/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
மேலும் சில ரயில் நிலையங்கள் பெண்களிடம் வரும்!
/
மேலும் சில ரயில் நிலையங்கள் பெண்களிடம் வரும்!
PUBLISHED ON : மே 08, 2024 12:00 AM

மஹாராஷ்டிர மாநிலம், மும்பை, மாட்டுங்கா ரயில் நிலையத்தில் பணியாற்றும் ஸ்டேஷன் மேலாளர் சரிகா சாவந்த்:
உலகிலேயே, அதிகமான பெண்கள் பணியாற்றும் ரயில்வே துறை, நம் இந்திய ரயில்வே. ஒரு லட்சத்துக்கும் அதிகமான பெண் ஊழியர்கள் இதில் பணிபுரிந்து வருகின்றனர்.
மும்பையில் உள்ள மாட்டுங்கா ரயில் நிலையம், முழுக்க பெண்களால் நிர்வகிக்கப்படும் ரயில் நிலையம் என்ற பெருமைக்குரியது.
இங்கு பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் பெண்கள்; டிக்கெட் கொடுப்பவர், டிக்கெட் பரிசோதகர், பராமரிப்புப் பணி செய்பவர்கள் என, சுற்றிலும் பெண்கள் தான்.
நாட்டிலேயே முதன் முறையாக 2017-ல், முழுக்க பெண்கள் பணியாற்றும் ரயில் நிலையமாக இது செயல்பட துவங்கி, 24 மணி நேரமும் பெண்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
நான் கடந்த ஆகஸ்ட் மாதம் தான் இங்கு மாற்றலாகி வந்தேன். இங்கு முற்றிலும் பெண்களுடன் பணியாற்றுவது, புதுமையான மற்றும் உற்சாகமான அனுபவமாக இருக்கிறது. எங்களால் மிகவும் சுதந்திரமாக பணியாற்ற முடிகிறது.
நம்மால் முடியாதது எதுவும் இல்லை என்ற தன்னம்பிக்கை, இங்குள்ள ஒவ்வொரு பெண்ணிடமும் மலையளவு வளர்ந்திருப்பதை பார்க்கிறேன்.
இங்கு மொத்தம், 35 பெண்கள் பணியாற்றுகிறோம். ரயில் நிலைய ஆப்பரேஷன், தொலைத் தொடர்பு மற்றும் பாதுகாப்பு என, பெண்கள் பரபரப்புடன் வேலை செய்வதை நீங்கள் பார்க்கலாம். எந்த ஓர் அலுவல் பிரச்னையாக இருந்தாலும் எங்களுக்குள் கலந்து ஆலோசித்து கொள்கிறோம்.
ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் மட்டும் இங்கு ஆண்கள். தேவைப்பட்டால் அருகில் உள்ள நிலைய ஊழியர்கள் எங்களுக்கு உதவுகின்றனர். இதுவரை எங்களுக்கு எந்த பாதுகாப்பு பிரச்னையும் ஏற்பட்டதில்லை.
சில நேரங்களில், போதை ஆசாமிகளால் சிறு சிறு பிரச்னைகள் வருவதுண்டு. அதையெல்லாம் நாங்கள் கையாளக் கற்றுக்கொண்டு விட்டோம்.
'ஆல் வுமன்' ரயில் நிலையம் என்ற சிறப்பில், மாட்டுங்கா ரயில் நிலையத்துக்கு ஜூனியர், நாக்பூர் அருகில் உள்ள அஜ்னி ரயில் நிலையம். 2018-ல் இருந்து இங்கும் அனைத்து ஊழியர்களும் பெண்களே. இங்கு, ரயில்வே பாதுகாப்பு படையிலும் பெண்களே பணியாற்றுகின்றனர்.
இது, பெண்களுக்கான அங்கீகாரம் கொடுக்கும் எங்களது முயற்சி. மாட்டுங்கா ரயில் நிலையத்தை பெண்கள் சிறப்பாக நடத்துவதை தொடர்ந்து, மேலும் இரண்டு ரயில் நிலையங்களிலும், 'ஆல் வுமன்' திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
வரும் காலத்தில், மேலும் சில ரயில் நிலையங்கள் பெண்களிடம் ஒப்படைக்கப்படும்.

