/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
சுற்றுச்சூழல் நலன்களுக்கு சிறு பங்களிப்பு!
/
சுற்றுச்சூழல் நலன்களுக்கு சிறு பங்களிப்பு!
PUBLISHED ON : செப் 13, 2024 12:00 AM

சிமென்ட், இரும்பு கம்பி பயன்படுத்தாமல், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் வீடு கட்டியுள்ள தர்மபுரி மாவட்டம், நாகர்கூடல் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்:
வங்கி ஒன்றில் சீனியர் மேனேஜராக இருந்தேன். இயற்கையுடன் இயைந்து வாழ வேண்டும் என்ற ஆசையால், இந்த கிராமத்தில், 2 ஏக்கர் நிலம் வாங்கி, ஐந்து ஆண்டு களுக்கு முன் வீடு கட்டி வாழ ஆரம்பித்தோம். குழந்தைகளை இங்குள்ள அரசு பள்ளியில் சேர்த்துள்ளோம்.
வங்கி பணியை இரண்டு ஆண்டுகளுக்கு முன் ராஜினாமா செய்து விட்டேன். பென்ஷன் வருகிறது. எங்கள் குடும்பத்திற்கான தினசரி செலவுகளை சமாளிக்க பென்ஷன் போதுமானது.
பெருநகரங்களில் வாழ்க்கை நடத்தினால் வீட்டு வாடகை, பள்ளி கட்டணம், போக்குவரத்து உள்ளிட்டவற்றிற்கு நிறைய பணம் தேவைப்படும்.
இங்கு வசிப்பதால் அந்தளவிற்கு பணம் தேவைப்படவில்லை. எங்கள் குடும்பத்திற்கு தேவையான காய்கறிகள், சிறுதானியங்களை இயற்கை விவசாயத்தில் உற்பத்தி செய்து வருகிறேன்.
துாய்மையான காற்று, ஆரோக்கியமான குடிநீர், எப்போதும் அமைதியான சூழல் என நிம்மதியாக வாழ்ந்து வருகிறோம்.
இந்த வீட்டை வட்ட வடிவில் கட்டி இருப்பதால், கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் ரொம்ப குறைவாக இருக்கும். வீட்டோட மொத்த பரப்பு தரைதளம், மேல் தளம் இரண்டும் சேர்த்து 3,600 சதுர அடி. இதை கட்ட அதிகபட்சம் 45 லட்சம் ரூபாய் செலவானது.
காரணம், சிமென்ட், கம்பி, டைல்ஸ், பெயின்ட் எதுவும் பயன்படுத்தவில்லை. சுவர்கள் எழுப்புதற்கு செங்கல், மண் தான் பயன்படுத்தி உள்ளோம்.
சுவர்களின் மேல் பூச்சுக்கு கடுக்காய், சுண்ணாம்பு, சாணம் கலந்த கலவை தயார் செய்து மெழுகி இருக்கிறோம். இலைதழைகளில் இருந்து சாறு எடுத்து, சுவர்களில் ஓவியங்கள் வரைஞ்சிருக்கோம்.
மேற்கூரை அமைப்பதற்கு கான்கிரீட்டுக்கு மாற்றாக, மெட்ராஸ் டெரஸ் ரூபிங் முறையில் ஓடுகள் பயன்படுத்தினோம்.
தண்ணீரை சிக்கனப்படுத்தவும், மனிதக் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசடைவதை தவிர்ப்பதற்காகவும் உலர் கழிப்பறை அமைத்திருக்கிறேன்.
கழிவுகள் மக்கி விட்டால், சிறிது கூட துர்நாற்றம் இருக்காது. அதை எங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு உரமாக பயன்படுத்திக்குவோம்.
கூரையில் விழக்கூடிய மழைநீரை சேகரித்து பயன்படுத்த, மழை நீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்தி உள்ளோம். இதற்கான தொட்டியில் 70,000 லிட்டர் தண்ணீர் சேமித்து வைக்கலாம்.
ஆண்டுக்கு மூன்று முறை மழை பெய்தாலே போதும்... ஐந்து மாதத்திற்கான தண்ணீர் தேவையை நிறைவு செய்து விடும். சுற்றுச்சூழல் நலன்களுக்கு ஏதோ எங்களால் முடிந்த சிறு பங்களிப்புகளை செய்துள்ளோம்.
தொடர்புக்கு:
98427 78775

