/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
நான் உயிருடன் இருப்பதே கிரிக்கெட்டுக்காக மட்டுமே!
/
நான் உயிருடன் இருப்பதே கிரிக்கெட்டுக்காக மட்டுமே!
PUBLISHED ON : ஜூலை 19, 2024 12:00 AM

பெட்ரோல் பங்க்கில் வேலை செய்தபடியே, தமிழக வீல்சேர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனான, திருவாரூர் மாவட்டம், சாமந்தான்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாதவன்: ஆரம்பத்தில் நான் தவழ்ந்துகிட்டே தான் இருப்பேன். பின், கையால் காலை தாங்கி நடக்க ஆரம்பித்தேன்; விடுதலை கிடைத்த மாதிரி இருந்தது. ஊரில் கிரிக்கெட் விளையாடும் போது, பசங்க என்னையும் சேர்த்துக் கொள்வர். உட்கார்ந்தபடியே பேட்டிங் பண்ணுவேன்; கீப்பிங் நிற்பேன்.
சிட்டிங் கிரிக்கெட் என ஒன்று உள்ளது. தேசிய அளவில் இதற்கு ஒரு அமைப்பு இருக்கிறது. ஸ்டேட், நேஷனல், இன்டர்நேஷனல் என மேட்ச் நடத்துவர். தமிழக டீமின் துணை கேப்டன் மணிகண்டன், 'பலர் உன் பேரை சொல்றாங்க; டிஸ்ட்ரிக்ட் டீமுக்கு வா' என கூப்பிட்டார். அவரிடமே பயிற்சி எடுத்து, விளையாட ஆரம்பித்தேன்.
இதற்கிடையில் எம்.ஏ., முடித்தேன். வீல்சேர் கிரிக்கெட்டுக்காக, துாத்துக்குடியில் பயிற்சி தந்தனர். நான் வீல்சேரில் ஏறியதில்லை; ஆனால் பழக்கினர். விழுந்து விழுந்து எழுந்தேன். அதில் இருந்தபடியே பேட்டிங், பவுலிங் பண்ணேன்.
சவாலாக இருந்தது. ஆனாலும் சீக்கிரமே பழகிவிட்டேன். பெரும்பாலும் 20 ஓவர் மேட்ச். நான் ஆல் ரவுண்டர். நிறைய விளையாடினேன். இரண்டு ஆண்டுகளிலேயே தமிழக டீமிற்கு தேர்வானேன். தற்போது, துணை கேப்டனாக இருக்கிறேன். இந்தியா முழுக்க விளையாடி இருக்கிறோம்.
நேஷனல் மேட்சாக இருந்தாலும் கூட, நாம் செலவு செய்து தான் போகணும். ஜெயிக்கிற டீமுக்கு, 30,000 முதல் 50,000 ரூபாய் வரை பரிசு தருவர்; அதை டீமில் உள்ள 15 பேருக்கும் பிரித்தால், 3,000 ரூபாய் வரை கிடைக்கும். ஜெயிக்கவில்லை எனில், எங்களை அழைத்து போவோரே போக்குவரத்து செலவு மட்டும் தருவர். எனக்கு 34 வயது ஆகிறது. இதுதான் சம்பாதித்த காசு என, 10 ரூபாய் கூட அப்பாவிடம் தந்ததில்லை.
பாவம் மனுஷன்... அவருக்கு வயது 64 ஆகிறது... ஆனாலும், அவர் தான் இன்று வரை செங்கல் துாக்கி குடும்பத்தை பார்த்துக் கொள்கிறார். எவ்வளவோ கஷ்டங்களுக்கு மத்தியிலும் என் கனவுக்கு எப்போதும் அவர் குறுக்கே நின்றதில்லை.
தற்போது, பெட்ரோல் பங்க்கில் வேலை பார்க்கிறேன். மாதத்தில் 15 நாட்கள் பிராக்டீஸ், மேட்ச் என விடுமுறை எடுத்து விடுவேன். ஆனால், கிரிக்கெட்டில் இருந்தால் நமக்கு யாரு பொண்ணு கொடுப்பா என்பதற்காகவே, இவ்வேலையை விடாமல் கெட்டியாக பிடித்திருக்கிறேன்.
'உனக்கெதற்கு கிரிக்கெட்' என, பலர் கேட்கலாம்... நான் உயிருடன் இருப்பதே கிரிக்கெட்டிற்காக தான். அது இல்லையெனில், நான் வாழ எந்த காரணமும் இல்லை.