/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
தலைமுறையின் சொத்தாக மாறிய பிள்ளைகள் படிப்பு!
/
தலைமுறையின் சொத்தாக மாறிய பிள்ளைகள் படிப்பு!
PUBLISHED ON : மார் 15, 2025 12:00 AM

சென்னை தி.நகர், வெங்கட் நாராயணா சாலையில் நடைபாதை ஓரம், எம்.வி.உணவகம் நடத்தி வரும் மணிவண்ணன் - கிரிஜா தம்பதி:
கிரிஜா: என் சொந்த ஊர், திருவள்ளூர் மாவட்டம், கண்ணம்பாக்கம் கிராமம். அத்தை மகனையே திருமணம் செய்து கொண்டேன்; 30 ஆண்டுகளுக்கு முன் என் கணவர், சென்னையில் இளநீர் கடை ஆரம்பித்தார். அதன்பின் பழக்கடை, ஜூஸ் கடை, சாப்பாட்டு கடை என கால ஓட்டத்துக்கு தகுந்த மாதிரி தொழிலை மாற்றிக்கொண்டே இருந்தார்.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன், கணவருக்கு விபத்து ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டு வந்தார். அடுத்து நெஞ்சு வலி ஏற்பட்டது. இனியும் இவரை தனியாக விட்டால் நல்லா இருக்காது என்று எண்ணி, நானும் சென்னைக்கு வந்து விட்டேன்.
வந்ததுமே, வீட்டிற்கு பக்கத்திலேயே சாப்பாட்டு கடை ஆரம்பித்தோம். காலை 4:00 மணிக்கு சமைக்க ஆரம்பித்து, 7:00 மணிக்கெல்லாம் டிபன் தயாராகி விடும். அதை முடித்து, 1:00 மணிக்கு மதிய சாப்பாட்டுக்கான வியாபாரம் துவங்கும்.
காய்கறி வெட்டுறது, அரைக்கிறது, பொருள் வாங்குவதை அவர் பார்த்துக் கொள்வார். ஒரு நாளைக்கு 7,000 ரூபாய் வரை விற்பனை நடக்கும்.
பிள்ளைகளை நன்கு படிக்க வைத்து, நல்ல வேலையில், நல்ல சம்பளமும் வாங்குகின்றனர்; திருமணமும் முடித்து வைத்து விட்டோம். 'எங்களுடன் வந்து இருங்கள்' என கூறுகின்றனர். ஆனால், 'உனக்கு நான் எனக்கு நீ' என்று வாழும் இந்த வாழ்க்கையும் அழகாக இருக்கிறது.
மணிவண்ணன்: என், 4 வயதில் அப்பாவை இழந்து விட்டேன். உடன்பிறந்தோர் ஏழு பேர்.
கையில் 10 காசு இல்லாமல் அவ்வளவு கஷ்டப்பட்டோம். அப்பாவுக்கு தெரிந்த ஒருவர் சென்னையில் இளநீர் வியாபாரம் செய்து வந்தார். 10 வயதில் அவருடன் சென்னைக்கு வந்தேன்; 20 வயது வரை கூலி வேலை பார்த்தேன்.
பின், தனியாக வந்து இளநீர் வியாபாரம் ஆரம்பித்தேன். சிறு வயதில், அம்மா காசுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டாங்க என்று தெரியும். அதனால், மனைவியை கஷ்டப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான் என் லட்சியம். நாங்கள் இருவருமே படிக்கவில்லை. அதனால், எங்கள் பிள்ளைகளை நன்கு படிக்க வைத்தோம்.
எங்கள் மகன் எம்.காம்., முடித்து விட்டு வெளிநாட்டு கம்பெனி ஒன்றில் வேலை செய்கிறார். பொண்ணு பிஎச்.டி., படிக்கிறாங்க. தற்போது வரை, நாங்கள் ஒரு விண்ணப்பம் நிரப்ப வேண்டும் என்றால் கூட யாரையாவது தேட வேண்டியிருக்கு.
ஆனால், எங்கள் பிள்ளைகள் படித்த படிப்பு, எங்கள் தலைமுறைக்கான சொத்தாக மாறி இருக்கிறது.