத்த, முதல்வர் விஜய் முன்வர வேண்டும். சொற்ப சம்பளம் வாங்கும் டாஸ்மாக் பணியாளர்களை தவறுகள் செய்ய வைத்து, அதன் மூலம் பலன் பெற்ற கடந்த ஆட்சியாளர்களாலும், நிர்வாகத்தாலும் டாஸ்மாக் பணியாளர்களின் வாழ்வாதாரம் அல்லல்பட்டு வந்தது. அவர்களின் நலனை கருத்தில் வைத்து, இப்பணியை மேற்கொள்ள வேண்டும்.
சமீபத்தில் மூடிய 717 டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கே மாற்று பணியிடம் வழங்க திண்டாடும் சூழல்ல, இவரது கோரிக்கை எடுபடுமா?
தி.மு.க., செய்தி தொடர்புக்குழு துணை தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை: முதல்வர் பதவி என்பது, காலை 10:00க்கு வந்து, மாலை 5:00 மணிக்கு முடித்துக் கொள்ளும் அலங்கார உத்தியோகம் அல்ல; அது, விழிப்போடும் துடிப்போடும் இருந்து, இரவு பகல் பாராது, இமை சோராது, மக்களுக்காக உழைக்கும் தன்னார்வ சேவை. ஒரு தாயுமானவராக, தகப்பன்சாமியாக தன்னை உணர்ந்து, தனக்கான நிழலை பிறருக்கு தந்து, பிறருக்கான வெயிலை, தான் ஏற்கும் தியாக தொண்டூழியம். இதை முகமலர்ச்சியோடு செய்தது ஸ்டாலின். இதை, வரப்போகும் ஒவ்வொரு வினாடியிலும் மக்கள் உணர்வர்.
இப்படி ரொம்பவும் சிரமப்பட வேண்டாம்னு தான், ஸ்டாலினுக்கு மக்கள் ஓய்வு குடுத்துட்டாங்களோ?
