/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
ஒன்றரை ஏக்கர் சாகுபடியில் ரூ.75,000 லாபம்!
/
ஒன்றரை ஏக்கர் சாகுபடியில் ரூ.75,000 லாபம்!
PUBLISHED ON : மே 05, 2024 12:00 AM

குத்தகைக்கு எடுத்த 5 ஏக்கர் நிலத்தில், இயற்கை விவசாயம் செய்து வரும், புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே உள்ள மங்கனுாரில் வசித்து வரும் ஞானகுரு:
எங்கள் குடும்பத்தில் யாருமே விவசாயத்தில் ஈடுபட்டது கிடையாது. நான் ஒன்பதா-ம் வகுப்பு வரைக்கும் தான் படிச்சேன். அதன்பின் படிக்க பிடிக்கவில்லை. மாவு மில்லுக்கு வேலைக்கு போனேன். 15 ஆண்டு கள் மலேஷியாவில் வேலை பார்த்தேன். 2016-ல் சொந்த ஊருக்கு திரும்பி வந்தேன். போன வருஷம் 5 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு பிடித்து, இயற்கை விவசாயம் செய்ய துவங்கினேன்.
கடந்த கார்த்திகை பட்டத்தில் 1 ஏக்கரில் குஜராத் - 7 ரக நிலக்கடலை பயிர் செய்தேன். 95-ம் நாள் அறுவடைக்கு வந்தது. 40 கிலோ கொண்டது ஒரு மூட்டை. எனக்கு 22 மூட்டை மகசூல் கிடைத்தது. இது, குறைவான மகசூல் தான். எங்கள் பகுதியில் இயற்கை விவசாயம் செய்யக்கூடிய சில விவசாயிகள், ஏக்கருக்கு 30 மூட்டைக்கு மேல் மகசூல் எடுக்கின்றனர்.
மண்ணை நல்லா வளப்படுத்தினால் தான், அடுத்தடுத்த ஆண்டுகளில் எனக்கும் அந்தளவுக்கு மகசூல் கிடைக்கும்னு உறுதியாக நம்புகிறேன். மொத்தம் கிடைத்த 880 கிலோ கடலையை வெயிலில் காய வைத்து, தோல் நீக்கிய பின், 550 கிலோ பருப்பு கிடைத்தது. அதை அப்படியே முழுமையாக ஒரே வியாபாரிகிட்ட ஒரே தடவையில் விற்பனை செய்திருந்தால், இயன்ற வரைக்கும் விலையை குறைக்க முயற்சி செய்வாங்க. அது மாதிரி நடந்துடக் கூடாதுன்னு தான் பிரித்து விற்பனை செய்தேன்.
இதில் கிலோவுக்கு, 130 ரூபாய் வீதம், 550 கிலோ கடலை பருப்பு விற்பனை செய்ததன் வாயிலாக, 71,500 ரூபாய் வருமானம் கிடைத்தது. எல்லா செலவுகளும் போக, 40,000 ரூபாய் லாபம் கிடைத்தது. அரை ஏக்கரில், 10 கிலோ பலதானிய விதைகளை விதைப்பு செய்து, 45-ம் நாள் பூ பூக்கும் தருணத்தில் மடக்கி உழுதேன். அதற்கு பின், அடியுரமாக, 500 கிலோ செறிவூட்டப்பட்ட எரு போட்டு, நல்லா உழவு ஓட்டி, பார் அமைத்து, சின்ன வெங்காயம் விதைப்பு செய்தேன்.
மேலுரமாக புண்ணாக்கு கரைசல், உயிர் உரங்கள், இ.எம்., கரைசல், திராட்சை அமிலம் உள்ளிட்ட இயற்கை இடுபொருட்கள் கொடுத்தேன். பயிர்கள் நல்லா செழிப்பாக விளைந்தன. 70-ம் நாள் அறுவடை செய்தேன். அரை ஏக்கரில், 800 கிலோ சின்ன வெங்காயம் மகசூல் கிடைத்தது. இதில், எல்லா செலவுகளும் போக, 35,000 ரூபாய் லாபம் கிடைத்தது.
