/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
பணத்தை விட முயற்சி தான் முக்கிய தேவை!
/
பணத்தை விட முயற்சி தான் முக்கிய தேவை!
PUBLISHED ON : பிப் 25, 2025 12:00 AM

ஈரோடு மாவட்டம், நல்லுார் பக்கத்தில் உள்ள புளியம்பட்டியை சேர்ந்த, வனத்துறை அதிகாரி பிரதீபா: எங்கள் ஊரில், ஆண்கள் கல்லுாரிக்கு செல்வதே பெரிய விஷயம்; அப்படி எனில், பெண்கள் நிலையை யோசித்து பாருங்கள்!
அப்பா, கூலி வேலை; அம்மா இல்லத்தரசி. நாங்கள் மூன்று பெண் குழந்தைகள். பள்ளி விட்டு வரும் போது அக்காவையும், என்னையும் வீட்டு வேலைகளை பார்க்க விடாமல், 'நீங்க போய் படிங்க' என, அம்மா சொல்வார். 'பொம்பள புள்ளைங்க சொந்த காலில் நிற்க வேண்டும்' என்று, அப்பா கூறுவார்.
கோவை அரசு கல்லுாரியில் தான் சேர்ந்தேன். கல்லுாரி பேராசிரியர் தான் போட்டி தேர்வுகளுக்காக மாணவர்களுக்கு வகுப்பு நடத்தினார். 'அரசு அதிகாரிகள் நினைத்தால் எளிய மனிதர்களின் வாழ்க்கையை மாற்ற முடியும். அப்படி ஓர் அதிகாரியாக நீங்கள் வர வேண்டும்' என்று சொல்வார். அவருடைய வகுப்பை தவிர, அரசு போட்டி தேர்வுகளுக்காக, வேறு எந்த பயிற்சி மையத்திலும் நான் படித்ததில்லை.
பள்ளி பாடப்புத்தகங்கள், பொது நுாலகங்கள் என நான் படிக்க துவங்கினேன். நான், டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு எழுதலாம் என முடிவெடுத்தேன். 2012ல் எழுதிய என் முதல் போட்டி தேர்விலேயே டாப் ரேங்க் பெற்று, பள்ளிக் கல்வித் துறையில் ஜூனியர் அசிஸ்டென்டாக எங்கள் ஊர் அரசு பள்ளியில் வேலைக்கு சேர்ந்தேன்.
குடும்பத்தினருக்கு அதில் விருப்பமில்லை. ஏனெனில், குரூப் 1 தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் அவர்கள் விருப்பம்.
ஆனால், குடும்ப சூழல் காரணமாக நான் வேலைக்கு போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால், பணிக்கு சென்றபடியே, யு.பி.எஸ்.சி., - எஸ்.எஸ்.சி., - ஆர்.ஆர்.பி., உள்ளிட்ட தேர்வுகளையும் எழுதினேன்.
கடந்த 2015ல் தமிழ்நாடு வனத்துறை சீருடைப் பணியாளர்கள் தேர்வு கமிட்டி வாயிலாக, பெண் வனவர்களை தேர்வு செய்ய முடிவெடுத்தனர். அதில் எழுத்து, உடல் தகுதி, நேர்முகத் தேர்வு என அனைத்திலும் தேர்வாகி, பணியில் அமர்ந்தேன்.
அந்த வேலையில் இருந்தபடியே, மீண்டும் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு எழுதியதில், ஹிந்து அறநிலையத் துறையில் தணிக்கை ஆய்வாளர் பணி கிடைத்தது. அப்படியும் விடவில்லை; தொடர்ந்து குரூப் 1 தேர்வு எழுதி, தற்போது, தேனி மாவட்டத்தில் உதவி வனப்பாதுகாவலராக உள்ளேன்.
குரூப் 1 நேர்முகத் தேர்வு, 2024 ஜூன் 13ல் நடந்தது. ஜூன் 10ல் எனக்கு திருமணம் முடிந்திருந்தது. ஆனால், பல தேர்வுகளில் பங்கேற்ற அனுபவத்தால், மாநில அளவில், 2வது இடம் பெற்றேன். கணவரும், என் பெற்றோர் போன்றே, என் எதிர்கால இலக்குகளுக்கு என்னை ஊக்கப்படுத்தி வருகிறார்.
பணம் தேவையில்லை, நம் முயற்சி மட்டும் போதும்; அதுவே நமக்கான வெற்றியை தரும்!

