PUBLISHED ON : ஜூலை 14, 2026 12:00 AM

காங்., தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர் பேட்டி: 'நீட்' தேர்வை காங்கிரஸ் கட்சி தொடக்கத்திலிருந்தே எதிர்த்து வருகிறது. கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை பாதிக்கும் இந்தத் தேர்வு, தனியார் கல்வி நிறுவனங்களின் நலனுக்காக நடத்தப்படுகிறது. நீட் தேர்வு அச்சத்தால், தமிழகத்தில் 37க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தது வேதனையளிக்கிறது. 2029 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடு, முழுதும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.
உங்க கட்சி, மத்தியில ஆட்சி செஞ்சப்ப தானே, 'நீட்' மசோதா அறிமுகம் ஆச்சு; அப்போதைய தி.மு.க., இணை அமைச்சர் காந்தி செல்வன் தான், முழுமூச்சா இதற்கு வேலை செஞ்சாரு... மறந்திருச்சோ?
பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு: தமிழகத்தில் பா.ஜ.,வை எதிர்க்க தி.மு.க.,வும், த.வெ.க.,வும் ஒரே அணியாக செயல்பட வேண்டும் என்ற திருமாவளவனின் கருத்து, பா.ஜ., வளர்ச்சியால் எதிர்க்கட்சிகள் அச்சமடைந்துள்ளதை காட்டுகிறது. பிரதமர் எந்தக் கட்சியையும் குறிவைக்காமல் நாட்டை அமைதியாக வழிநடத்தி வருகிறார். வரும் லோக்சபா தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நிலையிலேயே எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன. ஆனால், அவர்களின் வியூகம் வெற்றி பெறாது.
வி.சி.க., தலைவர் திருமாவளவனின் கருத்து, தமிழகத்தில் பா.ஜ.,வின் வளர்ச்சிக்கு சான்றிதழ் கொடுத்துட்டுன்னு குஷியாகிட்டிங்களோ? ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை: கரூரில் நான்கு பிரதான கோவில்களின் 3,084 ஏக்கர் நிலங்கள், கோவிலின் பொருளாதாரம் மற்றும் கோவிலுக்கு சேவை செய்யும் மக்கள் வாழ்வதற்கு தரப்பட்டவை. ஆனால், காலப்போக்கில் அப்பாவி மக்களை ஏமாற்றி, பணத்தாசை காட்டி சட்டவிரோதமாக பலர் ஆக்கிரமித்துள்ளனர். கோவில் சொத்துக்கள் பறிபோவதற்கு துணைபோகும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியை, ஹிந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
கோவில் நில விவகாரம் இப்ப தேர்தல் அரசியலாக மாறிடுச்சு... இனி உச்ச நீதிமன்றம் தான் தீர்ப்பு கொடுக்கணும் போலிருக்கு!
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் பேட்டி: கரூர் சம்பவத்தில் போலீசார் மீது குற்றஞ்சாட்டும் முதல்வர் விஜய், காவல் துறையை தன்னிடமே வைத்திருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கரூரில் பேசிய முதல் வரின் பேச்சிலோ, உடல் மொழியிலோ எந்த துக்கமும் வெளிப்படவில்லை; அகம்பாவம், ஆணவம் தான் தெரிகிறது. அ.தி.மு.க., - தி.மு.க.,வை கூட்டுக் களவாணி என கூறும் விஜய் தான், அ.ம.மு.க., மற்றும் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை ராஜினா மா செய்ய வைத்து, கள வாணித்தனம் செய்தவர்.
ஆனா, 2018ல் அ.தி.மு.க.,வை யே உடைச்சு, அ.ம.மு.க.,வை ஆரம்பிச்ச நீங்களும் இதைத் தானே செஞ்சீங்க!