ஆக 1 ஏக்கர் நிலக்கடலை, அரை ஏக்கர் சின்ன வெங்காயம் சாகுபடி வாயிலாக, 75,000 ரூபாய் லாபம் கிடைச்சிருக்கு. இது, என்னை பொறுத்தவரைக்கும் நிறைவான லாபம்.
தொடர்புக்கு: 96267 43459.
ஆறுதல் சொல்லுங்க அவங்க கஷ்டத்தில் பாதி தீர்ந்துடும்!
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி எம்.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தற்காலிக மருந்தாளுனராக பணிபுரிந்து, சிறந்த சமூக சேவகருக்கான கவர்னர் விருதை பெற்றிருக்கும் ரஞ்சித்குமார்:
பெரம்பலுார் தான் பூர்வீகம். என் பெற்றோர், வால்பாறை எஸ்டேட்டில் தோட்டத் தொழிலாளர்களாக இருந்தனர். கூடப்பிறந்தவங்க மூன்று ஆண்கள், மூன்று பெண்கள் என, பெரிய குடும்பம்.அப்பா, அம்மாவோட வருமானத்தில் அரைவயிறு சாப்பிடுறதே போராட்டம் தான்.
பிள்ளைகளாவது பசியில் இருந்து மீளட்டுமேன்னு, பெரம்பலுாரில் உள்ள ஆதரவற்றோர் விடுதியில் சேர்த்து படிக்க வெச்சாரு அப்பா. அங்கேயிருந்து தான் டி.பார்ம்., வரைக்கும் படிச்சேன்.படிப்பை முடித்துவிட்டு மூன்று ஆண்டுகள் தேயிலைத் தோட்டத்தில் கூலியாக இருந்தேன். அதன்பின் தான் எஸ்டேட் மருத்துவமனையில் மருந்தாளுனர் வேலை கொடுத்தனர். பல பேரோட கருணையால் வளர்ந்தவன் நான்.
டி.பார்ம்., படிக்குறப்போ கண்ணு முன்னாடி ஒரு பெரியவர் கீழே விழுந்தார்; கை கால் இழுத்துக்கிச்சு. முதலுதவி செய்து மருத்துவமனையில் சேர்த்துட்டு, கைப்பையில் இருந்த போன் நம்பர் வாயிலாக குடும்பத்துக்கு தகவல் கொடுத்தேன். ஒரு வாரம் கழிச்சு அந்த முதியவர் குடும்பம், என்னை அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய் டிரஸ் எல்லாம் வாங்கிக் கொடுத்தாங்க. இப்பவும் அவங்க குடும்பத்தில் நானும் ஒருத்தனாக இருக்கேன்.
அந்த சம்பவத்துக்கு பின், என்னை சுற்றி இருக்கும் மனிதர்களை கவனிக்க துவங்கினேன். பஸ் ஸ்டாண்டில் யாராவது ஆதரவில்லாமல் படுத்திருந்தால், பக்கத்தில் உட்கார்ந்து பேசுவேன். போர்வை வாங்கி தருவேன். பிள்ளைங்க மேல கோபத்துல வந்தவங்க, பிள்ளைகளோட புறக்கணிப்பால் வந்தவங்க என, ஒவ்வொருத்தருக்கும் ஒரு கதை இருக்கும். சில பேரை குடும்பத்தோட இணைச்சிருக்கேன்.
ஒருத்தருக்கு உதவுறதுக்காக, இன்னொருத்தர்கிட்ட உதவி கேட்க தயங்கவே மாட்டேன். இல்லேன்னு சொன்னாலும் கவலைப்பட மாட்டேன். என் மனைவி, ஆதரவற்றோர் இல்லத்தில் காப்பாளராக இருந்தவர்.குழந்தைகள் மீது அவர் காட்டிய அன்பும், அக்கறையும் என்னை கவர, இருவீட்டார் சம்மதத்தோடு இல்லறத்தில் இணைந்திருக்கிறோம்.
