PUBLISHED ON : ஜூலை 12, 2026 12:32 AM

தமிழக மின் துறை அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி:
முதல்வர் விஜய் தலைமையில், மீண்டும் தோழமை கட்சிகளின் கூட்டம் நடத்தி, புதிய கூட்டணியின் பெயர், செயல் திட்டம் உள்ளிட்டவை முடிவு செய்யப்படும். தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதிக்கு, இப்போது வீட்டில் எந்த வேலையும் இல்லை என்பதால், ஏதாவது வழக்கு போட்டு கொண்டிருக்கிறார். தி.மு.க.,விலும், அ.தி.மு.க.,விலும் இன்னும் சில மாதங்களில், பத்து பதினைந்து பேரை தவிர, வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.
உங்க கருத்தை பார்த்தால், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களும், உங்க கட்சி அலுவலகம் இருக்கும் சென்னை, பனையூருக்கு படையெடுக்க தயாராகிட்டாங்களோ என்ற சந்தேகம் வருதே!
பு திய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி அறிக்கை: கரூரில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில், 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், முக்கிய சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள அந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை தருவதால், அவர்களால் நேர்மையான சாட்சியங்களை வழங்க முடியாது. அனைவரும் பிறழ் சாட்சிகளாக மாறி விடுவர். அதனால், உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போய் விடலாம். எனவே, 41 பேரின் மரணத்திற்கு நீதி கிடைக்காமலும் போய்விடும்.
'அந்த, 41 குடும்பங்களின் வாழ் வாதாரத்தையும் பார்க்கணும்'னு, த.வெ.க.,வினர் சொல்றதுலயும் நியாயம் இருக்கே!
காங்., தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர் அறிக்கை: கர்நாடக காங்கிரஸ் அரசின் நீர்ப்பாசன துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, 'தமிழகத்திற்கு தண்ணீர் தர இயலாது' என மறுப்பது, உச்ச நீதிமன்ற உத்தரவை நேரடியாக அவமதிக்கும் செயல். 'பருவமழை பொய்த்து விட்டது' என அவர் கூறும் காரணம், நம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதற்கு வழங்கப்பட்ட உரிமம் அல்ல. உச்ச நீதிமன்றத்தின் 2018ம் ஆண்டின் இறுதி தீர்ப்பை கர்நாடகாவிற்கு நினைவூட்டுகிறோம்.
நீங்க, இப்படி பக்கம் பக்கமா அறிக்கை விடுறதுக்கு பதிலா, ஒரு நடை டில்லி போய் ராகுலை பார்த்து, 'தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவு போடுங்க'ன்னு சொல்லிட்டு வந்துடலாமே!
திருச்சி ம.தி.மு.க., - எம்.பி., துரை வைகோ பேட்டி: அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசை எதிர்ப்பது வேறு; நிர்வாக ரீதியான ஒத்துழைப்புடன் செயல்படுவது வேறு. மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாமல், தமிழகத்தில் வளர்ச்சி பணிகளை முன்னெடுப்பது கடினம். முதல்வர் விஜய் அரசு, நிர்வாக ரீதியான மோதல் போக்கை தவிர்த்து, மாநில நலன் சார்ந்த விவகாரங்களில் இணக்கமாக செயல்படுவதில் உறுதியாக உள்ளது.
வாஸ்தவம் தான்... வீம்புக்கு மத்திய அரசுடன் மல்லுக்கட்டிய கடந்த தி.மு.க., அரசால், தமிழகம் பாதிக்கப்பட்டது தான் மிச்சம்!
