/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
காத்திருந்தால் பிசினசில் சாதிக்கலாம்!
/
காத்திருந்தால் பிசினசில் சாதிக்கலாம்!
PUBLISHED ON : மார் 03, 2025 12:00 AM

பெண்களுக்கான, 'பியூட்டி சலுான்' மற்றும், 'பிட்னெஸ் ஸ்டூடியோ' நடத்தி வரும், திருச்சியைச் சேர்ந்த வனிதா: சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம், நன்னிலம். டி பார்ம்., மற்றும் பி.ஏ., சைக்காலஜி படித்த எனக்கு, 'மெடிக்கல்' துறையில் வேலை பார்க்க ஆசை. 2002ல் எனக்கு திருமணமானது.
அழகுக்கலையில் எனக்கு ஆர்வம் இருந்ததால், மூன்று மாத, 'பியூட்டீஷியன்' கோர்ஸ் முடித்தேன். அக்கம் பக்கம், உறவினர்கள், நண்பர்கள் என பலருக்கும், 'பியூட்டி சர்வீஸ்' செய்து வந்தேன்.
அவர்கள், 'உனக்கு இது நல்லா வருது; பார்லர் ஆரம்பித்து விடு' என்று சான்றிதழ் கொடுக்க, கணவரும் ஊக்கப்படுத்தினார்.
இந்த துறை சார்ந்து, 'அரோமா தெரபி' மற்றும் சரும பராமரிப்பு என இன்னும் சில பயிற்சிகளை முடித்தேன். அதனால், வீட்டு மாடியில், இரண்டரை லட்சம் ரூபாய் செலவு செய்து, 'பியூட்டி பார்லர்' வைத்து தந்தார் கணவர்.
திருச்சி மாவட்ட தொழில் மையத்தில் என் தொழிலை பதிவு செய்தேன். மூன்று ஆண்டுகளில், 60க்கும் மேற்பட்ட தொடர் வாடிக்கையாளர்கள் கிடைக்க, தொழில் ஸ்திரமானது; ஒரு ஊழியரையும் நியமித்தேன். இப்போது வரை, 350க்கும் அதிகமான பெண்களுக்கு பயிற்சி கொடுத்துஉள்ளேன்.
எங்கள் வீட்டுக்கு அருகில் பல, பெண்கள் கல்வி நிலையங்களும், பெண்கள் விடுதிகளும் இருந்ததால், துணிந்து பிசினசை விரிவுபடுத்தினேன்.
ஆனால், 2020 கொரோனா தொற்றால் தொழில் முடங்கியது. அப்போது ஆன்லைனில் பயிற்சிகள் எடுத்து, நடத்தி சமாளித்தேன்.
மேலும், பியூட்டி சர்வீசஸ், 'ரென்டல் ஆர்டிபியல் ஜுவல்லரி' என அனைத்திலும் 'அப்டேட்' செய்து கொண்டே இருந்ததால் வெற்றி பெற முடிந்தது.
தற்போது திருமண மேக்கப்புக்கு குறைந்தபட்சம், 6,000 ரூபாய் துவங்கி, 20,000 ரூபாய் வரை, 'சார்ஜ்' செய்கிறேன். இரண்டாவது மாடியில், 1 லட்சம் ரூபாய் முதலீட்டில் வாங்கப்பட்ட, 'பிட்னஸ் மிஷின்'களுடன், பிட்னெஸ் சென்டரும் நடத்தி வருகிறோம்.
தற்போது பெரம்பலுார், புதுகை, காரைக்குடி, சிவகங்கை என பல்வேறு ஊர்களுக்கும் சென்று, 'மேக்கப் சர்வீஸ்' செய்து வருகிறோம். நான்கு ஊழியர்கள் என்னிடம் பணி புரிகின்றனர்; ஆண்டுக்கு, 10 லட்சம் ரூபாய், 'டர்ன் ஓவர்' ஆகிறது.
பியூட்டி பார்லர் என்பது மிகவும் நல்ல, பிசினஸ். ஆனால், அதற்கான பயிற்சிகளை முடித்து விட்டு தொழிலை துவங்கி, பின், சில ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.
அதுவரை அதை கைவிட்டு விடாமல் தொடர்ந்து நடத்தவும், அதில் நம்மை, 'அப்டேட்' செய்து கொள்ளவும் வேண்டும். இந்த தொழிலுக்கு என்றில்லை, எல்லா தொழில்களுக்கும் இது பொருந்தும்!