எங்க இரண்டு பேரையும் பிழைக்க தெரியாதவங்க, கோமாளிகள் என, பலர் கிண்டல் செய்வர். அதையெல்லாம் நாங்கள் கண்டுக்கிறதே இல்லை.காசு, பணமெல்லாம் பெரிய பிரச்னையில்லை. கஷ்டம்னு தவிச்சு நிக்குற மனுஷனுக்கு பக்கத்தில் நின்னு, 'நான் இருக்கேன், கவலைப்படாதீங்க'ன்னு ஆறுதல் சொல்லி பாருங்க... அவங்க கஷ்டத்தில் பாதி தீர்ந்திடும்.
20 சதவீத வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு நிலுவை
புதுடில்லி : நான்காம் கட்ட லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில், 21 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாக, ஏ.டி.ஆர்., எனப்படும், ஜனநாயக சீர்திருத்த சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, அசாம், அருணாச்சல், பீஹார், சத்தீஸ்கர் உள்ளிட்ட 21 மாநிலங்களில், 102 தொகுதிகளுக்கு, ஏப்., 19ல் முதற்கட்டமாக லோக்சபா தேர்தல் நடந்தது.
இதைத் தொடர்ந்து, கேரளா, கர்நாடகா, ம.பி., - ராஜஸ்தான் உள்ளிட்ட 13 மாநிலங்களில், 88 தொகுதிகளுக்கு, ஏப்., 26ல், இரண்டாம் கட்டமாக நடந்த தேர்தலில்
ஓட்டுப்பதிவு நடந்தது. அசாம், பீஹார், மஹாராஷ்டிரா உள்ளிட்ட 12 மாநிலங்களில், 94 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்ட லோக்சபா தேர்தல் நாளை மறுநாள்
நடக்கிறது.
ஆந்திரா, ஜார்க்கண்ட், ம.பி., உள்ளிட்ட 10 மாநிலங்களில், 96 தொகுதிகளுக்கு, வரும் 17ல் நான்காம் கட்ட லோக்சபா தேர்தல் நடக்கிறது. இந்த நான்காம் கட்ட தேர்தலில், மொத்தம், 1,717 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில், 1,710 பேர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களை, ஏ.டி.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆய்வு செய்தது. இதனடிப்படையில், ஏ.டி.ஆர்., நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
மொத்தம், 1,710 வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதில், 360 வேட்பாளர்கள் அதாவது, 21 சதவீத பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. 17 பேர் குற்றவாளிகள் என, நீதிமன்றங்களால் அறிவிக்கப்பட்டவர்கள். மேலும், 11 பேர் மீது கொலை வழக்குகள்; 30 பேர் மீது கொலை முயற்சி வழக்குகள்; 50 பேர் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் மற்றும் ஐந்து பேர் மீது பலாத்கார வழக்குகள் உள்ளன.
பா.ஜ., 70 வேட்பாளர்களில், 40 பேர்; காங்., 61 வேட்பாளர்களில் 35 பேர்; பாரத் ராஷ்ட்ர சமிதி 17 வேட்பாளர்களில் 10 பேர்; ஒய்.எஸ்.ஆர்.காங்., 25 வேட்பாளர்களில் 12 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
மொத்தமுள்ள 1,710 வேட்பாளர்களில், 476 பேர் கோடீஸ்வரர்கள். தெலுங்கு தேசம் வேட்பாளர் டாக்டர் சந்திர சேகர் பெம்மாசானி, 5,700 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், கோடீஸ்வர
வேட்பாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதே சமயம், 24 வேட்பாளர்கள் தங்களது சொத்து மதிப்பு பூஜ்யம் என, அறிவித்துள்ளனர்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு
உள்ளது.